சீனாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏராளமான நகரங்களில் பரவல் அதிகரித்துள்ளதால், லாக்டவுனில் 37.30 கோடி மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.
ஒரு கோடி பேர்
அதிலும் குறிப்பாக வர்த்தக நகரான ஷாங்காயில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இன்னும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வீட்டில் லாக்டவுனில் முடங்கியுள்ளனர்.
தினசரி 20 ஆயிரம்
பிப்ரவரி மாதக் கடைசியில் சீனாவில் கொரோனா அலைத் தொடங்கியது. முதலில் ஷென்ஜென் மாகாணத்தில் தொடங்கி அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியது. ஷென்ஜென் நகரம் வெற்றிகரமாக கொரோனாவைக் கட்டுப்படுத்தி, மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்தது. ஆனால், மற்ற நகரங்களில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. தினசரி புதிதாக ஆயிரணக்கனோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் ஷாங்காய் நகரி்ல தினசரி 20ஆயிரம்பேர் கொரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள்.
2வார லாக்டவுன்
இதனால் ஷாங்காய் நகரம் கடந்த 2 வாரங்களாக லாக்டவுனில் அடைபட்டுக் கிடக்கிறது, இதனால் மக்கள் இரு வாரங்களாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சீனா முழுவதும் ஏறக்குறைய 37 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா பரவலால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் சிக்கியுள்ளனர். இது ஏறக்குறையின் கால்பகுதி மக்கள்தொகைக்கு இணையானது என்று நோமுரா பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி பாதிப்பு
உலகிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவில், லாக்டவுன் நடவடிக்கையால் நுகர்வு, தொழில்துறை உற்பத்தி, சப்ளை என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது இன்னும் லாக்டவுன் தொடர்ந்தால் பொருளாதாரத்துக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால் இந்த வாரத் தொடக்கத்தில் அதிபர் ஜி ஜின்பிங் அளித்த பேட்டியில் “ சீனாவில் கொரோனாவே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துங்கள்”எ னத் தெரிவித்தார்.
இதனால் ஷாங்காய் நகரின் அருகே இருக்கு ஷூகுவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது இதனால் இந்த நகர் முழுவதும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நகரில்தான் ஆப்பிள் போன் அசெம்பிள் செய்யும் பெகாட்ரான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. அனைத்தும் லாக்டவுனால் உற்பத்தியைத் தொடங்க முடியாமல் மூடியுள்ளன
இதேபோல ஷான்ஸி மகாணத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து 6 மாவட்டங்களுக்கு லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது, ஏறக்குரைய 53 லட்சம் மக்கள் ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.