உக்ரைன் போரின் எதிரொலியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைனின் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி உலகையே அதிர வைத்துள்ளது.

ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் 47 உறுப்பினர்களை கொண்டது. இதன் உறுப்பினர்கள் ஐ.நா. சபையின் 193 உறுப்பு நாடுகளால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த கவுன்சிலில் ரஷ்யாவும் உறுப்பு நாடாக இருக்கிறது. உக்ரைனில் உள்ள புச்சா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பல்வேறு பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளானதாக புகார் எழுந்த நிலையில், மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தது. இந்தநிலையில், 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும் 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. 3-ல் 2 பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவானது என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரஷ்யா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல் புறக்கணித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *