செய்தியை முந்தித் தருவது… முழுமையாகத் தருவது… பல கோணங்களில் தருவது… சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாததையும் சேர்த்துத் தருவது என்று சொல்லிக் கொண்டு இன்று செய்திச் சேனல்கள் டிஆர்பி-க்காக செய்கிற அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன்தான்.
நேபாள நிலநடுக்க துயரத்தில் இந்திய ஊடகங்கள் ஆதாயம் தேடுவதாக ட்விட்டரில் எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது. ‘இந்திய ஊடகங்களே திரும்பிச் செல்லுங்கள்’ என்ற பெயரில் ட்விட்டரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹேஷ்டேக்கில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். | முழுமையான செய்தி: நேபாள துயரத்தில் ஆதாயம் தேடுகிறதா இந்திய ஊடகங்கள்: ட்விட்டரில் பரவும் எதிர்ப்பு அலையால் அதிர்ச்சி |
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் முதல் ஆளாய் போய் இறங்கி, ‘போதும் போதும்.. தயவுசெஞ்சு கிளம்புங்க..’ என்று அவர்கள் சொல்கிற வரை சேவையாற்றித் திரும்பியிருக்கும் இந்திய மீடியா பற்றி பேசும் இந்தத் தருணத்தில், தமிழ் மீடியா பற்றி சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன்.
அடுத்த சேனலை முந்த வேண்டும் என்று மெல்ல மெல்ல வேகத்தைக் கூட்டிக் கொண்டே போய், ஒரு கட்டத்தில் பிரேக் ஒயர் பிய்ந்துபோய், பிரேக் பிடிக்காத மண் லாரியாய் மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன தமிழ் செய்திச் சேனல்கள். இந்த ரசவாத மாற்றத்தை கண்முன் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்போது நான் ஒரு முன்னணி 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். புதிதாக ஒரு போட்டி சேனல் முளைத்திருந்த நேரம். ஒரு பழம்பெரும் இயக்குநர் காலமாகிவிட்டார் என்று தகவல் கிடைத்தது. ஆனால், உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம்… அவர் சில காலமாகவே நோய்வாய்ப்பட்டு சீரியசான நிலையில்தான் இருந்தார். அப்படியேதான் இருக்கிறார், இறக்கவில்லை என்று ஒரு செய்தியாளர் சொல்கிறார். இல்லை இறந்துவிட்டார் என்றுதான் சொல்கிறார்கள் என்கிறார் மற்றொரு செய்தியாளர். ஒவ்வொரு விநாடியும் எங்களுக்கு முக்கியம். உடனே பிளாஷ் போட வேண்டும். அடுத்த சேனல் போட்டுவிட்டால் நாங்கள் தோற்றுவிடுவோம். ‘சார், துணிந்து போட்டுருவோம். எனக்கு என்னவோ அவர் போயிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. எனக்கு உள்ளுணர்வு அதிகம்’ என்றார் உடனிருந்த உதவி ஆசிரியர். ‘ஒருவேளை அவர் உயிருடன் இருந்து இந்த பிளாஷ் செய்தியை அவரே மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்’ என்றேன். உயிர் போகிற அவசரம் என்பார்களே, அதை அடிக்கடி உணர ஆரம்பித்தோம்.
மெல்ல அடுத்தகட்டத்துக்கு முன்னேறினோம். கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் முக்கிய ஆட்டங்களின்போது, ‘இந்தியா வெற்றி…’, ‘இந்தியா தோல்வி..’ என இரண்டு விதமாக தயாராக அடித்து வைத்து காத்திருக்க ஆரம்பித்தோம். பேட்ஸ்மேனின் கை கடைசி ரன்னை அடித்துவிட்டு இறங்குவதற்குள் நாங்கள் முடிவை திரையில் ஓடவிட்டோம். ஒருமுறை இந்தியா மூன்று பந்துகளில் இரண்டு ரன் அடிக்க வேண்டும். வழக்கம் போல இரண்டு முடிவுகளையும் அடித்து வைத்து காத்திருந்தோம். 4-வது பந்தை பேட்ஸ்மேன் அடித்ததும், அந்த வேகத்தைப் பார்த்து அது ஃபோர்தான் என்று செய்தி அறையில் கத்தினார் ஒரு நண்பர். பதற்றத்திலும், ஆர்வமிகுதியிலும் ‘இந்தியா வெற்றி’ என்று பிளாஷ் போட்டுவிட்டார் டிக்கர் (திரையில் கீழே ஓடும் செய்திக்கு பெயர் டிக்கர்) அடிப்பவர். ஆனால், அந்தப் பந்தில் ரன் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்த பந்திலும் எந்த ரன்னும் இல்லை. இப்போது எஞ்சியிருப்பது ஒரு பந்து, தேவை இரண்டு ரன்கள். ஆனால் திரையில் இந்தியா வெற்றி என்று ஓடிக் கொண்டிருக்கிறது. எங்களின் பதற்றம், பயமாக மாறியது. ஓரிரு நிமிடம் சீக்கிரம் போட்டதைக் கூட சமாளித்துவிடலாம், தவறாக போய்விட்டால் அவ்வளவுதான்… இந்தியா ஜெயித்தால் மொட்டை போடுவதாக குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார் டிக்கர் அடித்தவர். சக்திவாய்ந்த தெய்வம், கடைசி பந்தில் இந்தியாவை ஜெயிக்க வைத்தது. டிக்கர் நண்பர் தன் தலையைக் கொடுத்து எங்களின் தலையைக் காத்தார்.
இதுபோன்ற நேரங்களில் இதயம் எகிறி வாய் வழியாக வந்துவிடுமோ என்று எண்ணும் அளவுக்கு அபரிமிதமாக துடித்தாலும், அந்த விறுவிறுப்பு எங்களுக்கு ஒருவித போதையைக் கொடுத்தது. நாங்கள் தொடர்ந்து துணிந்து விளையாடினோம். பரிணாம வளர்ச்சியில் அடுத்தகட்டமாக ஓபி வேன் (OB VAN) என்று சொல்லப்படும் வெளிப்புற படப்பிடிப்பு வேனை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கே செல்ல ஆரம்பித்தோம். பெரிதாக எந்த விஷயம் நடந்தாலும் ஓபி வேன் அங்கு சென்று சேர்ந்ததும், மணிக்கணக்கில் தொடர் நேரலைதான்.
செய்தி வாசிப்பாளர் அரங்கில் இருந்து சரமாரியாக கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும், ஸ்பாட்டில் இருக்கும் செய்தியாளர் முதல் களத் தகவல்களை சுடச்சுட சொல்வார். சில நேரங்களில் தகவல் தீர்ந்துவிட்டால், சொன்னதையே மீண்டும் வேறு வேறு வார்த்தைகளில் சொல்வார். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக செய்தி அறையிலேயே ஒரு மூத்த செய்தியாளரை நிறுத்தி, அந்தச் செய்தி தொடர்பான பல்வேறு கோணங்களையும் அலச வைத்தோம். இதனிடையே, சில விருந்தினர்களையும் அரங்கத்துக்கு அழைத்து வந்து கருத்து கேட்டோம். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடையும் முன்பே, எங்கள் தொலைக்காட்சி நிலையத்துக்கு பறந்து வந்த விருந்தினர்களை குறித்து வைத்துக் கொண்டு அடுத்தடுத்து நிகழ்வுகளுக்கு முதல் பத்திரிகையை அவர்களுக்கு வைப்பதை வழக்கமாகக் கொண்டோம். உசைன் போல்ட்டை மீஞ்சும் வேகத்தில் ஓடி, செய்திகளை முந்தித் தருவதை தலையாய கடமையாக செய்தோம், செய்து வருகிறோம்.
பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் ஜெயலலிதா ஜாமீன் மனு மீது நீதிபதி தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கும்போதே, அம்மாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்று யாரோ சொல்ல, அதை நம்பி நமது செய்திச் சேனல்கள் பிளாஷ் அடிக்க, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அதை நேரலையாக காட்டிக் கொண்டிருக்கும்போதே, ஜாமீன் கிடையாது என்ற தகவல் வர, அப்படியே பிளாஷை மாற்றிப் போட்டுவிட்டு, மீண்டும் தொடர்ந்தது நேரலை. இந்த முறை திமுகவினர் பட்டாசு வெடித்ததை காட்டினோம்.
என்னங்க இதெல்லாம் என்று கேட்டவர்களுக்கு, ‘அதுதான் சரி பண்ணியாச்சுல்ல… போ… போ… போய்க்கிட்டே இரு… அடுத்தச் செய்தி வருது, அது என்னன்னு பாரு…’ என்று அடுத்தகட்டத்தை நோக்கி பாய்ந்து முன்னேறினோம்.
இப்படித்தான் செய்திச் சேனல்களின் பரிணாம சக்கரம் சுற்றி சுற்றி, அதனது தொடர் சுழற்சிகளாலேயே மேலும் மேலும் வேகமெடுத்து இன்று தலைசுற்றுகிற வேகத்தில் சுழன்று கொண்டிருக்கிறது. வேகத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு, தரத்தில் கவனம் செலுத்தும் நேரம் நிறையவே குறைந்துவிட்டது. நீங்கள் திரையில் பார்க்கும் எழுத்துப் பிழைகளுக்கும், கருத்துப் பிழைகளுக்கும் அதுவே பிரதான காரணம்.
‘கொஞ்சம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை, பதறாம, நிதானமா விசாரிச்சுட்டு தப்பு இல்லாம சொல்லுங்க. நாங்கள் காத்திருந்து கேட்டுக் கொள்கிறோம்’ என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மீண்டும் மீடியா இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என்ன இருந்தாலும், வாழ்க்கை ஒரு வட்டம்தானே..!
– தி இந்து