அரசியல், தமிழ்நாடு

“அடிமடியில்” கை வைத்து.. சறுக்கிய “பொதுச்செயலாளர்” சசிகலா.. எடப்பாடியை விட பாஜக குஷி! அடுத்து என்ன?

சென்னை: இன்றைய தினம் அதிமுகவுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள சூழலில், அதன் தாக்கங்களும், விளைவுகளும், மாற்றங்களும் இனி எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில், கடந்த 8ம் தேதியே தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டிருந்தது.

நீதிபதி அதிரடி

ஆனால், நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது… மேலும், சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்றும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி

யாருக்கு தீர்ப்பு சாதகமாக வரும் என்று சசிகலா தரப்பினரும் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினரும் எதிர்நோக்கியிருந்த நிலையில், எடப்பாடி தரப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது.. யாருக்கு வெற்றி கிடைத்தாலும், அதிமுகவுக்குள் ஒரு அதிர்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அரசியல் நோக்கர்கள் கணித்து வந்தனர்.. அந்த வகையில், இன்றைய தீர்ப்பு எத்தகைய மாறுதல்களை கட்சிக்குள்ளும், சசிகலா தரப்புக்குள்ளும் ஏற்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வயிற்றில் நெருப்பு

முதலாவதாக, இதுநாள் வரையிலும் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த இன்னொரு சக்ஸஸ் ஆகும்.. அடிக்கடி டென்ஷனை ஏற்படுத்திவிடும், ஓபிஎஸ்ஸை பல வழிகளில் சமாளிக்க தெரிந்த எடப்பாடிக்கு, சசிகலாவின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் என்பதே உண்மை.. சசிகலாவின் சுற்றுப்பயணத்தையும் சரி, அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசுவதையும் சரி, எடப்பாடியால் ஒருமுடிவுக்கு கொண்டு வர முடியவில்லை..

பாலை வார்த்த தீர்ப்பு

இதற்காகவே ஒரு டீமை போட்டு, அதிருப்தியில் உள்ளவர்களை எல்லாம் சமாதானமும் செய்தார்.. யாரும் சசிகலாவை சென்று சந்தித்து விடக்கூடாது என்று மறைமுக உத்தரவும் போட்டிருந்தார்.. அப்படியிருந்தும் அதில் தோல்விதான் ஏற்பட்டு வந்தது.. ஆனால், இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியின் வயிற்றில் பாலைவார்த்துவிட்டது என்றே சொல்லலாம்.. மிகப்பெரிய நிம்மதி உணர்வு இதனால் ஏற்பட்டுள்ளதுடன், கட்சியை தன் கைப்பிடிக்குள் இறுக்கமாக வைத்து கொண்டுள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கப்சிப் – ஓபிஎஸ்

இரண்டாவதாக, ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, இனி மொத்தமாக சைலண்ட் ஆக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.. சசிகலாவின் எழுச்சியை காரணம் காட்டிதான், அடிக்கடி ரகசிய கூட்டங்களை போட்டும், தம்பியை, மகனை தூது அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியும், எடப்பாடிக்கு பி.பி-யை எகிற வைத்து கொண்டிருந்தார்.. ஆனால், சசிகலா எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில், இனிமேல் எடப்பாடி பழனிசாமியை பகைத்து கொண்டு எதையும் செய்ய முடியாத நிர்ப்பந்தத்துக்கு ஓபிஎஸ் ஆளாகி உள்ளார்.. ஓபிஎஸ் விஷயத்திலும் எடப்பாடிக்கே சக்சஸ் கிடைத்துள்ளது.

டிடிவி தினகரன்

மூன்றாவதாக, தினகரனை பொறுத்தவரை, இந்த தீர்ப்பை அவரும் ஆவலாக எதிர்நோக்கி இருந்தார்.. 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பிலும், தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்றுதான் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. அதேபோல, அதிமுகவை கைப்பற்றும் விஷயத்திலும், தலைவர்களின் முடிவுகளுக்காக வெயிட்டிங் என்றுதான் கூறியிருந்தார்.. இப்போது அதிமுகவில் சசிகலாவின் பதவி இல்லாத நிலைமையில், தினகரனுக்கு இது மைனஸ்தான்..

பிளஸ் பாயிண்ட்

அதேசமயம், அமமுக என்ற கட்சியை ஆரம்பித்ததும் தினகரனுக்கு இந்த நேரத்தில் பிளஸ் பாயிண்ட்டாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சசிகலாவை அமமுகவில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கி அதில் தோல்வியை சந்தித்த நிலையில், இன்று அதற்கான சூழலும் கனிந்து வந்துள்ளது.. இனிமேல், சசிகலாவை சமாதானப்படுத்தி, மீண்டும் அமமுகவின் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாக்கில் சசிகலா

நான்காவதாக, சசிகலாவை பொறுத்தவரை, இந்த தீர்ப்பு மற்றொரு பலத்த அடி என்றே சொல்லலாம்.. காரணம், தான் தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று சொன்னதுடன், பொதுச்செயலாளர் லெட்டர் பேடு மூலம்தான் அறிக்கைகளை வெளியிட்டு வந்தார் சசிகலா.. இனி அப்படி பயன்படுத்த முடியாது.. “அதிமுக உறுப்பினராகக்கூட இல்லாத சசிகலா, கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தன்னை அதிமுக-வின் பொதுச் செயலாளர் என்று கூறுவதைத் தடுக்கும் வகையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலீசில் ஜெயக்குமார் புகார் தந்திருந்தார்.. இப்போது இந்த வார்த்தையையும், லெட்டர்பேடையும் சசிகலா பயன்படுத்த முடியாது.

எடப்பாடி சமாதானம் ஆவாரா?

அதேபோல, நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியதையடுத்து, என்ன முடிவு எடுக்க போகிறார் என்றும் தெரியவில்லை.. கோர்ட் தீர்ப்பு பாதகமாகவே வந்தாலும்கூட, எடப்பாடியை சமாதானப்படுத்தும் முயற்சியை சசிகலா கைவிடப்போவதில்லை என்று கடந்த 2 நாட்களாகவே செய்திகள் பரபரத்து கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, தன்னுடைய தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் இடையே ஒருங்கிணைக்கும் பணிகளை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியிலும் சசிகலா இறங்கி உள்ளாராம்.

ரகசிய சந்திப்புகள்

கோர்ட், கேஸ், அப்பீல் என்று போகாமல், எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்துவதே ஒரே வழி என்ற முடிவுக்கும் சசிகலா வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சசிகலாவை நம்பி சென்றவர்கள், மற்றும் கட்சி கட்டுப்பாட்டை மீறி சசிகலாவை ரகசியமாக சந்தித்தவர்கள், கட்சியில் இருந்து விலக்க வைக்கப்பட்டவர்கள், சசிகலாவின் ஆதரவாளர்கள், இவர்கள் எல்லாம் என்ன ஆவார்கள்? இனி என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார்கள் என்று தெரியவில்லை..

பாஜக மகிழ்ச்சி

இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த தீர்ப்பு ஒரு வகையில் தமிழக பாஜகவிற்கு பாசிட்டிவ் சிக்னல்தான். அவர்கள் முகத்தில் புன்னகை தவழும் என்று எதிர்பார்க்கலாம். பாஜகவைச் சேர்ந்த சில இரண்டாம் கட்ட நிர்வாகிகள், திமுகவிற்கு பாஜகதான் போட்டி. உண்மையான எதிர்க்கட்சி என்றெல்லாம் பொது வெளியில் கருத்து கூறி வருகிறார்கள். திமுக அரசுக்கு எதிராக எடப்பாடியைவிட அண்ணாமலை அதிக ஆவேசமாக செயல்படுவது போன்ற தோற்றம் உள்ளது இதற்கு காரணம். சசிகலா அதிமுகவில் வராவிட்டால் கண்டிப்பாக அது பாஜகவுக்கு இந்த வகையில் பலன்தரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எடப்பாடி பழனிசாமி

அன்று ஜானகி அணி பிரிந்தபோதும் சரி, ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவை அடைய முயன்றபோதும் சரி, பலவித போராட்டங்களை சந்தித்தும், சூழ்ச்சிகளை களைந்தும், அதிமுகவை மீட்டபோது ஜெயலலிதாவுடன் பக்கபலமாக இருந்தும் வந்தவர் சசிகலா.. அதனால்தான் எப்படியும் அதிமுகவை இவர் விட்டுத்தர மாட்டார், ஏதாவது அதிரடிகளை செய்து, கட்சியை கைப்பற்றிவிடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்..

லாபி

எனினும், 30 வருடம் ஜெ.விடம் லாபி செய்து கொண்டிருந்த சசிகலாவுக்கு சமீபகாலமாகவே, சறுக்கல்கள் தொடங்கி உள்ள நிலையில், எடப்பாடியின் ஆளுமை விஸ்வரூபம் எடுத்துள்ளது கவனிக்கத்தக்க விஷயமாகும்.. இன்றைய தீர்ப்பின் முடிவுகளும், அதன் தாக்கங்களும் என்ன மாதிரியான விளைவுகளை அதிமுக கூடாரத்தில் ஏற்படுத்த போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *