ஆரோக்கியம்

எமனான சாக்லேட் மில்க், பானிபூரி… சென்னையில் 11 வயது சிறுவன் பலி

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த மணிகண்டன்- திவ்யா தம்பதிக்கு, யுவராஜ்(12) வசந்தகுமார்(11), ஈஸ்வரன்(8) என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளன. இவர்கள் துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணன், தம்பி மற்றும் உறவினர் மகன் ஆகியோருடன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த வசந்தகுமார், அங்கிருந்த சாலையோர கடையில் 5 ரூபாய்க்கு சாக்லேட் மில்க் வாங்கி குடித்துள்ளான்.

இதைத்தொடர்ந்து, மற்றொரு கடையில் பானிபூரி சாப்பிட்டுவிட்டு, வீட்டருகே வந்தபோது வலிப்பு ஏற்பட்டுள்ளது.

அக்கம் பக்கதினர், சிறுவனை மீட்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அச்சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உடலை கைப்பற்றிய கண்ணகி நகர் போலீசார், உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பெட்டிகடைக்காரர் பெத்தராஜ் உள்ளிட்ட நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் மரணத்திற்கு காரணம் குளிர் பானமா? பானிபூரியா? அல்லது இரண்டும் சேர்ந்ததால் நச்சுத்தன்மை ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என மருத்துவரிடம் காவல் துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *