அரசியல், உலகம், சிந்தனைக் களம், தேர்தல்

அமெரிக்காவின் வாக்கு எண்ணிக்கை: இந்தியாவுக்குச் சொல்லும் பாடம்!


அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவாகியிருக்கும் அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கையானது உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியாவுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்கிறது. அமெரிக்காவில் வழக்கத்தைக் காட்டிலும் இந்த முறை இரண்டு மடங்கு அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. கரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தவிர்ப்பதற்காகத் அஞ்சல் வழியாக வாக்குகள் அளிப்பதை ஊக்குவித்ததால், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதனாலேயே, வெற்றிபெற்ற ஜோ பைடன் மட்டுமின்றி, தோல்வியடைந்திருக்கும் ட்ரம்ப்பும்கூட இதற்கு முன்பு மொத்த வாக்குகளில் அதிக எண்ணிக்கையைப் பெற்ற பாரக் ஒபாமாவின் சாதனையை முறியடித்திருக்கிறார்கள். ஆக, அமெரிக்காவின் இந்தத் தேர்தல் அணுகுமுறையிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிக்கு வர இயலாதவர்கள் அனைவருக்குமே அஞ்சல் வாக்குகளின் வழியாகத் தங்களது வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே.

இந்தியாவில் பத்துக் கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர்களும், உயர்கல்வி பயிலும் மாணவர்களும் தேர்தலுக்காக ஊருக்குத் திரும்புவது சாத்தியமில்லாத நிலையில், அவர்களும் அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தியாக வேண்டும். இதுவரையில் பெரும்பாலும் தேர்தல் பணி அலுவலர்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் மட்டுமே அஞ்சல் வாக்குகள் அனுமதிக்கப்பட்டுவருகின்றன. மருத்துவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அஞ்சல் வழியாக வாக்களிக்கும் வகையில் 2019 அக்டோபரில் தேர்தல் விதிமுறைகள் திருத்தப்பட்டிருக்கின்றன என்றாலும் மூத்த குடிமக்களுக்கான அஞ்சல் வாக்கு 80 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை 23 லட்சம். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இது 0.4% மட்டுமே. ஆனால், அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில் 6.55 கோடி வாக்காளர்கள் அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 41.22%. பெருந்தொற்று அபாயம் இல்லாத காலங்களிலும் அமெரிக்கா அஞ்சல் வாக்குகளுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்தே வந்திருக்கிறது. அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் வாக்குரிமை உள்ள ஒவ்வொரு குடிநபரின் கருத்தும் அவசியம் என்பதே அந்த முக்கியத்துவத்தின் அடிப்படை. அதனாலேயே, அஞ்சல் மூலமாக வாக்குகள் அளித்தவர்கள் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்ற விவரத்தைத் தெரிந்துகொள்ளவும், கையெழுத்து பொருந்தவில்லை என்பது போன்ற காரணங்களுக்காக வாக்கு ஏற்றுக்கொள்ளப்படாதபோது அதைச் சரிசெய்துகொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

அமெரிக்காவைப் போன்று இந்தியாவில் தேர்தல் குழு என்ற நடைமுறை இல்லாததால், ஒருவேளை தாமதம் தவிர்க்கப்படலாம். ஆனால், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் அவசியம் குறித்து விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்ற உண்மையையும் தவிர்த்துவிட முடியாது. அதற்கு முன்னதாக, உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்களில் அனைவருக்கும் அஞ்சல் வாக்குகளை அனுமதிப்பதும் ஒன்றாக இருக்கட்டும்.

SOURCE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *