உலகம், சிந்தனைக் களம், பயங்கரவாதம், விமர்சனம்

உலகை உலுக்கிய புகைப்படங்கள்! ஹிரோஷிமா – நாகசாகி

ஹிரோஷிமா – நாகசாகி அழிவுகளையும், மரணங்களையும் பதிவு செய்த புகைப்படக்காரர்கள்!

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி இன்றோடு எழுபது ஆண்டுகள் முடிவடைந்துவிட்டாலும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் குறையவில்லை. வெள்ளைக் காளான்கள் போல் இருக்கும் இந்த இரு படங்களையும் சிறு குழந்தைகள் பார்த்த மாத்திரத்தில் சட்டென சொல்லிவிடுவார்கள் ஹிரோஷிமா – நாகசாகி என்று. லட்சக்கணக்கான மக்கள் உடல் பொசுங்கி பலியாவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அமெரிக்க உளவுத்துறையின் விமானப்படையால் எடுக்கப்பட்டதுதான் இந்த இரு படங்கள்.

Hiroshima

1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமாவிலும் அதைத் தொடர்ந்து 9ஆம் தேதி நாகசாகியிலும் போடப்பட்டன. லிட்டில் பாய் (Little Boy) என்று பெயர் வைக்கப்பட்ட யுரேனியம் அணுகுண்டு (A uranium gun-type atomic bomb) ஹிரோஷிமாவிலும், புளூட்டோனியம் (plutonium) அணுகுண்டை நாகாசாகியிலும் பயன்படுத்தப்பட்டது. இரும்பையே உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வீசப்பட்ட இந்த இரண்டு குண்டுகளும் சுமார் 8 கிலோ மீட்டர் அளவிற்கு பாதிப்பை அப்போது ஏற்படுத்தியது. இதன் விளைவாக இரண்டிலிருந்து நான்கு மாதங்களுக்குள் ஒன்றரை லட்சம் பேர் ஹிரோஷிமாலும், எண்பதாயிரம் பேர் நாகசாகியில் இறந்ததாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்போதே உடல் பொசுங்கி இறந்துவிட்டதாக தகவல்கள் பதிவாகியிருக்கிறது. மற்றவர்கள் மோசமான தீக்காயங்கள், கதிர்வீச்சி, உணவு பற்றாக்குறை காரணமாக இறந்தனர். இதுபோக மாதக்கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. இந்தக் கோரமான சம்பவத்தை அணுகுண்டு வீச்சின் சூடு குறைவதற்குள்ளாகவே அப்போது ஏற்பட்ட அழிவுகளையும், மரணங்களையும் உடனே பதிவு செய்தவர்கள் யோஷிட்டோ மட்சுஷிக் (Yoshito Matsushige), யோசுக்கே யமஹாட்டா (Yosuke Yamahata) என்ற இரண்டு புகைப்படக்காரர்கள் மட்டுமே. காலத்தை வென்று நிற்கும் அந்த புகைப்படங்களைப் பற்றியும், உயிரையும் பொருட்படுத்தாமல் அதனைப் புகைப்படங்களாக பதிவு செய்த இவர்களை பற்றியும் பார்ப்போம்.

ஹிரோஷிமா:

Hiroshima 1

யோஷிட்டோ மட்சுஷிக் (Yoshito Matsushige) என்ற இவர் சுகோகு ஷிம்புன் (Chugoku Shimbun) என்ற ஜப்பான் பத்திரிகையில் புகைப்படப் பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 1945, 6ஆம் தேதி ஹிரோஷிமா மீது அமெரிக்க இராணுவம் அணுகுண்டை வீசிய இடத்திலிருந்து  2.7 கிலோ மீட்டர் தொலைவில்தான் இவர் வீடும் இருந்ததால் அந்த குண்டு வீச்சால் இவரும் படுகாயமடைந்தார். தன் உடல் முழுவதும் ரத்தம் வடிந்த நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் கொடூர அழிவின் சாட்சியாக நின்று அவைகளை தனது கேமராவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். கேமராவின் கிளிக் பட்டனைக் கூட அழுத்த முடியாததால் வெறும் ஐந்து படங்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அந்த பிலிம் ரோல்களை  உடனே டெவலப் செய்ய முடியவில்லை. காரணம் அனைத்துக் கட்டடங்களும் இடிந்துவிட்டதால் இருட்டறை (Dark room) வசதி இல்லாமல் போனது. அதன்பின் இருபது நாட்களுக்குப் பிறகு ஒரு இரவு நேரத்தில் நதியோரம் அமர்ந்து அந்த பிலிம் ரோல்களை டெவலப் செய்து அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். பெரியவர்களும் குழந்தைகளுமாக உடையும் சதையும் பிய்ந்து தொங்கிய நிலையில், என்ன நடந்தது என்றே தெரியாமல் அமர்ந்திருப்பதையும், நொடிப்பொழுதில் தரைமட்டமாகிப் போன நகரம் என இந்தப் படத்தைப் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்து விடும்.

பத்திரிகைக்கு இவர் அளித்த பேட்டியில், “நான் காலை நேர உணவு அருந்திவிட்டு வேலைக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது எந்தவித ஓசையும் இல்லாமல் ஃப்ளாஷ் போன்ற ஒரு வெளிச்சம் வந்தது. வெளியே வந்து அந்த வெளிச்சத்தை பார்த்தபோது எனக்கு கண் தெரியவில்லையோ என்று பயந்துவிட்டேன். அப்போது ஆயிரக்கணக்கான ஊசிகள் ஒட்டுமொத்தமாக உடலில் குத்தியது போன்ற வலியை உணர்ந்தேன். அப்போது என் வீடும் முழுமையாக இடிந்து விழுந்தது. உடனே இராணுவத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட உடைய அணிந்து கொண்டு சற்று தூரம் சென்று பார்த்தபோது அந்தப் பகுதி முழுவதும் வெறும் கூக்குரல்களும் இடிபாடுகளுமாகக் காட்சியளித்தது. முதலில் அலுவலகம் செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் மியூக்கி பாலம் (Miyuki bridge) அருகே இருந்த போலீஸ் அறை அருகே குண்டுனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவருமே பிய்ந்து தொங்கும் சதைகளோடு அங்கே நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அப்போது கேமராவினை தூக்கி படம் எடுக்க முயன்றேன். ஆனால் வியூ ஃபைண்டரில் முழுவதும் எனது கண்ணீரால் நிரம்பியதால் ஒன்றுமே தெரியவில்லை என்ற போதிலும் படம் எடுத்தேன். அப்போது அந்த மக்கள் என்னை கேவலமாகத்தான் நினைத்தார்கள். இருந்தாலும் என்னுடைய  கடமையை செய்ய நான் போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். இந்த அதிர்வில் தட்டுத்தடுமாறி பொறுமையாக வந்து கொண்டிருந்த ஒரு காரினுள் எட்டிப் பார்த்தபோது அதில் பயனித்த 15 பேரும் பிணங்களாக இருந்தார்கள். எங்கள் அலுவலகம் பிரசுரிக்காது என்பதால் பெரும்பாலும் பிணங்களையும் நிர்வாணங்களையும் நான் படம் எடுக்கவில்லை” என தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கே இராணுவப் போட்டோகிராபர்கள் இருந்தாலும் மிகவும் கொடூரமாக இருந்ததால் இந்த சம்பவத்தை யாரும் போட்டோ எடுக்கவில்லை. சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இறந்த துயர சம்பவத்தை இந்த சம்பவத்தை உடனே பதிவு செய்தவர் இவர் மட்டுமே.

நாகசாகி:

Nagasaki

யோசுக்கே யமஹாட்டா (Yōsuke Yamahata) என்ற இவர் சிங்கப்பூரில் பிறந்தவர். இவரின் அப்பாவும் சிங்கப்பூரில் பெரிய போட்டோகிராபர் என்பதால் 1925ல் டோக்கியோவில் படிக்க வந்த இவர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தார். சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இராணுவ போட்டோகிராபராக பணியாற்றியிருக்கிறார். நாகசாகியில் குண்டு வீசப்பட்ட மறுநாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று அதன் பாதிப்புகளையும் அதில் பாதிக்கப்பட்ட மக்களையும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தார். ஆகஸ்ட் 21ஆம் தேதி மைனிச்சி ஷின்புன் (Mainichi Shinbun) என்ற ஜப்பானிய பத்திரிகையில் இவரது படங்கள் வெளி வந்தது. அப்போதுதான் ஜப்பானுக்கே இந்தக் கொடூரத் தாக்குதலின் முழு வீரியமும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் உடனே நேச நாட்டுப் படைகளின் தலைமை இந்தப் படங்களை மேற்கொண்டு வெளியிட தடை விதிக்க, அந்தத் தடை 1952 வரை நீடித்தது. அதன்பிறகு சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு லைஃப் (Life) என்ற பத்திரிகையில் மீண்டும் இந்தப் படங்கள் வெளிவந்த பிறகுதான் உலக நாடுகளுக்கு கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றி முழுமையான அளவில் தெரிய வந்தது.

அப்போது ஒரு பத்திரிகைக்கு யோசுக்கே யமஹாட்டா அளித்த பேட்டியில், “மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக் கூடியது. அதேபோல அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும் காலத்திற்கு தகுந்தது போல மாறிக்கொண்டே வரும். ஆனால் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண் முன்னே நிறுத்தும். இப்போது நாம் ஹீரோஷிமா, நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடுகள் இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலமாக அந்தக் கொடூரங்களையும் கோரங்களையும் பார்க்கமுடியும்” என்று கூறியிருக்கிறார்.

கதிர் வீச்சு காரணமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட யோசுக்கே யமஹாட்டா  1965ல் தனது 48வது வயதில் இறந்துவிடுகிறார். முகம் முழுவதும் இரத்தக் காயங்களுடன் தன் தாயிடம் பால் குடிக்கும் குழந்தை, முகத்தில் காயங்களுடன் கையில் உணவுப் பண்டத்துடன் வெறித்துப் பார்க்கும் சிறுமி, தரை மட்டமான கோயில் என ஒவ்வொரு படத்திலும் நாகசாகியின் அழிவை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

உலக வரலாற்றில் போர்கள் பல நடைபெற்றிருந்தாலும் இரண்டாவது உலகப்போர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் வழக்கமான போர்கள் என்பது இரு தனி நாடுகளுக்குள் ஏற்படுவது. ஆனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சுநாடுகள் (ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி) – நேச நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, சீனா) என இரு அணிகளாக பிரிந்து போரில் ஈடுபட்டது இரண்டாம் உலகப் போரில்தான். 1939ல் ஆரம்பித்த உலகப் போர் 1945ல் ஜப்பான் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது. இதுவரை உலக வரலாற்றில் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்களில் இதுவே மோசமானது என்கிறது ஆய்வறிக்கைகள். அணுகுண்டுகள் ஏற்படுத்தும் பேராபத்துகளையும் அதனால் ஏற்படும் அழிவுகள் எப்படி இருக்கும் என்பதையும் இந்தப் படங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும் அடுத்து ஓர் அசம்பாவிதம் ஏற்படாதவரை.

– ஆனந்த விகடன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *