in , , , ,

இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்!

HEART AND MEDICINES

இதய நோயாளிகளுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அடைப்பை நீக்கிவிட்டு, ரத்தம் சீராகப் பாய்ந்து செல்லச் சிறு குழாய்கள் (ஸ்டென்டுகள்) பொருத்தப்படும். மகாராஷ்டிரத்தில் உள்ள பெரிய மருத்துவ நிறுவனங்கள் இந்தக் குழாய்களுக்கு அதிக விலை வைத்துப் பணம் வசூலிப்பதைக் கண்டறிந்து, அந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். கடந்த 6 மாதங்களாக இவ்வகை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் சிகிச்சைக்கான செலவுபற்றிய தகவல்களைத் திரட்டிய கட்டுப்பாட்டாளர், ரூ.25,000 முதல் ரூ.40,000 வரையில் மட்டுமே விலை இருக்கக்கூடிய அந்தக் குழாய்களுக்கு 4 மடங்கு முதல் 8 மடங்குவரை அதிகம் வசூலித்திருப்பதைக் கண்டுபிடித்தார். அதையடுத்துதான் இந்த நடவடிக்கை.

இந்தக் குழாய்களின் உற்பத்தி, விநியோகம் எல்லாம் அதைத் தயாரிக்கும் நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்தே இருக் கின்றனவே தவிர, நோயாளிகளின் தேவை, எண்ணிக்கை, பொருளா தாரச் சூழல் போன்றவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. உற்பத்திச் செலவு குறைவாக இருந்தாலும் அதிக லாபத்துக்கு இவற்றை விற்கிறார்கள்.

எனவே, இந்தக் குழாய்களை அதிகபட்சம் இவ்வளவு விலைக்குத் தான் விற்க வேண்டும் என்று கட்டுப்படுத்த, ‘அத்தியாவசிய மருந்துகள் சட்ட’த்தின் பட்டியலில் இந்தக் குழாய்களையும் சேர்க்க வேண்டும் என்று தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்துக்கு மருந்துக் கட்டுப்பாட்டாளர் கேட்டுக்கொண்டிருக்கிறார். விலைக் கட்டுப்பாட்டுக்கு உட்பட மாட்டோம் என்று உற்பத்தியாளர்களால் கூற முடியாது என்பதால், உற்பத்தியைக் குறைத்து, செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு முயலக்கூடும். எனவே, விலையைக் கட்டுப்படுத்துவதுடன், இத்தகைய உயிர்காக்கும் சாதனங்களின் உற்பத்திக்கு வரிச் சலுகை தருதல், பிற நாட்டு நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வைத்துக்கொண்டு, குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையில் தயாரித்து விற்க ஊக்கப்படுத்துதல் போன்றவற்றில் அரசு ஈடுபட வேண்டும்.

விலையில் மட்டுமல்ல, நோய் இன்னதென்ற சோதனைகளில் தவறு, சிகிச்சை முறைகளில் தவறு, மருந்து மாத்திரையின் வீரியங் களில் சரியான அளவைக் கடைப்பிடிக்கத் தவறுவது, நோயாளிகளைச் சோதிக்க வைத்திருக்கும் கருவிகளில் பழுது நீக்காமல் இருப்பது என்று பலவிதங்களிலும் தவறுகள் நிகழ்கின்றன. இந்தக் குழாயே தேவைப் படாது என்றாலும்கூட வலிந்து அதை நோயாளிகளுக்குப் பொருத்தும் நிலையும் நிலவுகிறது என்ற தகவல் நம்மை அதிரவைக்கிறது.

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் கவனித்துத் தீர்ப்பதற்காகத்தான், ‘மருத்துவமனை நிறுவனங்கள் பதிவு, ஒழுங்காற்றுச் சட்டம் -2010’ கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுப்பதில் மருத்துவர்கள் சங்கம் இன்னமும் ஒத்துழைப்பு தரவில்லை என்பதுதான் விசித்திரம். நோயாளிகளை மனித உயிர்களாகக் கருதாமல் வருமானத்துக்கான வாய்ப்பாக மருத்துவத் துறையும் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பாளர்களும் கருதுவது – நவீன மருத்துவத்தின் அறத்தின் இடம் என்ன என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இந்த இடத்தில்தான் அரசின் தலையீடு இன்றியமையாததாகிறது. ஆனால், தன் குடிமக்களின் உயிரோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில் எந்த அளவுக்கு ஒரு அரசு அலட்சியமாக இருக்க முடியும் என்பதில் ஒவ்வொரு அரசும் முந்தைய அரசுகளை முந்துவதிலேயே முனைப்பாக இருப்பதை என்னவென்று சொல்வது?

– தி இந்து

What do you think?

Written by ADMIN

சா(சோ)தனை விளக்கம்!

நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!