சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இதனால் பிற ஜாதியினர் பாதிக்கப்படுவார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனிடையே, 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக 10 கேள்விகள்.
1. 2015 உலக வங்கி அறிக்கையின் படி 58% இந்தியர்களின் வருட வருமானம் ரூ. 79,200 க்கு குறைவு. 23% இந்தியர்களின் வருட வருமானம் ரூ. 32,000 க்கும் குறைவு. இது கண் முன்னே தெரியும் உண்மையாக இருக்கும் போது ஆண்டுக்கு 8 லட்சம் ஈட்டுவோருக்கு இட ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம்?
2. மூன்று முதல் ஐந்து சதவீதம் உள்ள பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு எந்த ஊர் நியாயம்? 3. இட பங்கீட்டினால் தகுதி திறமை பாதிக்கப்படும் என்று இது நாள் வரை தாங்கள் பேசி வந்தவை யாரை ஏமாற்றும் வேலை ? இப்போது குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடம் தருவதால் ‘தரம்’ பாதிக்கப்படாதா?
4. ஆண்டுக்கு 2.5 லட்சம் பணம் ஈட்டுபவர் வருமான வரி கட்டும் பணக்காரர். ஆனால் 8 லட்சம் வருடம் சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களா?
5. மேற்கூரையுடன் வீடோ அல்லது ஒரு சிறு மோட்டார் சக்கர வாகனமோ இருந்தால் ரேசன் கிடையாது. அவர்கள் பணக்காரர்கள். ஆனால் மாதம் 70,000 ரூபாய் ஈட்டி 1000 சதுர அடி வீட்டில் இருப்பவர்கள் நலிந்தவர்களா?
6. இந்துக்களுக்காக கட்சி நடத்துவதாக கூறும் பாஜக இது வரை குறிப்பிட்ட உயர் ஜாதியினருக்கு இல்லாமல் பிற இந்துக்களுக்கு செய்தது என்ன?
7. பெரும்பான்மை இந்துக்களான OBC /BC/MBC/ SC/ ST பிரிவினர் இட ஒதுக்கீடு பெற இயலாத வகையில் UGC யில் சட்டதிருத்தம் செய்துவிட்டு குறிப்பிட்ட உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதன் பின்னணி என்ன?
8. இட ஒதுக்கீட்டினால் தான் இழிவு வந்துவிட்டது என்று டாக்டர். கிருஷ்ணசாமி போன்றவர்கள் சொன்னார்கள். இப்போது தரப்படும் 10% இடஒதுக்கீட்டினால் குறிப்பிட்ட உயர் ஜாதியினர் இழிஜாதி ஆகிவிட்டனர் அப்படித்தானே?
9. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமா அல்லது அனைத்து சாதியினரும் ஜனநாயக பிரதிநிதித்துவம் பெறும் திட்டமா ?
10. குறிப்பிட்ட உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு எனில் நீட் தேர்வு எதற்கு ? எந்த வகை ‘தரத்தை’ நீங்கள் கொண்டு வரபார்க்கின்றீர்கள் ???