அரசியல், இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், விமர்சனம்

ஈஷா யோகா மைய விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை பிப்ரவரி 24ஆம் தேதியன்று திறப்பதற்காக இந்தியப் பிரதமர் வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த மையம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜக்கி வாசுதேவ் எனப்படும் ஆன்மீக குருவினால் நடத்தப்படும் இந்த மையத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, மகா சிவராத்திரி தினத்தையொட்டி நடக்கும் விழாவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வையடுத்து, ஈஷா யோகா மையத்தின் விதிமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.

சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 44 ஆயிரம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை இடிப்பதற்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இப்போது 112 அடி உயரமுள்ள சிவன் சிலை நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறித்து சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், சலுகை விலையில் மின்சாரம், தொடர்ந்து கட்டுமானப் பரப்பை அதிகரித்துக்கொண்டே போவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதுவரை 5 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் ஒரு வழக்கைப் பதிவுசெய்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இந்த சிலை திறக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டுவரும் ஈஷா யோகா மையத்தின் விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என இந்தியப் பிரதமருக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், “இம்மாதிரி தொடர்ந்து சட்டமீறலிலும் விதி மீறலிலும் ஈடுபடும் அமைப்பு நடத்தும் விழாவில் பிரதமர் கலந்துகொள்வது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு இந்த அமைப்புக்கு சலுகை விலையில் மின்சாரம் அளிப்பதும் கூடாது,” என்று கூறினார்.

இது தொடர்பாக ஈஷா யோகா மையத்தின் கருத்தை அறிய முயன்றபோது, சிவராத்திரி விழா தொடர்பான பணிகளில் அனைவரும் பரபரப்பாக இருப்பதால், அந்த விழா முடிந்த பிறகு இது குறித்துப் பேசுவதாகக் கூறினர்.

-BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *