உலகம்

அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால் வடகொரியாவுக்கு ஆதரவளிக்க தயார் : தென்கொரியாவின் புதிய அதிபர் அறிவிப்பு

தென் கொரியாவின் புதிய அதிபராக யூன் சுக் இயோல் பதவியேற்கும் விழா நேற்று நடைபெற்றது.

நாட்டின் உயர்மட்ட வழக்கறிஞராக இருந்தவரான யூன் சுக் இயோல், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குறுகிய வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் பேசிய புதிய அதிபர் யூன் சுக் இயோல் வடகொரியாவுக்கு ஆதரவு அளிக்க தயார் எனக் குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது,

வடகொரியாவின் ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தலாக உள்ளன. அணு ஆயுதங்களை முழுவதுமாக வடகொரியா கைவிட வேண்டும். அப்படி செய்தால் வடகொரியாவுக்கு ஆதரவு அளிப்போம். மேலும், வடகொரியாவின் பொருளாதாரத்தை பெரிதும் வலுப்படுத்தும் துணிச்சலான திட்டத்தை முன்வைக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அதன்மூலம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்றார்.

அதே வேளையில், வடகொரியா தாக்குதலுக்கு முற்பட்டால், தேவைப்பட்டால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டலும் விடுத்தார்.

தென் கொரியா வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு சவால்களை கடுமையாக எதிர்கொண்டு வருகிறது.ஒருபுறம் வடகொரியா புதிய ஆயுதங்களை சோதித்து வருகிறது. மற்றொரு பக்கம் தென் கொரியாவில் கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பணவீக்கம். புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அவர் முன் இந்த இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *