ரஷ்யா, உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், மரியூபோல் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய நகரங்களில் ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ட்ரோன் ஒன்று, ரசாயனப் பொருள் ஒன்றை மரியூபோல் நகரம் மீது வீசிச் சென்றதாகவும், அதைத் தொடர்ந்து அங்கிருக்கும் உக்ரைன் வீரர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் முதல் பல்வேறு கடுமையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், டோனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யப் படைகள் நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தித் தாக்குவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் நாடாளுமன்றம், அப்பகுதியில் வாழும் மக்கள், அதை எதிர்கொள்ள, சோடாக்கரைசலில் நனைத்த மாஸ்குகளை அணிந்துகொள்ளுமாறு எச்சரித்துள்ளது. இந்த இரண்டு தகவல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.
மேலும், மரியூபோலைக் காப்பாற்ற உக்ரைன் வீரர்கள் உக்கிரமாக முயன்று வரும் நிலையில், அவர்களை சோர்வடையச் செய்யும் வகையில், ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தக்கூடும் என்று பாதுகாப்புத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மரியூபோல் நகரம் மீது ரஷ்யப் படைகள் ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை உறுதி செய்யும் நடவடிக்கையில் பிரித்தானியாவும் அதன் கூட்டாளிகளும் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளியுறவுச் சேயலரான Liz Truss, அப்படி ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்குமானால், பிரச்சினை மேலும் பெரிதாகலாம் என்றும், அதற்கு புடினும் அவரது படைகளும் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.