அரசியல்

ஆள் பிடிக்கும் பா.ஜ

2014 ல் பா.ஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பலவீனமான மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது. அதில் முக்கியமான ஒன்று காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை பா.ஜவில் இணைப்பது. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங். ராஜிவ்காந்தியின் நண்பர், கேப்டன் என்று அழைக்கப்படுபவர் அமரீந்தர்சிங். பஞ்சாப் மாநிலத்தில் 2002 முதல் 2007 வரையிலும், 2017 மார்ச் முதல் 2021 செப்டம்பர் வரையிலும் காங்கிரஸ் முதல்வராக இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த சித்துவுக்கும், அவருக்கும் ஏற்பட்ட மோதலில் வெளியேறிய அமரீந்தர்சிங் இன்று பா.ஜ பக்கம் கரைசேர்ந்து இருக்கிறார். அவரது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பா.ஜவோடு இணைத்து இருக்கிறார். அமரீந்தர் வரிசையில் ஏராளமான முன்னாள் முதல்வர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் வளைத்து பிடித்துதான் இன்று பா.ஜ பலம் பொருந்தியதாக மாறி இருக்கிறது. கா்நாடகாவில் காங்கிரசின் முகமாக அறியப்பட்டவர் எஸ்எம் கிருஷ்ணா. 1999 முதல் 2004 வரை அங்கு முதல்வராக இருந்தவர்.

அதன்பின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சராகவும், கவர்னராகவும் காங்கிரசால் பதவி வகித்தவர். திடீரென 2017 மார்ச் மாதம் பா.ஜ பக்கம் தாவினார். உத்தரகாண்ட் மாநிலத்தின் 6வது முதல்வர் விஜய் பகுகுணா. 2013 வெள்ளத்தை சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டால் பதவி விலகிய கையோடு பா.ஜவில் இணைந்துவிட்டார். ஒய்எஸ் ராஜசேகரரெட்டி மறைவால் ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வராக இருந்தவர் கிரண் ரெட்டி. தனது பதவிக்காலம் முடிந்த கையோடு பா.ஜவில் ஐக்கியமாகி விட்டார். உத்தரபிரதேசத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் என்டி திவாரி, 1976-77, 1984-85, 1988-89 ஆகிய ஆண்டுகளில் 3 முறை உபி முதல்வராக இருந்தவர், 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் முதல்வராக இருந்தவர் 2017ல் பா.ஜ பக்கம் சாய்ந்து விட்டார்.

அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு 2016 செப்டம்பர் மாதம் 43 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அப்படியே பா.ஜ பக்கம் இணைந்து முதல்வராகி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். மணிப்பூர் முதல்வராக இருந்த இபோபி சிங்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பைரன்சிங் 2016 அக்டோபரில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்த அவர் 2017ல் மணிப்பூர் முதல்வராக பதவி ஏற்றார். கோவா மாநிலத்தில் 2007 முதல் 2012 வரை காங்கிரஸ் சார்பில் முதல்வர் பதவி வகித்தவர் திகாம்பர் காமத். சமீபத்தில் 8 எம்எல்ஏக்களுடன் சென்று பா.ஜவில் இணைந்து விட்டார்.

காங்கிரஸ் தவிர சிவசேனா சார்பில் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த நாராயண் ரானேவும் பா.ஜ வலைக்கு தப்பவில்லை. 2019ல் பா.ஜவில் சேர்ந்த அவர் இப்போது ஒன்றிய அமைச்சர். ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி தலைவருமான பாபுலால் மராண்டி கட்சியை பா.ஜவோடு இணைத்து விட்டார். முதல்வர்கள் மட்டுமல்ல ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்பிஎன் சிங், ஜிதின் பிரசாதா, அசாம் பா.ஜ முதல்வராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் காங்கிரசில் இருந்து வந்தவர்கள்தான். இன்னும் ஒவ்வொரு எதிர்க்கட்சியிலும்  தொடர்ந்து ஆள்பிடிக்கும் வேலையைத்தான் இப்போது வரை எந்தவித சமரசமும் இல்லாமல் பா.ஜ செய்து வருகிறது. அப்படித்தான் காங்கிரசை சரித்து இருக்கிறது பா.ஜ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *