புதுடில்லி,-‘வெப்ப அலை வீசத்துவங்கி உள்ளதால், நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நேற்று கூறியதாவது:குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் சத்தீஸ்கர் வரையிலான வடமேற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய பகுதிகளில், இந்த மாதம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதி, தெற்கு ஹரியானா, டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் வெப்ப அலைவீசத்துவங்கியுள்ளது தான் இதற்கு காரணம்.டில்லியிலும், கடந்த மாத இறுதி முதல் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பல இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 104 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. ஓரிரு நாட்களில், இது 109 டிகிரியாக உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.