கட்டுரை, பொருளாதாரம், வர்த்தகம்

எண்ணெய்ச் சந்தையை இனி ஆளப்போவது யார்?

oil PRICE AND DEMAND

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை கடந்த செப்டம்பருக்குப் பிறகு 50% சரிந்துவிட்டது. எண்ணெய்த் துறையைப் பொறுத்தவரையில் வரலாறு மீண்டும் திரும்பியிருப்பதாகவே கருத இடமிருக்கிறது. பல பத்தாண்டுகளாக எண்ணெய் விலை, உற்பத்தி இரண்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக சவூதி அரேபியாவும் பாரசீக வளைகுடா நாடுகளும்தான் இருந்தன.

தங்களுடைய எண்ணெய் வயல்களின் வளம் காரணமாக, சர்வதேசச் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், உபரி ஏற்பட்டாலும் அதற்கேற்ப எண்ணெய் எடுப்பதைக் குறுகிய காலத்தில் கூட்டவும் குறைக்கவும் வல்லமை பெற்றவையாக அவை இருந்தன.

வியன்னாவில் கடந்த ஆண்டு நவம்பர் 27-ல் நடந்த ‘எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நாடு’களின் (ஓபெக்) கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற சவூதி எண்ணெய்த் துறை அமைச்சர் அலி-அல்-நைமி, “எண்ணெய் விலையை இனி சந்தையே தீர்மானித்துக்கொள்ளும்” என்று தெரிவித்தார். அது ஒருமனதான முடிவு அல்ல. மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலாவும் ஈரானும் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து, விலை அதிகரிக்க உதவ வேண்டும் என்று கோரின. “இது எங்களுக்கு எதிரான சதி, எண்ணெயை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது சவூதி அரேபியா” என்று ஈரான் பிறகு குற்றஞ்சாட்டியது.

விலையைச் சந்தையே தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று சவூதி கூறியதற்குக் காரணம், சமீப காலமாக எண்ணெய் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் அமெரிக்காவே அதை முடிவு செய்யட்டும் என்பதற்காகத்தான். சவூதி அரசர் அப்துல்லாவின் மறைவுக்குப் பிறகு பதவியேற்றிருக்கும் மன்னர் சல்மான் ஆட்சியிலும் இதே நிலை தொடரும்.

டெக்சாஸ் கொடிகட்டிப் பறந்தது

ஒரு காலத்தில் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் முக்கியக் கேந்திரமாக ‘டெக்சாஸ் ரெயில்ரோட் கமிஷன்’ என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் இருந்தது. 1970 வாக்கில் ஒரு நாளைக்கு 96 லட்சம் பீப்பாய்கள் என்ற அதிகபட்ச உற்பத்தி அளவை எட்டியது அந்த நிறுவனம். பிறகு, படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்ததால் வீழ்ச்சியைச் சந்தித்தது. பிறகு, மீண்டும் எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துக்கொண்டே வந்தது. 2008 வாக்கில் அதன் மொத்தத் தேவையில் 50%-ஐ உற்பத்தி செய்தது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற உயர் அளவைத் தொட்டது. இனி, எண்ணெய்க்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்ற அச்சமும் ஏற்பட்டது.

உற்பத்தியில் புரட்சி

அப்போதுதான் அமெரிக்காவில் இயற்கை எரிவாயு, கச்சா பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி பெருகியது. புரட்சிகரமான உற்பத்தி முறையால், மிக ஆழத்தில் பாறைக்கடியில் இருந்த எண்ணெய் அல்லது எரிவாயு, குழாய் வழியாக வெளியே கொண்டுவரப்பட்டது. அந்தத் தொழில்நுட்ப முறையை ‘பிராக்கிங்’ என்று அழைக்கிறார்கள். இதை மேற்கொண்ட ஷேல் நிறுவனம், இயற்கை எரிவாயு உற்பத்தியில் அமெரிக்காவுக்கு முதலிடத்தைப் பெற்றுத் தந்தது. ரஷ்யா அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டது.

2014 இறுதியில் அமெரிக்க எண்ணெய் உற்பத்தி 2008-ல் இருந்ததைவிட 80% அதிகமானது. அன்றாடம் 41 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு என்பது, ஓபெக் அமைப்பில் உள்ள (சவூதி அரேபியாவைத் தவிர) பிற நாடுகளைவிட அதிகமாகும்.

உற்பத்தி இந்த அளவுக்குப் பெருகியிருந்தாலும் சர்வதேசச் சந்தையில் விலை ஒரேயடியாகச் சரிந்துவிடாததற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. வளரும் நாடுகள் அதிக அளவில் எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. சீனா இதில் முதலிடம் வகிக்கிறது. லிபியா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போர் காரணமாக எண்ணெய் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டதால் சர்வதேசச் சந்தைக்கு வரும் எண்ணெய் அளவு குறைந்துவிட்டது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை முழுமையாக விலக்கப்படாததால், அன்றாடம் பத்து லட்சம் பீப்பாய் எண்ணெய் சந்தைக்கு வருவதில்லை.

ஷேல் நிறுவனம் மட்டும் எண்ணெய் உற்பத்தியில் சாதனை படைக்காவிட்டால், ஈரான் மீதான தடை இந்நேரம் நீங்கியிருக்கும். ஈரானும் தன்னுடைய அணு நிலையம் தொடர்பாக இப்படிப் பிற நாடுகளுடன் சமரசம் பேச வேண்டிய சூழல் வந்திருக்காது.

யாருமே எதிர்பாராதது

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய விலை இப்படி ஒரேயடியாகச் சரியும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால், வளரும் நாடுகளுக்கு ஆதாயம்தான். ஆனால், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. விலைச் சரிவு காரணமாக, வருவாய் குறைந்துவருகிறது. எனவே, நிறுவனங்கள் தங்களுடைய செலவுகளைக் குறைத்துகொண்டுவருகின்றன. புதிய எண்ணெய் வயல்களை அடையாளம் காண்பதையும் அடையாளம் கண்டதிலிருந்து எண்ணெய் எடுப்பதையும் தள்ளிவைத்துள்ளன.

எண்ணெய் விலை குறைந்திருப்பதால் பொருளாதார மீட்சி ஏற்பட்டு எண்ணெய்க்குத் தேவை அதிகரிக்கும் என்று சவூதி அரேபியா எதிர்பார்க்கிறது. கையிருப்பில் அந்நியச் செலாவணி நிறைய இருப்பதால், சவூதி அரேபியாவும் பாரசீக வளைகுடாவைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கும் அதிக பாதிப்பில்லை. பிற நாடுகளின் நிலை அப்படியல்ல. வெனிசுலாவின் நிதிநிலைமை படுமோசமாகி விடும் நிலையில் இருக்கிறது.

ரஷ்யாவின் வருவாயில் 40% எண்ணெய் விற்பனையிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே, இந்த விலைச்சரிவு அதைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அத்துடன் உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதன் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையும் பெரிய சுமையாக அதை அழுத்திக்கொண்டிருக்கிறது.

2 டிரில்லியன் டாலர்கள்

எண்ணெய் விலை சரிவால், எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்குக் கூடுதலாகக் கிடைக்க வேண்டிய 2 லட்சம் டிரில்லியன் டாலர்கள், எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மிச்சமாகிவிட்டது. ஜப்பானுக்கு இதனால் நிறைய லாபம். சீனாவுக்கும் அப்படியே. அமெரிக்க நுகர்வோருக்கும் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கிறது. அதே சமயம் புதிய எண்ணெய்க் கிணறுகளையும் எரிவாயுக் கிணறுகளையும் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது.

இப்போது உலக எண்ணெய்ச் சந்தையைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்காவின் ஷேல் நிறுவனம் இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலைமை இல்லை. இப்போது எண்ணெய் ஒரு பீப்பாய் 50 டாலர்களாக இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பாதி வரையில் அன்றாடம் 5 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவுக்கு ஷேல் நிறுவனம் எண்ணெயை உற்பத்தி செய்யக்கூடும். அதற்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சி தேக்கமடையும். அப்போது செலவைக் குறைத்தும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தியும் மேலும் லாபம் ஈட்டப் பார்க்கும்.

2016-லும் இதே விலைக்கு விற்றால், உற்பத்தியை அமெரிக்காவும் குறைக்க நேரும். உலகின் பிற எண்ணெய் வள நாடுகளும் உற்பத்தியைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வரும். அந்த நேரம், பொருளாதாரமும் மீட்சி அடைந்து எண்ணெய்க்கு கிராக்கி அதிகரிக்கும். விலை மறுபடியும் உயரத் தொடங்கும். ஒரு பீப்பாய் 100 டாலர் என்கிற அளவுக்கு விலை இரட்டிப்பாகக்கூட மாறும். அப்போதும் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலை மேலும் உயராமல் தடுக்கக்கூடிய பொருளாதார பலம் ஷேல் நிறுவனத்திடம் இருக்கும்.

– © ‘தி நியூயார்க் டைம்ஸ்’,
தமிழில்: சாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *