ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன.
2015-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது ஸ்விட்சர்லாந்து. 2-வது இடத்தில் ஐஸ்லாந்தும், 3-வது இடத்தில் டென்மார்க்கும், 4 மற்றும் 5-வது இடத்தில் நார்வே, கனடா நாடுகளும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 117-வது இடத்தில் இருக்கின்றது. கடந்த 2013-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா 111-வது இடத்தில் இருந்தது. இப்போது 6 இடங்கள் பின்தங்கியதால் 117-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 81-வது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 109-வது இடத்தில் இருக்கிறது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் கூட 111-வது இடத்தில் இருக்கிறது. பாலஸ்தீனத்துக்கு இந்தப் பட்டியலில் கிடைத்துள்ள இடம் 108. இராக்குக்கு கிடைத்துள்ள இடம் 112.
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி.), பிரச்சினைகள் உருவாகும் போது ஏற்படும் சமூக ஆதரவு, வாழ்க்கைத் தேவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் நிலவும் சுதந்திரம், சராசரி வயது வரம்பு, ஊழல் மீதான பார்வை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா 15-வது இடத்திலும் பிரிட்டன் 21-வது இடத்திலும் உள்ளன. சிங்கப்பூருக்கு கிடைத்துள்ள தர எண் 24. சவுதி அரேபியா 35-வது இடத்தில் உள்ளது. சீனாவுக்கு 84-வது ரேங்க் வழங்கப்பட்டுள்ளது.
டோகோ, புருண்டி, பெனின், ருவாண்டா, பர்கினா பாஸோ, ஐவரி கோஸ்ட், கினியா, சாட், போரினால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலில் கடைசி 10 இடங்களைப் பிடித்துள்ளன.