இந்தியா, சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்

அர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி


உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவருக்குத் தனது பிறந்தநாளைக் கொண்டாட, அவரிடமும் அவரது சக நீதிபதிகளிடமும் ஒப்பளிக்கப்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்டக் கடமையை ஆற்றுவதைக் காட்டிலும் வேறு சிறந்த வழியிருக்க முடியாது. ‘உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றம்… அரசமைப்புச் சட்ட நீதிமன்றமே சட்டத்தைச் செயல்படுத்தித் தனிமனித உரிமையைப் பாதுகாக்காவிட்டால், வேறு யார்தான் அதைச் செய்வார்கள்?’ என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் என்று தனது கருத்தைத் தெரிவித்தபோது அந்தக் கடமையை மிகச் சரியாகச் செய்துவிட்டார். நாட்டில் அடிப்படை மனித சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் வல்லமையைச் சந்தேகிப்பவர்களுக்கு அவரது கருத்து பதிலாக அமைந்தது.

ஓர் அதிவிரைவு விசாரணை
மிகவும் நீண்ட காலத்துக்குப் பிறகு, நீதிமன்றம் இது விஷயமாக சில சுயபுரிதல்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்ட சூழலானது, அதன் மதிப்பைப் பெரிதும் குறைத்துவிட்டது. தொலைக்காட்சித் தொகுப்பாளரான அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்காலப் பிணை வழங்குவதாக முடிவெடுத்த விசாரணையின்போது இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது. இவ்விஷயமாக, மனு தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளிலேயே அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 226-ன் கீழ் பிணை வழங்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியும், கீழமை நீதிமன்றத்தை அணுகிப் பொருத்தமான நிவாரணங்களைப் பெறலாம் என்று கூறியும் அர்னாபின் ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்த மும்பை உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு சட்டப்படியானதே. அதையடுத்து, வழக்கத்துக்கு மாறான வகையில், ஒரே நேரத்தில் விசாரணை நீதிமன்றத்திலும் (மாவட்ட அமர்வு நீதிமன்றம்) உச்ச நீதிமன்றத்திலும் அர்னாப் நிவாரணம் தேடினார். குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கீழமை நீதிமன்றத்திலும் மேலமை நீதிமன்றங்களிலும் ஒரே நேரத்தில் இப்படி அணுகியிருப்பது முதல் தடவை என்பதோடு இது விவாதத்துக்கும் உரியது.

இந்நாட்டின் சாதாரணக் குடிமக்கள் கனவிலும்கூட நினைத்துப் பார்க்க முடியாத வகையில், சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி, அர்னாபுக்குத் தனி மரியாதையை வழங்கும் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவே இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். அலிபாக் அமர்வு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட முதலாவது மனுவில் தொடங்கி மும்பை உயர் நீதிமன்றத்திலும், அதன் பின்பு உச்ச நீதிமன்றத்திலும் அளிக்கப்பட்ட மனுக்கள் வரையில் அனைத்து சட்டபூர்வமான முயற்சிகளும் மொத்தமாக ஏழே நாட்களுக்குள் முடிவுக்குள் வந்துவிட்டன. அர்னாபின் மனு மீது காட்டப்பட்ட இந்த அசாதாரண வேகமே அதைக் குறிப்பிடத்தக்க ஒன்றாகவும் மாற்றியிருக்கிறது. அவரது மனுவில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு (குறைந்தபட்சம் ஒன்பது) குறைபாடுள்ள மனுக்களின் பட்டியலில் அது இடம்பெற்றிருந்தபோதிலும் மனுவை ஏற்றுக்கொண்ட அடுத்த நாளிலேயே அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது பலரையும் ஆச்சரியத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. இத்தகைய அவகாசம் ஒவ்வொரு குடிநபருக்கும் வழங்கப்பட்டால், நீதித் துறை அமைப்பின் மீதான அவநம்பிக்கைகள் குறைந்து மிகவும் நல்லெண்ணம் கொண்டதாகப் பார்க்கப்படும்.

இந்த நாட்டில் அதிகாரமும் செல்வாக்கும் உங்களுக்கு என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்று பாடம் கற்றுக்கொடுக்கும் உதாரணமாக இந்த வழக்கு இப்போது மாறியிருக்கிறது. ‘செய்தியறையில் உரத்து ஒலிக்கும் குரலால்’ தன்னுடைய அடிப்படைகளை மறைத்துக்கொள்கிறார் அர்னாப். அவரது கைது அரசுச் செயலகக் கட்டிடங்களின் நடைக்கூடங்களில் உடனடியாக ஒரு பதற்றத்தை உருவாக்கியிருப்பதோடு, வழக்கத்துக்கு மாறாக ‘கருத்துச் சுதந்திர’த்தைப் பாதுகாக்கவும் செய்திருக்கிறது.

நிர்வாகத் துறையின் செயல்பாடுகள்

கடந்த சில ஆண்டுகளில் நீதித் துறையின் செயல்பாடுகள் மோசமடைந்து அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. தனிநபர் சுதந்திரத்தை அரசு மிக மோசமாகச் சிதைத்திருக்கிறது, இதை நீதிமன்றங்கள், குறிப்பாக உச்ச நீதிமன்றம் தக்க முறையில் கண்டிக்கத் தவறியது வருந்தத்தக்கது. கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, அதைக் குறித்து எதுவும் பேசவில்லை.

மீண்டும் அதுவேதான் நடந்தது. டெல்லி கலவரங்களையடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மோசமான முறையில் கைதுசெய்யப்பட்டது; அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் முரணான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் நடத்தப்பட்ட விதம்; பீமா-கோரேகான் வன்முறைக்குக் காரணமாக மூத்த அறிவுஜீவிகளும் சமூக நீதித் தலைவர்களும் குற்றஞ்சாட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டது; காஷ்மீரில் அரசியல் கைதிகள் மிகவும் அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்பட்டது… வருத்தம்கொள்ளச்செய்யும் இந்தப் பட்டியல் இன்னும் முடிவின்றி நீண்டுகொண்டே இருக்கிறது.

மிகவும் சமீபத்தில் 83 வயதான ஜேசு சபை பாதிரியாரும் பழங்குடியினர் உரிமைகளுக்கான தலைவருமான ஸ்டான் சுவாமி, பீமா கோரேகானுடன் தொடர்புபடுத்திக் கைதுசெய்யப்பட்டார். நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர், சிறைச்சாலையில் தனக்கு உறிஞ்சுகுழல் வைத்த தண்ணீர்க் குவளை வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மனிதநேய அடிப்படையில் உடனடியாக அவருக்கு அதைச் செய்து கொடுக்காமல், தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றமானது அரசுத் தரப்பு பதிலளிப்பதற்காக இரண்டு வார அவகாசம் அளித்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில், ஹாத்ரஸில் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கெனவே மனு ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டகேரளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், ‘பீப்பிள் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்தவருமான சித்திக் கப்பன், உத்தர பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாகச் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.அவரைக் கீழமை நீதிமன்றத்தை அணுகச் சொன்னது உச்ச நீதிமன்றம். அர்னாபை நடத்தியது போன்று தங்களையும் நடத்த வேண்டும் என்றும் நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா என்றும் அந்தப் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை மீண்டும் நாடிய பிறகு, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை எடுத்துக்கொள்வதாகக் கூறியது.

தரம் தாழும் தனிநபர் சுதந்திரம்

நீதிபதி சந்திரசூட் நாவன்மையுடனும் உணர்வுபூர்வமாகவும் நீதிமன்றத்தில் என்ன கூறியிருந்தபோதிலும், இன்றைய இந்திய சட்டநெறிகளின் பின்னணியில் தனிநபர் சுதந்திரம் என்பது தரம் தாழ்ந்து நிற்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துடன் தொடர்புடைய பத்து வழக்குகளைக் குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய ஆய்வில், அரசும் மனுதாரரும் உடன்பாட்டுக்கு வந்தபோது மட்டுமே நிவாரணம் கிடைத்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. அரசு ஆட்சேபனைகளைத் தெரிவித்தபோது, நிவாரணங்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன.

ஏதோவொரு வகையில் இந்த வழக்கு தனிநபர் சுதந்திரத்துடன் தொடர்புடையது, அடுத்த நாளே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உடனடியாகத் தீர்க்கப்பட்டிருக்கிறது என்பது போன்று நீதிபதி சந்திரசூட்டின் கருத்துகள் இயல்பான ஒன்றாக இருந்திருந்தால், இந்தக் கட்டுரையே எழுதப்பட்டிருக்க மாட்டாது. அவரது கருத்துகள் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக அமைந்திருக்கின்றன: தனிநபர் சுதந்திரத்தைக் குறித்து சிந்திக்கவும் பேசவும் உச்ச நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது இருக்கிறார் என்று நம்பிக்கையளிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி குறைந்தபட்சம் செய்தாக வேண்டியதுதான் இது. பாதுகாவலரின் இந்த எச்சரிக்கை, மெதுமெதுவாகச் செயல்பாட்டுக்கும் வருமா?

– அஜித் பிரகாஷ் ஷா, சென்னை, டெல்லி உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி, இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர்

SOURCE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *