அரசியல், கட்டுரை, சட்டம், சிந்தனைக் களம், தமிழ்நாடு, போராட்டம்

அன்புள்ள அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக… சீன் போதும்… பேரம் பேசுங்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது, மத்திய அரசுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பிரதமர் மோடி இதைப் பயன்படுத்திக்கொள்வார் என்றே தோன்றியது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சொன்னபோது, ஏமாற்றமாக இருந்தது. இந்த வாதம் சட்டப்படி சரியாக இருக்கலாம்; அறம் சார்ந்தோ, தேச நலன் சார்ந்தோ நிற்காது. நெருக்கடிகள் துணிச்சலாகச் செயல்படுவதற்கான தருணங்களை நமக்கு உருவாக்கி வழங்குகின்றன. மாறாக, பொறுப்புகளைத் தள்ளிப்போட்டு, தப்பித்தோடும் உத்தியையே நாம் பெரிதும் தேர்ந்தெடுக்கிறோம்.

அரசு சொல்வதுபோல, நாடாளுமன்றம் கூடி எடுக்க வேண்டிய முடிவாகவே இருக்கட்டும்; யார் முன்னின்று நாடாளுமன்றத்தைக் கூட்டுவது? அந்த முடிவை எடுப்பதற்கான செயல்திட்டம் என்ன? அதற்கான காலக்கெடு என்ன? இதுபற்றி எப்போது மோடி அரசு பேசும்? காவிரியில் நீதி கேட்டு தமிழகம் நீதிமன்றப் படியேறி அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. இறுதித் தீர்ப்பு வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எவ்வளவு காலம் தமிழகம் காத்திருக்க வேண்டும்?

இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டும் அல்ல, நாட்டின் பல மாநிலங்கள் இன்றைக்கு அண்டை மாநிலங்களோடு நதிகளைப் பகிர்ந்துகொள்கின்றன. வறட்சிக் காலத்தில் நீர்ப் பங்கீட்டில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அதிகரிக்கும் தண்ணீர் தேவையும் நீராதாரங்களின் அழிவும் மாநிலங்கள் இடையேயான உறவைச் சீரழிக்கின்றன. எதிர்காலத்தில் இந்திய ஒன்றியம் எதிர்கொள்ளும் பெரிய தலைவலிகளில் ஒன்றாக நதிநீர்ப் பகிர்வு இருக்கும். நதிகள் தேசியமயமாக்கம், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் பாயும் ஆற்றின் அணைகளை மத்திய அரசின் நிர்வாகத்தில் கொண்டுவருவது தொடர்பாக நீண்ட காலமாகப் பேசிவருகிறோம். இன்னும் அடியெடுத்து வைக்கும் துணிச்சல் நமக்கு வரவில்லை. திசையும் புரியவில்லை.

எல்லா மாநிலங்களையும் சம தூரத்தில் வைத்து அணுகவும், நதிநீர்ப் பகிர்வில் அந்தந்த மாநிலங்களுக்குரிய நியாயங்களை உறுதிசெய்யவுமான முன்னுதாரணத் தீர்வுக்கான வாய்ப்பை மத்திய ஆட்சியாளர்களுக்கு காவிரி வழங்குகிறது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கான முன்மாதிரி வடிவமாகச் சரியாகவே ‘பக்ரா – பியாஸ் மேலாண்மை வாரிய’த்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இமாச்சலப் பிரதேசம் தொடங்கி டெல்லி, சண்டிகர், ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப் வரை ஏழு மாநிலங்களுக்கு நீரைப் பகிர்ந்தளிக்கும் இந்த ஆணையம், சுதந்திர இந்தியாவில் நதிநீர் மேலாண்மைக்கான வெற்றிகரமான முன்மாதிரி. எனினும், சட்லஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளை உள்ளடக்கிய இத்திட்டத்தைப் பொதுமையான உதாரணமாகச் சொல்ல முடியாது. மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒரு நதியைப் பகிர்ந்துகொள்ளும் பொதுவான அம்சத்தைக் கொண்டது காவிரி. ’பக்ரா – பியாஸ் உத்தி’யைக் கையாண்டு, காவிரிக்கான மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தால், நாளை நாட்டின் பெரும்பான்மை நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர காவிரி மேலாண்மை வாரியத்தை ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தலாம். மேலும், நதிகள் தேசியமயமாக்கத்தை நோக்கி எடுத்துவைக்கும் பெரும் நகர்வாகவும் இது அமையும்.

துரதிர்ஷ்டவசமாக, குறுகிய காலத் தேர்தல் லாபங்களுக்காகத் தமிழகத்தை மேலும் வதைக்கும் முடிவை பாஜக அரசு எடுத்திருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் மீது கொட்டப்படும் தீ இது. ஒரு மாநிலத்தின் ஜீவாதாரப் பிரச்சினையில் இப்படி அடி விழும்போது, அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எப்படி ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதை கர்நாடக அரசியல்வாதிகளைப் பார்த்து, நம்மவர்கள் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்தே ஆக வேண்டும்; இல்லாவிட்டால், உச்ச நீதிமன்ற அவமதிப்பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனும் சூழல் உருவானபோது, கர்நாடக அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி எடுத்த முடிவு என்ன? “ஆட்சியே போனாலும் சரி; மாநில நலன்சார் முடிவில் அரசு உறுதியாக நிற்கட்டும்; அரசின் பின் எல்லாக் கட்சிகளும் அணிவகுத்து நிற்கும். வெறுமனே சட்ட மன்றத்தில் மட்டுமல்ல; நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒரே நேர்க்கோட்டில் நிற்பார்கள். ஒருவேளை கர்நாடக அரசு கலைக்கப்பட்டால், கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த முடிவை எடுப்பார்கள்.”

இந்தப் பேச்சுகள் வெறும் சவடால்கள் அல்ல. அரசியல் என்பது அடிப்படையில் பேரம். ஒட்டுமொத்த மாநிலமும் இப்படி ஒரு பிரச்சினையில் ஒருமித்து நின்றால், யார்தான் என்ன செய்ய முடியும்? ஏனைய அமைப்புகள்தான் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் வரும்.

தமிழகச் சூழல் இழிவு!

மாநிலத்தின் 39 தொகுதிகளில் 37 தொகுதி களுடன் மக்களவையில் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உட்கார்ந்திருக்கும் அதிமுகவின் உறுப்பினர்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு, நாடாளு மன்ற வளாகத்தில் பேரணி நடத்துகிறார்கள். 47 பேர் நடப்பது பேரணி! குறைந்தபட்சம் தமிழகத்தைச் சேர்ந்த எல்லாக் கட்சி உறுப்பினர்களும் கை கோத்து நடந்திருந்தாலாவது ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும். கேலிக்கூத்து! அடுத்த கேலிக்கூத்து, தஞ்சாவூரில் நடக்கவிருக்கிறது. திமுக நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டம். யாரையாவது கேட்டுச் சொல்லுங்கள், இவையெல்லாம் மத்திய ஆட்சியாளர்களை என்ன செய்துவிடுமாம்? யாரிடம் மார்தட்ட இந்தக் கூத்துகள்?

தமிழ்நாட்டில் இருக்கும் தேசியக் கட்சிகள் மேலதிகச் சாபம். பிரச்சினை இவ்வளவு தீப்பற்றி எரி கிறது. காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும், பாஜக தலைவர் தமிழிசைக்கும் இங்கே என்ன வேலை? இந்நேரம் இவர்கள் டெல்லியில் அல்லவா இருக்க வேண்டும்! எந்த மாநிலத்தில் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை இருக்கிறதோ, அந்த மாநில மக்களின் உயிராதாரப் பிரச்சினையில் கூட இவர்களால் தர்மத்தின் பக்கம் நிற்க முடியாது; டெல்லி ராஜாக்களின் கூஜாக்களாகப் பேசுவார்கள் என்றால், இந்தக் கட்சிகளால் இந்த மாநிலத்துக்கு என்ன பிரயோஜனம்?

டெல்லியில் 10 நாட்கள் தங்கி, ஒரு அரசையே வீட்டுக்கு அனுப்பியவர்களுக்கும் குடும்பத்தோடு போய் உட்கார்ந்து, தனக்கு வேண்டிய அமைச்சரவையை வாங்கி வந்தவர்களுக்கும் கட்சியில் தனக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால், அதிகாரப் பீடங்களை எங்கிருந்து தட்ட வேண்டும் என்பதையெல்லாம் அறிந்தவர்களுக்கு காவிரி விவகாரத்தில் எந்த மொழியில் பேசினால், டெல்லிக்குப் புரியும் என்று தெரியாதா?

தமிழக அரசியல்வாதிகளுக்கு உண்மையி லேயே காவிரி விவகாரத்திலும் தமிழக விவசாயிகளிடத்திலும் அக்கறை இருந்தால், முதலில் டெல்லியைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்க வேண்டும். பிரம்மாண்டப் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் இங்கே அல்ல; அங்கே நடத்த வேண்டும். பெரு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் முன்மொழியும் நிதிக் கொள்கைகள் தேசிய விவகாரங்களாக உருமாற்றப்பட்டு காரியமாகும்போது, மாநிலங் களின் உரிமையின்பாற்பட்ட விவகாரங்களை மட்டும் தேசியக் கட்சிகள் எப்படி அலட்சியமாகக் கையாள முடியும் என்று கேள்வி கேட்க வேண்டும். தமிழக விவசாயிகளின் அவல நிலையை கர்நாடக மக்களிடம் குடிமைச் சமூகங்கள் இடையேயான உரையாடல்வழி கொண்டுசெல்ல வேண்டும். தேசிய அளவில் இதை விவாதமாக்க ராஜாங்கரீதியில் ஏனைய மாநிலங்களிடமும் ஊடகங்கள், கருத்துருவாக்கத் தளங்கள் மத்தியிலும் பேச வேண்டும். “இது தமிழகத்தின் இன்றைய பிரச்சினை மட்டும் அல்ல; நாளைய இந்தியாவின் பிரச்சினை” என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்!

– தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *