இந்தியா, சிந்தனைக் களம், பொருளாதாரம், வர்த்தகம்

இந்தியாவிர்க்கு தேவை, சிந்தனை மாற்றம்!

agriculture-industry-india

ஆப்பிரிக்க நாடுகளில் பயணத்திலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மொசாம்பிக் நாட்டுடன் பருப்பு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படும். நான்கு ஆண்டுகளில் இந்த அளவு இரட்டிப்பாகும். பருப்பு இறக்குமதி செய்வதோடு, இந்திய வேளாண் துறையின் ஆலோசனை, தொழில்நுட்ப உதவியும் மொசாம்பிக் நாட்டுக்கு வழங்கப்படும்.

ஏற்கெனவே, மியான்மரிலிருந்து பருப்பு இறக்குமதி செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. அண்மையில் பருப்பு விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்ததால், மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கியது. பதுக்கல் வியாபாரிகளிடமிருந்து பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பருப்பு இருப்பு வைக்கும் நடவடிக்கையாக, ஒரு லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டு, இருப்பில் வைக்கவும், மாநிலங்கள் கோரும் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கவுமான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் பருப்பு நுகர்வு சுமார் 2.2 கோடி டன். ஆனால், பருப்பு உற்பத்தி 1.7 கோடி டன் மட்டுமே. ஆகவே, ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் டன் பருப்பு வகைகளை கனடா, அமெரிக்கா, மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்த நிலைமை திடீரென்று ஏற்பட்டுவிடவில்லை. பல ஆண்டு காலமாக இப்படித்தான் தொடர்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து லட்சம் டன் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இப்போது அது 60 லட்சம் டன்னாக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் விவசாய நிலங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் நமக்கு என்ன தேவையோ அதை உற்பத்திச் செய்து தற்சார்பு எய்தும் பொருளாதார சிந்தனைக்கு பதிலாக, ஏற்றுமதி செய்து இந்தியாவுக்கு அன்னியச் செலாவணி ஈட்டுகின்ற மோகம்தான் அதிகமாக இருக்கிறது. இதனால் மறைமுகமாக நாம் எதிர்கொள்ளும் இழப்பு மிகமிகப் பெரிது.

ஆண்டுக்காண்டு உயர்ந்து வரும் பருப்புத் தேவையை பூர்த்தி செய்ய முயலாமல், அதனை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இந்தியாவின் தேவைக்கும் அதிகமாக சர்க்கரையை உற்பத்தி செய்து, சர்க்கரை ஆலைகளுக்கு நிறைய சலுகைகள் அளித்து, கரும்புக்கு ஆதார விலை நிர்ணயிப்பதில் கூடுதல் தொகை வழங்கி, மானியம் கொடுத்து, கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கிறோம். ஒரு கிலோ சர்க்கரை நம் வீட்டிற்கு வரும்போது அது எடுத்துக்கொண்ட கண்ணுக்குத் தெரியாத தண்ணீரின் அளவு (மழை நீர் அல்லது வெர்ச்சுவல் வாட்டர்) ஒரு கிலோவுக்கு 1,500 லிட்டர்.

அண்மையில் மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலைக்கு காரணமே, அதிக தண்ணீரை உறிஞ்சும் கரும்பு சாகுபடியை பரவலாக விவசாயிகள் மேற்கொண்டதுதான். ஆனால், நாம் கரும்பு விவசாயத்துக்கு பல ஆயிரம் கோடி மானியம், சலுகை அளித்து ஆண்டுக்கு 30 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்கிறோம்.

நாம் இழக்கும் தண்ணீர் அளவும் அதன் மதிப்பும் இந்த ஏற்றுமதி விலையிலும் லாபத்திலும் இடம்பெறாது. தண்ணீரைப் பயன்படுத்தி உணவுப் பொருளை விளைவித்து அதை ஏற்றுமதி செய்வதன் மூலமாக, தனது உள்நாட்டுத் தண்ணீரை பெருமளவு இழக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெறுகிறது.

சர்க்கரையை மிகையாக உற்பத்தி செய்யாமல், நம் தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்தால் இந்தியாவில் அதற்குச் செலவாகும் தண்ணீர் மிச்சப்படும். அதேபோன்று, இறைச்சி ஏற்றுமதியைக் குறைத்தால் இன்னும் பல லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் மிச்சமாகும். அதேபோன்று, உயர்ரக அரிசி (ஒரு கிலோ அரிசிக்கு 2,500 லிட்டர் தண்ணீர்), இறைச்சி (ஒரு கிலோ மாட்டிறைச்சிக்கு 15,000 லிட்டர் தண்ணீர்), சில பழ வகைகளை நம் தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்தால், இந்தியா தனது தண்ணீரை இப்படி இழக்க வேண்டிய நிலைமை ஏற்படாது.

தமிழக விவசாயிகள் தற்போது உளுந்து உற்பத்தியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். உளுந்து கிலோ ரூ.100 வரை விவசாயிகளுக்கு விலைபோகிறது. இதே விலை கிடைத்தாலும் ஒரு ஏக்கருக்கு ரூ.50,000 வரை கிடைப்பதாகச் சொல்கிறார்கள். ஆகவே, கரும்பு பயிரிடுவதற்குப் பதிலாக உளுந்து பயிரிடும் போக்கு கடந்த இரு ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நிகழாண்டில் 13,500 ஹெக்டேரில் உளுந்து சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த சாகுபடி பரப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். இதேபோன்று, பெரம்பலூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களிலும் உளுந்து சாகுபடி பரவலாகி வருகிறது.

தமிழக அரசு உளுந்து மற்றும் பருப்பு சாகுபடியை ஊக்கப்படுத்தி வருகின்றது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் கணிசமாக கிடைப்பதோடு, இந்த மாற்றுப்பயிர் சாகுபடி மண்வளத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சுமார் 100 நாள்களுக்குள் சாகுபடிக்குத் தயாராகிவிடும் உளுந்து பயிரை, குறுவை சாகுபடியைத் தொடர்ந்து பயிரிடும் போக்கு டெல்டா பகுதிகளில் அதிகரித்து வருகிறது. தற்போது, விலை அதிகம் கிடைப்பதால் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலைமையைத் தக்க வைத்துக்கொண்டு, உளுந்து சாகுபடி பரப்பை விரிவுபடுத்தவும், விளைச்சலை அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை தேவை.

மிகையான கரும்பு சாகுபடியைக் குறைத்து, தட்டுப்பாடுள்ள பருப்பு சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். நமது திட்டமிடல் தொழில் துறையை மட்டுமே முன்னிறுத்துவதாக இல்லாமல், விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலும் மாற்றி அமைத்தல் இன்றைய அவசரத் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *