அரசியல், உலகம், சிந்தனைக் களம், தேர்தல்

உலகின் மூத்த ஜனநாயகம் சொல்லும் செய்தி

இழுபறியாக நீடித்துவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் பெரும்பான்மை உறுதியாகிவிட்டது. எனினும், செனட் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. தேர்தலுக்குப் பிறகு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளை எண்ணக் கூடாது என்றும் அவற்றில் மிகப் பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாகவும் ட்ரம்ப் மேற்கொண்டுவரும் பிரச்சாரமும் சட்டரீதியான நடவடிக்கைகளும் ஜோ பைடன் பதவியேற்றுக்கொள்வதைத் தாமதப்படுத்தக்கூடும். எனினும், உலகின் மூத்த ஜனநாயக நாடான அமெரிக்கா இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நடத்தி முடித்திருக்கும் அதிபர் தேர்தல் உலகெங்கும் உள்ள ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் நம்பிக்கையளிக்கும் பல செய்திகளை வழங்கியிருக்கிறது.

அமெரிக்காவில் இதுவரையில் இல்லாத அளவில் பெருவாரியான மக்கள் தேர்தலில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதோடு, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன், தேர்வுக் குழு வாக்குகளில் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாக்குகளின் சதவீதத்திலும் முன்னிலை வகிக்கிறார். ஜோ பைடன் 7.3 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மிகப் பெரும் சாதனையைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சி இதுவரையில் இப்படியொரு வெற்றியைப் பெற்றதில்லை என்பது முக்கியமானது. கடந்த அதிபர் தேர்தலில் அதிக சதவீதத்தில் வாக்குகளைப் பெற்றும்கூட ஹிலாரி கிளிண்டனால் தேர்வுக் குழு வாக்குகளில் பெரும்பான்மை பெற முடியாமல் தோல்வியடைய நேரிட்டது. இந்தத் தேர்தலில் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒருவர் அதிபராகியிருக்கிறார் என்ற வகையில் மிகவும் முக்கியமானது.

அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மிக விரைவில் ஒரு கோடியை எட்டப்போகிறது. ஏறக்குறைய 2,30,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் அடுத்த அதிபர் அறிவியலுக்கு மதிப்பளிப்பதோடு முகக்கவச உபயோகம், தனிமனித இடைவெளி, பொது முடக்கம் ஆகியவற்றுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதைப்போலவே, குடியேறியவர்களைத் தவறாகச் சித்தரிக்கும் பிரச்சாரங்களுக்கு அஞ்சாமல் நடைமுறைக்குத் தகுந்ததும் வலுவானதுமான ஒரு நிதிக் கொள்கையே அமெரிக்கப் பொருளாதாரத்தின் உடனடித் தேவை என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இறுதியாக, வெள்ளை நிறத்தவரின் ஆதிக்க மனோபாவம், பெண்களின் கருவுறும் உரிமை குறித்த பிற்போக்குவாதம், வெள்ளை இனத்தவருக்கு ஆதரவாகவும் குடியேறியவர்களுக்கு எதிராகவுமான பாரபட்சப் போக்கு, பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கத்தினரை மதிப்புக்குறைவாக நடத்துவது போன்ற ‘ட்ரம்பிசம்’, வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் விடைபெறும் நாளிலேயே வெளியேற்றப்பட வேண்டும்.

ஒபாமா குறிப்பிட்டிருப்பது போல, இதற்கு முன் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற அனைவரைக் காட்டிலும் பைடன் மிகவும் கடுமையாக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்ட ஜனநாயக விழுமியங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்யும் பெரும் பொறுப்பு அவர் மீது விழுந்திருக்கிறது. இதன் வாயிலாக, தனது அமைப்பின் குறைகளைத் தானே நிவர்த்தித்துக்கொள்ளும் கூறையும் ஜனநாயகம் கொண்டிருக்கிறது என்ற அழுத்தமான செய்தியை உலகத்துக்கு அமெரிக்கா எடுத்துக்காட்டியிருக்கிறது.

SOURCE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *