கொழும்பு :இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருவதை அடுத்து, மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். ‘அவர்களை காணவில்லை’ எனக் கூறப்பட்ட நிலையில், திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்நிலையில், கொழும்பு நகரில் உள்ள போராட்ட களத்துக்குள் நேற்று முன்தினம் புகுந்த மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், அமைதியான முறையில் போராடி வந்த மக்கள் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.இந்த தகவல் பரவி, மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து, இலங்கை முழுதும் காட்டுத்தீ போல கலவரம் வெடித்தது.
இந்த கலவரங்களில், ஆளுங்கட்சி எம்.பி., அமரகீர்த்தி உட்பட எட்டு பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையின் அம்பந்தோட்டையில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பூர்வீக இல்லத்துக்கு மக்கள் தீ வைத்தனர். அப்பகுதியில் உள்ள ராஜபக்சேவின் தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் நினைவிடத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். குருனேகலா என்ற இடத்தில் உள்ள மகிந்த ராஜபக்சே இல்லமும் தீக்கிரையானது.பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், கொழும்பு நகரில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ‘டெம்பிள் ட்ரீஸ்’ மாளிகையில் மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது, போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.
பாதுகாப்பில் இருந்த ராணுவ வீரர்கள் இரவு முழுதும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். அதை மீறி பலர் கற்களை வீசி எறிந்து பிரதமர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.மக்கள் போராட்டம் தீவிரமடைவதை கண்டு பயந்துபோன மகிந்த ராஜபக்சே, டெம்பிள் ட்ரீஸ் இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் நேற்று அதிகாலை வெளியேறியதாக கூறப்படுகிறது.
அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. ‘முன்னாள் பிரதமரை குடும்பத்துடன் காணவில்லை’ என்ற தகவல் பரவியது. இதற்கிடையே, ‘இலங்கையில் கலவரத்தை துாண்டிய குற்றத்திற்காக மகிந்த ராஜபக்சேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என, அந்நாட்டு எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மகிந்த ராஜபக்சேவின் இருப்பிடத்தை போராட்டக்காரர்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு இலங்கையில் உள்ள துறைமுக நகரான திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் ராஜபக்சே குடும்பத்தினருடன் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.இதையடுத்து கடற்படை தளத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபக்சேவுக்கு விசுவாசமானவர்கள் நாட்டை விட்டு தப்பி விடக் கூடாது என்பதற்காக, கொழும்பு விமான நிலையம் செல்லும் வழியெங்கும் போராட்டக்காரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நிலைமை மோசமடைந்துள்ளதை அடுத்து, ராணுவம் மற்றும் போலீசுக்கு வானளாவிய அதிகாரத்தை அதிபர் கோத்தபய அளித்துள்ளார். யாரை வேண்டுமானாலும், ‘வாரன்ட்’ இன்றி கைது செய்யவும், 24 மணி நேரம் வரை அவர்களை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை சோதனையிடுவதற்கும் முழு அதிகாரம் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவை தொடர்பு கொண்ட சபாநாயகர் யாபா அபயவர்தனா, நாட்டின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க பார்லிமென்ட் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.