இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, கருப்பு அழகிய நிறமல்ல என்ற பரவலான தப்பபிப்பிராயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.
நம் நாட்டைப் போலவே, ஆப்பிரிக்கச் சந்தையிலும் சிவப்பழகூட்டிகளின் ஆக்கிரமிப்பு அதிகம். உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின்படி நைஜீரியர்கள்தான் இதில் முன்னணி. 77% நைஜீரியர்கள் சிவப்பழகூட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு அடுத்ததாக டோகோ நாட்டினர் 59%, தென்னாப்பிரிக்கர்கள் 35%, மாலி நாட்டினர் 25%.
இது எல்லாமே தெரிவிக்கும் உண்மை என்ன? காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டாலும் ஆப்பிரிக்கா வெள்ளை ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. அவர்களுடைய நிறம் தாழ்வானது என்ற உணர்வையும், அந்த நிறத்தின் காரணமாக ஆங்கிலேயர் உள்ளிட்ட வெள்ளை நிறத்தவர்களுக்கு இணையாகக் கருப்பினத்தவர்கள் என்றுமே கருதப்பட முடியாது என்ற உணர்வையும் ஆப்பிரிக்கர்களின் ஆழ்மனதில் ஆங்கிலேயர்கள் விதைத்துவிட்டுப் போய்விட்டதன் விளைவு. ஆதிக்கத்தைத் தொடர்வதற்கு இதுவும் ஒரு ராஜதந்திரம்தான்.
எனினும், இந்த எண்ணத்திலிருந்து விடுபட ஆப்பிரிக்கா முயன்று கொண்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஆபத்தான வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கும் சிவப்பழகூட்டிகளைத் தென்னாப் பிரிக்கா தடைசெய்திருக்கிறது. ஜிம்பாப்வேயில் சிவப்பழகூட்டிகளுக்குத் தடை இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது ஐவரி கோஸ்ட்.
ஆப்பிரிக்கக் கதை ஒரு பக்கம் இருக்கட்டும்… ஆப்பிரிக்க நாடுகளின் மொத்த மக்கள்தொகையையும் (110 கோடி) சேர்த்தால்கூட இந்திய மக்கள் தொகைக்கு (125 கோடி) அருகில் வராது. ஆக, உலகிலேயே சிவப் பழகூட்டிகளின் மிகப் பெரிய சந்தை இந்தியாதான். ஆண்டுதோறும் சுமார் ரூ. 3,000 கோடி வியாபாரம்! இந்தியர்களின் தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டு கொழிக்கும் சந்தை இது. இந்தச் சிவப்பழகூட்டி களால் சாதாரண தோல் அழற்சியிலிருந்து புற்றுநோய் வரை ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து பேசியும் எச்சரித்தும்வருகிறது மருத் துவச் சமூகம். இத்தகைய நோய்களின் சிகிச்சைக்காக ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடிகளைச் செலவிடவும் செய்கிறோம். ஆனாலும், பயன் என்ன? கண்ணை இறுக மூடிக்கொண்டிருக்கிறது அரசாங்கம்.
நிறபேதமை என்பது இந்தியர்களின் மனதில் உறைந்திருப்பது. இந்தியாவில் ஆண்டுதோறும் வெளியாகும் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதாநாயகிகளில் 99% பேர் ‘சிவப்பழகு’ கொண்டவர்கள் என்பது ஒன்று போதும் நம் சிவப்பழகு மோகத்துக்கு உதாரணம்.
ஆனால், சமூகத்தில் மனம் காலங்காலமாக இப்படி இருக்கிறது என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு அரசாங்கம் தன்னுடைய தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. சிவப்பழகு மோகத்துக்கு அணை போடவில்லையென்றால், மிகப் பெரிய சமூகவியல் பிரச்சினையை மட்டுமல்ல, உடல்ரீதியிலான பெரும் பாதிப்புகளையும் இந்தியா எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும்படி ஆகிவிடும். சிவப்பழகு மோகத்தின் மீது கரியைப் பூசுவதற்கு இனியும் தாமதித்துவிடக் கூடாது.