டெல்லி : இந்திய தொழிலதிபரான கெளதம் அதானியின் அசுர வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி அவர் உலக பணக்காரரான வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தை பெற்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது கோடீஸ்வர தொழில் அதிபரான கௌதம் அதானி, அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார். இந்தியா மட்டுமல்லாது பன்னாட்டுத் தொழிலதிபதிரான இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பிறந்தவர். அவர் இந்தியாவில் ஆறு பொது வர்த்தக நிறுவனங்களுடன் ஒரு துறைமுகம் மற்றும் எரிசக்தி நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி அடுத்த இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.

வாரன் பஃபெட்டை மிஞ்சினார் இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கெளதம் அதானி உலக அளவில் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தை பெற்றுள்ளதாக ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது. போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலான டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த ஆண்டு வெளியிட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி கெளதம் அதானி அசுர வளர்ச்சியை தொடர்ந்து பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

சொத்து மதிப்பு உயர்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஊடகம், விமான நிலையங்கள் மற்றும் பலவற்றில் அதானி தீவிரமான விரிவாக்கத்திற்கு வழிவகுத்துள்ள நிலையில், அவரது ஒவ்வொரு நிறுவனத்தின் பங்குகளும் இந்த ஆண்டு 19% முதல் 195% வரை உயர்ந்துள்ளன. இந்த மாத தொடக்கத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசரின் சகோதரரால் நடத்தப்படும் அபுதாபியின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கோ அதானியின் மூன்று பசுமை ஆற்றல் சார்ந்த நிறுவனங்களில் $2 பில்லியன் முதலீடு செய்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் $70 பில்லியன் வரை முதலீடு செய்யும் இலக்குடன் இந்த நடவடிக்கை தொடங்கிய நிலையில் இது அவரது சொத்து மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *