அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாள் என்று கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இது குறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக நடந்த மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகஅறிவித்தது போல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை சமத்துவ நாள் என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அந்த  கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அண்ணலுடைய முழு அளவு வெண்கலச் சிலையை நிறுவ வேண்டுமென்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் தொல். திருமாவளவன் முன்வைத்தார். அதனையும் ஏற்று, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, பெரியாருடைய நூல்களை 21 மொழிகளில் மொழி பெயர்த்ததைப் பாராட்டியதோடு, அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்துப் புதுப்பிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்.  அந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக அரசால் அண்ணலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *