மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை விவசாயிகள் விற்காவிட்டால் நாட்டின் பால்வளம் அழிவதோடு, அந்நிய நாட்டின் இறைச்சி நிறுவனங்கள் உள்ளே நுழையும் எனவும், அதனால் நமது அந்நியச் செலாவணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தமிழக மற்றும் கேரள விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருகாலத்தில் ஒருவரது செல்வச் செழிப்பை மதிப்பிடும் அளவீடாக மாடுகள் கருதப்பட்டன. அதிக மாடு களை உடையவர் அதிக செல்வம் நிறைந்தவராகத் திகழ்ந்தார். அதற்கு காரணம் மாடுகளால் கிடைக்கும் பால் உற்பத்தியும் அதில் இருந்து பெறப்படும் வருவாயும்தான். இந்நிலையில், இறைச் சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயம் அழிந்து விடும் என்று விவசாயிகள் போராட் டங்களில் இறங்கியுள்ளனர். ‘பால் பொருட்களை விற்பதைப் போலவே, பால் தராத மாடுகளை இறைச்சிக்கு விற்பதனாலேயே மாடு வளர்ப்பு உயிர்ப் புடன் உள்ளது. இதை தடை செய்தால் இந்தியப் பொருளாதாரத் துக்கே பலத்த அடி விழும்’ என்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி, தற்போது மேய்ச்சல் நிலங்கள் பெருமளவு குறைந்துவிட்டன. ஒருபுறம் வனத்துறையை ஒட்டியுள்ள பல லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கக் கூடாது என்ற கெடுபிடிகள் இருக்க, மறுபுறம் பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, தவிடு போன்றவை கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விலை ஏறியுள்ளது. சாதாரண செக்குப் புண்ணாக்கு போய் ரோட்டரி, எக்ஸ்பில்லர், டபுள் எக்ஸ்பில்லர் புண் ணாக்கு போன்றவையும், கலப்புத் தீவனங்களும் வந்துள்ளன.
இதற்கேற்ப பால் கொள்முதல், விற்பனை விஷயங்களிலும் புதுமை புகுந்தது. முதலில் வீடு, வீடாக பால்காரர் பால் ஊற்றி விற்ற நிலை மாறி, கூட்டுறவுப் பால் சங்கங்கள் வந்தன. பசு மாட்டுப்பாலை விட எருமைப்பால் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எருமை வளர்ப்பில் விவசாயிகளை ஈடுபடுத்த அரசு திட்டங்கள் தந்தது. நாட்டு மாடு வளர்ப்பைவிட ஜெர்சி இன கலப்பின மாடுகள் மூலம் பால் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என அவை அறிமுகப்படுத்தப்பட்டன.
அதிகரித்த உற்பத்தி செலவு
இந்த மாற்றங்களின் மூலம் பால் உற்பத்திச் செலவு கூடுதலாகி கொள்முதல் கட்டுப்படியாகாத நிலைக்கு வந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் நவீன உத்திகளைப் பயன்படுத்தி, கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு போட்டியாக பால் கொள்முதல் செய்யத் தொடங்கின. இதுவரைக்கும் விவசாயிகள் பசு, எருமைகளை வளர்த்து வந்தார்கள். அவை கன்று போடும். பால் கறக்கும். அந்த வருமானத்தை வைத்து தீவனம் போடுவார்கள். அதே சமயம் கறவை வற்றிப் போனால் மாடு பலன்படாமல் (கர்ப்பம் தரிக்காமல் இருந்தால்) அவற்றை அடிமாடுகளாக (இறைச்சிக்கு) விற்றனர். அதேபோல் நோய்வாய்ப்பட்டு ஒரு மாடு இறக்கும் நிலை ஏற்பட்டால் அதைப் புதைக்க 15 பேராவது வேண்டும், ஆட்கூலி தர வேண்டும் என்பதைக் கணக்கிட்டு, அதை இறக்கும் முன்னரே இறைச்சிக்காக வந்த விலைக்கு விற்கும் பழக்கமும் இருந்தது.
இப்படிக் கிடைக்கும் பணத்தை வைத்தே பால் உற்பத்திச் செலவுகளை சமாளித்து வந்தார்கள். ஒரு கட்டத் தில் பால் உற்பத்திக் கும், மாடு வளர்ப்புச் செலவுக்கும் சம்பந்தமே இல்லாத நிலை ஏற்பட, தோட்டங்களில் உழவுக்கு டிராக்டர் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் வந்து விட, காளைகளின் பயன்பாடு குறையும் நிலை ஏற்பட்டது. எனவே காளைக் கன்று களை ஒரு வருடம், 2 வருடம் வளர்த்து அதை இறைச்சிக்காக விற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த வருமானத்தை வைத்தே பால் உற்பத்திக்கான நஷ்டத்தை சரிக்கட்டி வந்துள்ளனர் விவசாயிகள்.
உதாரணத்துக்கு, தன் ஆயுளில் ஒரு நாட்டு மாடு 16 முதல் 17 கன்று களும், ஜெர்சி உள்ளிட்ட வெளிநாட்டு கலப்பின மாடு 5 முதல் 6 கன்றுகள் வரை ஈன்றால் அவற்றில் பாதிக்குப் பாதி காளைக் கன்றுகளே போடுகின்றன. அவையெல்லாம் இறைச்சிக்காக விற்கும்போது ஓரளவு நல்ல வருவாய் கிடைத்தது. இப்போது அந்த விஷயத் தில்தான் சம்மட்டி அடி விழுந்துள்ளது என்கிறார்கள் தமிழக விவசாயிகள்.
நீலகிரி கூடலூர் கால்நடை மருத் துவர் சுகுமாரன் கூறும்போது, ‘இந்த உத்தரவால் பால் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கும். நாட்டு மாடுகள் ஒரு கன்று ஈன்றால் 3 முதல் 4 மாதத்தில் 900 லிட்டர் வரை பால் தரும். அவை 16 முதல் 17 கன்றுகள் வரை ஈன்றெடுக்கும். நாட்டு ரகத்திலேயே சிந்தி இன மாடுகள் ஒரு கன்று ஈன்றால் 6 மாதம் வரை கறவை இருக்கும், 2 ஆயிரம் லிட்டர் வரை பால் தரும், 12 கன்றுகள் வரை ஈன்றெடுக்கும். ஜெர்சி போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகள் ஒரு கன்று ஈன்றால் சுமார் 10 மாதங்களில் 3 ஆயிரத்து 500 முதல் 50 ஆயிரம் லிட்டர் வரை பால் கொடுக்கும், 6 முதல் 7 கன்றுகள் வரை ஈன்றெடுக்கும்.
மாடுகளின் வாழ்நாள் பலன் என்பது பால் கொடுக்கும் காலம் மட்டுமே.
இந்தக் காலகட்டத்தில் கலப்பின மாடுகளுக்கு பால் உற்பத்திக்கேற்ப தீவனமும் கொடுக்க வேண்டும். உதாரணமாக 300 முதல் 400 கிலோ எடையுள்ள மாடுகளுக்கு 1 நாளைக்கு 3 கிலோ சராசரியாக தீவனம் கொடுக்க வேண்டிவரும். அதுவே பால் கறக்கும் மாடுகளுக்கு ஒரு லிட்டருக்கு கூடுதலாக 200 கிராம் தீவனம் அளிக்க வேண்டும். 10 லிட்டர் பால் கறக்கும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 2 கிலோ கூட்டி 5 கிலோ தீவனம் கொடுக்க வேண்டும். இந்த கணக்கின்படி பார்த்தால் சாதாரண மாடுகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.150 மதிப்பில் தீவனம் கொடுத்தால், பால் கறக்கும் மாடுக ளுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை செலவு பிடிக்கும். இதில் காளைகளும், காளைக் கன்றுகளும் எந்த பயனும் இல்லாததால் அதை இறைச்சிக்கு விற்கும்போது நீலகிரியில் கிலோவுக்கு ரூ.100 என்ற கணக்கில் ரூ.20 ஆயிரம் கொடுத்துகூட வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
வெளிநாட்டு இறைச்சி வரும்
அதன்மூலம் கிடைக்கும் வரு மானமும் கறவையாக நிற்கும் பசு மாட்டின் பால் உற்பத்திக்கு முதலீடாக மாறி இந்தத் தொழிலை காப்பாற்றி வரு கிறது. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு இந்த பொருளாதாரச் சுழற்சியை சிக்கலுக்கு உள்ளாக்கி விடும். பொருளாதார சூழ்நிலைக்காகவே மாட்டுச்சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இப்போது மாட்டுச்சந்தை பொருளா தாரம் அடிபட்டு, வெளிநாட்டு இறைச்சி, மார்க்கெட்டுக்கு வர ஆரம்பித்து விடும். இதுபோன்ற சூழ்நிலைக்காகவே ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏராளமான கால்நடைகளை உற்பத்தி செய்துவிட்டு, அதை அழிக்க என்ன வழி என்று தேடிக் கொண்டி ருக்கின்றன.
வெஜிடேரியன் சிக்கன், மட்டன்
இதுதவிர குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இப்போதே வெஜிடேரியன் சிக்கன், வெஜிடேரியன் மட்டன் ரகங்களைக் கொண்டுவந்து விட்டன. சோயா போலவே மட்டன், சிக்கன் சுவையில் உள்ள ரகம் அது. இந்த கம்பெனிகள் நாடு முழுக்க தன் சந்தையை விரித்துவிடும். இறைச்சிக்கு இணையான சுவையுள்ள பொருட் களை பல நூற்றாண்டுகள் முன்பு புத்த பிட்சுகள் (கோதுமை மற்றும் ‘க்ளூட்டன்ஸ்’ (Glutens – கோதுமையில் உள்ள புரோட்டீனில் பசை போல் கிடைக்கும் ஒரு பகுதி வேதிப்பொருள்) கூடவே சில பொருட்களைக் கலந்து மாமிச சுவையில் ஒரு வகை உணவுப் பொருளை உருவாக்கினார்களாம். இதற்கு டோஸூ (TOSU) என்று அப்போதைய புத்தபிட்சுகள் பெயர் வைத்தார்கள்.
இப்போதும் அதேபோல் தான் வெஜிடேரியன் சிக்கன், வெஜிடேரியன் மட்டன் என்ற பெயரில் தயாரிக்கப் படும் உணவுகளுமாம்) கண்டுபிடித்து, அதை சந்தைப்படுத்தி மிருகவதை கூடாது என்று தடுக்க முயற்சித்தார்கள். அதை இப்போது இந்த அரசு நடை முறைப்படுத்துகிறது. கோசாலைக்கு மாடுகளைக் கொடுப்பது மட்டும் இறுதித் தீர்வாகுமா என்றால் அதுவும் அனுபவபூர்வமாக இல்லை.
அங்கேயும் தீவனம் போதாமல் பட்டினி கிடந்தே உயிரை விடுவதைக் காண்கிறோம். கோசாலைக்காரர்களே இறைச்சி வியாபாரிகளுக்கு அதை விற்று விடுகி றார்கள். பல கோசாலைகளை கோடீஸ் வரர்களே நடத்துகிறார்கள். கறவை வற்றிய மாடுகள், பயன் பாடில்லாத காளைக் கன்றுகளை கோசாலைகளில் சேர்த்தால் திரும்பிய பக்கமெல்லாம் கோசாலைகளையே நிறுவ வேண்டி வரும்’ என்றார்.
25 லட்சம் லிட்டர் பால்
கேரள நிலை குறித்து அட்டப் பாடியைச் சேர்ந்த பாலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க (மில்மா) தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியது: 2016-ம் ஆண்டு கணக்கின்படி மலபார் மில்மா ஒன்றியத்தில் பாலக் காட்டில் 276, மலப்புரத்தில் 161, கோழிக் கோட்டில் 196, வயநாட்டில் 52, கண் ணூரில் 133, காசர்கோட்டில் 111 எண்ணிக்கையில் மொத்தம் 923 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இயங்கி யுள்ளன. இது இப்போது மாவட்டத்துக்கு 10 கூட்டுறவுச் சங்கங்கள் கூடுதலாகி குறைந்தபட்சம் ஆயிரம் கூட்டுறவுச் சங்கங்களாவது உருவாகியிருக்கும்.
பாலூர் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் சுமார் 200 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலாகிறது. தனியார் பால் சொசைட்டிக்கும் பால் கொடுப் பவர்களாக பலர் உள்ளனர். மலபார் ஒன்றியம் போலவே கேரளத்தில் கொச்சின், திருவிதாங்கூர் மில்மா ஒன்றியங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3 ஒன்றியங்களையும் சேர்த்தால் சுமார் 2,500 சங்கங்கள் வரும். இவற்றின் மூலம் குறைந்தபட்சம் தினமும் சுமார் 25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நடப்பதாகச் சொல்லலாம்.
பால் விலை அதிகரிக்கும்
பால் உற்பத்தி சிறப்பாக நடப்பதற்கு, இறைச்சிக்காக விற்கப்படும் கால்நடை களுக்கு நல்ல விலை கிடைப்பதுதான் காரணம். ஒரு மாடு காளைக் கன்று ஈன்றால் அதை 2 வருடம் மேய்ச்சலுக்கு விட்டு கோட்டத்துறை சந்தைக்குக் கொண்டு போனால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கிறது. அதே போல் கறவை வற்றி சினை நிற்காது போகும் வறட்டு மாடுகளுக்கும் கறியைப் பொறுத்து ரூ.25 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது. இதுவே பண்டிகை நாட்களில் கூடுதல் விலை கிடைக்கிறது.
இப்போது இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட உடனே 15 ஆயிரம் விலை போகின்ற அடிமாடுகளை வெறும் ரூ.6 ஆயிரம், ரூ.5 ஆயிரம் விலைக்கு கேட்கின்றனர் வியாபாரிகள். ரூ.25 ஆயிரம் விலை போகின்ற மாடுகளை வெறும் ரூ.10 ஆயிரத்துக்கு கேட்கிறார்கள். விலை குறைந்துவிடும் என்பதால் கிடைத்த விலைக்கு விற்று வருகிறார்கள் விவசாயிகள்.
கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவினாலும் விவசாயி கள் தற்கொலை என்பது இல்லாமல் இருந்ததற்கு காரணம் விவசாயத்தோடு, கால்நடையையும் வளர்த்து வந்தது தான். அதில் வரும் பால் உற்பத்திக் கான செலவை ஈடுசெய்ய முடிந்தது, இறைச்சிக்காக மாடுகளை விற்க முடிந்ததால்தான். மத்திய அரசின் முடிவால் பால் உற்பத்தி பாதிக்கு மேலாக குறைந்துவிடும்.
பால் உற்பத்தியாளர் சங்கங்களும் காணாமல் போய்விடும். பசு மாடு வளர்த்தவர்களே வெளியில் பால் வாங்கிக் குடிக்கும் நிலை ஏற்படும். அதனால் பால்விலையும் பல மடங்கு அதிகரித்துவிடும் என்றார்.
நஷ்டப்படுத்தும் அரசியல்
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி கூறும்போது, ‘‘ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு என்ன என்பது குறித்து இதுவரை யாருக்குமே தெரியாது. உற்பத்தி செலவை கணக்கிட்டு, அதற்கு மேல் விலை வச்சு செய்யாத ஒரு தொழில் இருக்குன்னா அது இந்த கால்நடை வளர்ப்புதான். ஆவின் வந்த பிறகு அவர்கள்கூட விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் செலவு முதல் அதை ப்ராசஸ் செய்து விற்கும் வரையிலான செலவுகளைத்தான் உற்பத்தி செலவுன்னு சொல்றாங்க. அதுவும் விவசாயிகளிடம் ரூ.26-க்கு கொள்முதல் செய்து, மக்களுக்கு ரூ.40-க்கு விற்றாலும் ஆவின் நஷ்டக்கணக்கே காட்டுகிறது. ஆனால் கேரளாவில் மில்மா லிட்டர் ரூ.32-க்கு கொள்முதல் செய்து ரூ.36-க்கு விற்கிறார்கள். அவர்கள் எந்த இடத்திலும் நஷ்டக்கணக்கு காட்டுவதில்லை.
மாறாக, வருடந்தோறும் பால் ஊற்றும் விவசாயிக்கு லிட்டருக்கு ரூ.1 வரை லாபத்தில் பங்கு கொடுக்கிறாங்க. இப்படி விவசாயிகளை நஷ்டப்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும்போது இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பாதகத்தை ஏற்படுத்தும்’ என்றார்.
சந்தை வியாபாரம் பாழாகும்
தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டந்தோறும் கிழமைகள் வாரியாக ஒவ்வொரு இடங்களிலும் கால்நடைச் சந்தைகள் நடக்கின்றன. உதாரணமாக கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை துடியலூர், ஞாயிற்றுக்கிழமை கோபி சிறுவலூர், வியாழக்கிழமை சத்தியமங்கலம் புளியம்பட்டி, செவ்வாய் – வியாழக்கிழமைகளில் பொள்ளாச்சி, வெள்ளிக்கிழமை பூலுவபட்டி, சனிக்கிழமை கேரளா அட்டப்பாடி கோட்டத்துறை சந்தைகள் நடக்கின்றன. இங்கெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கால்நடைகள் முதல் 40 ஆயிரம் கால்நடைகள் வரை விற்பனையாகின. பசுமாடுகள் வாங்க விவசாயிகள் வரும் சந்தையாகவே இவை விளங்கின. இப்போதும் சந்தை நடக்கிறது.
ஆனால் வேளாண் தொழில் வீழ்ச்சி, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற நெருக்கடிகளின் காரணமாக 500 முதல் 2000 வரையிலான மாடுகளே விற்பனைக்கு வருகின்றன. அவற்றில் 90 சதவீதம் அடிமாடுகளும், காளைக்கன்றுகளுமே ஆகும். இவற்றை இறைச்சிக்காகவே வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இந்த வியாபாரம் சார்ந்து ஒவ்வொரு சந்தையிலும் ரூ.50 லட்சம் வரை பணப்புழக்கம் நடக்கிறது. அது அத்தனையுமே, இந்த உத்தரவால் பாழாகும் என்கிறார்கள், இந்த சந்தைகளை நம்பியே பிழைப்பு நடத்தும் புரோக்கர்கள் மற்றும் வியாபாரிகள்.