ரஷ்ய–உக்ரைன் போர் நீடித்தால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுள்ள போர் கிட்டத்தட்ட 3 மாதங்களை எட்டியுள்ளது. இதனால் ரஷ்யா, உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் தடை பட்டுள்ளதால், ஏற்கெனவே அதைச் சார்ந்துள்ள நாடுகளின் தேவை, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் போரால் விரைவில் இந்த உலகம் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது என்றும் இது ஏழை நாடுகளில் உணவு பாதுகாப்பின்மையை மோசமாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவு பற்றாக்குறை ஏற்படும்
உக்ரைனில் இருந்து சமையல் எண்ணெய், கோதுமை, சோளம் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி தடைபட்டுள்ளதகவும், ரஷ்யாவின் உணவுப் பொருள் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டைவிட தற்போது உணவுப் பொருள்களின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறிய அன்டோனியோ குட்டரெஸ், உணவுப் பற்றாக்குறையினால் ஊட்டச்சத்து குறைபாடு, பசி மற்றும் பஞ்சம் ஏற்படும் என்று தெரிவித்தார்.
போருக்கு முந்தைய நிலையை போன்று உக்ரைன் திரும்பவில்லை என்றால் சில நாடுகள் நீண்ட கால உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.