துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் இந்திய அரங்கில் மாநில அரசுகளும் தங்கள் அரங்குகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, துபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துபாய் சென்றடைந்தார். அங்கு தமிழ்நாடு அரங்கை முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் நேற்று திறண்டுவைத்தார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபாவில் உள்ள திரையில் தமிழ் மற்றும் தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார்.
தமிழ்நாடு வார விழாவை ஒட்டி துபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது. மேலும், அந்த திரையில் ஒளிபரப்பப்பட்ட செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலையும் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கேட்டு ரசித்தார்.
3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது.
குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்.
இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! pic.twitter.com/Thu2C7kPB2
— M.K.Stalin (@mkstalin) March 25, 2022