இலங்கை, பொருளாதாரம்

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை  மாதம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துரூ.80ஐ தாண்டியிருந்தது. ஆனால், வர்த்தக முடிவில்ரூ.79.98 ஆனது. இதன் பிறகும் தொடர்ந்து சரிவை  சந்தித்து வந்தது. 80 ரூபாயை நெருங்குவதும், பின்னர் வர்த்தக முடிவில்  மதிப்பு ஏற்றம் பெறுவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது. வர்த்தக துவக்கத்திலேயே அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புரூ.80.27 என சரிவுடனேயே துவங்கியது. பின்னர் பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு இடையில் இதுவரை இல்லாத அளவாக ரூ.80.95 ஆனது. வர்த்தக முடிவில் முந்தைய நாளானரூ.79.96ஐ விட 90 காசு சரிந்து ரூ.80.86 ஆக முடிந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு முடிவை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு ஸ்திரம் அடைந்தது. இது பிற நாட்டு கரன்சிகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வரலாறு காணாத சரிவு, நேற்றும் நீடித்தது. நேற்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.80.98 ஆனது. கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உட்பட ஏராளமானவை உள்நாட்டு தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் டாலரில்தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் டாலரின் தேவை அதிகரித்து வருகிறது. டாலரின் மதிப்பு அதிகரிக்க, அதிகரிக்க, டாலரில் வர்த்தகம் செய்யும் பல்வேறு நாடுகளின்  கரன்சிகள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன.

பெரும்பாலானவற்றுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதால் இதனை தவிர்க்க முடியாத நிலை உள்ளது. இந்தியாவும் இப்படிப்பட்ட சிக்கலில்தான் உள்ளது. ரூபாய் மதிப்பை உயர்த்தவும், ஸ்திரப்படுத்தவும் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், இறக்குமதி தேவையை நம்பியுள்ள நிலையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்காமல் இருக்க முடியாது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதன்மூலம், அனைத்து தரப்பு நுகர்வோரும் பாதிப்பு அடைவார்கள். மேலும், இந்தியாவில் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை உயர்த்தியது. அடுத்து வரும் நிதிக்கொள்கை சீராய்வு கூட்டங்களிலும் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் டாலர் தொடர்ந்து வலுவடைவது இந்தியாவுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தவே செய்யும். அடுத்த ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.76ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வெளியிட்ட கணிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த இலக்கை அடைவது தற்போதைய சூழ்நிலையில் கடினமாகவே தோன்றுகிறது. நாட்டின் பண வீக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்றுமதியை நம்பியுள்ள மருந்து துறையும், ஐடி துறையும் பலன் அடையலாம். மற்றபடி இயந்திரங்கள், மூலதன பொருட்கள் உட்பட இறக்குமதியை சார்ந்துள்ள தொழில்துறைகள், ரூபாய் மதிப்பு சரிவு தொடரும் பட்சத்தில் மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதையெல்லாம் உணர்ந்தும், தொழில்துறையின் சுமையை இறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *