கட்டுரை, சிந்தனைக் களம், சுற்றுப்புறம், தமிழ்நாடு

கஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்!

சில ஆண்டுகளாகவே, கன மழை, வெள்ளம், வறட்சி என்று அடுத்தடுத்து பாதிப்புகளைச் சந்தித்துவரும் தமிழ்நாடு, இந்த முறை கஜா புயலால் மிகப் பெரிய பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்த இந்தப் புயலின் காரணமாக, காவிரிப் படுகையே உருக்குலைந்து கிடக்கிறது. வழக்கமான புயல் பாதிப்பு என்று இதைக் கடந்துவிட முடியாது.

இதை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும். வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கஜா புயலாக உருவெடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் தருணத்திலேயே ஏழு மாவட்டங்களும் படபடத்தன. இதுவரை குறைந்தது 45 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. எண்ணற்ற வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் மின்கம்பங்கள் விழுந்திருக்கின்றன. லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நெற்பயிர்களும் கரும்பும் அழிந்திருக்கின்றன.

காவிரிப் படுகையில், விவசாயம் கைவிடும்போதெல்லாம் விவசாயிகளுக்குத் துணை நிற்கும் தென்னை மரங்கள் மிகப் பெரிய அளவில் வீழ்ந்திருப்பது இந்தப் புயலின் கொடூரத் தாக்குதல்களில் ஒன்று. அதேபோல உற்ற துணையான கால்நடைகளையும் பலர் இழந்திருக்கிறார்கள். மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருப்பதால் பல ஊர்கள் இருளில் மூழ்கியிருக்கின்றன. போக்குவரத்து தகவல் தொடர்பிலும் தடைகள் இருப்பதால், பாதிக்கப்பட்டோரை உதவிகள் சென்றடைவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் குடிநீருக்கே திண்டாடுகிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான திட்டமிடலில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழக அரசு பணியாற்றியதைப் பார்க்க முடிந்தது. ஆனால், ஏற்பட்டிருக்கும் உயிர்ச் சேதங்கள் நாம் பேரிடர்களை எதிர்கொள்ள இன்னமும் முழு அளவில் தயாராகவில்லை என்பதையே காட்டுகின்றன. புயல், வெள்ளத்தை எதிர்கொள்வதில் ஒடிஷாவிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல கிராமங்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து யாரும் இதுவரை வரவில்லை என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளிக்கிறார்கள். இது பெரும் அவலம்.

இக்கட்டான இத்தகைய தருணங்களில் முதலமைச்சர் பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்தால், களத்தில் அரசு ஊழியர்களுக்கு நேரடியான உத்தரவுகளை வழங்கவும் பணிகளை உத்வேகப்படுத்தவும் உதவும். முன்னரே திட்டமிட்ட நிகழ்ச்சிகளுக்காகப் பயணத்தைத் தள்ளிப்போடுகிறேன் என்று அவர் சொல்லியிருப்பது சரியான செயல் அல்ல. மாறாக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், அமைச்சர்களும் அங்கு சென்றிருப்பது ஓர் ஆறுதல்.

ஒவ்வொரு பேரிடரின்போதும் அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உணர்த்தப்படுகின்றன. இந்த முறை கஜா புயலும் புதிய பாடங்களை உணர்த்தியிருக்கிறது. வருவாய்த் துறையை முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட வீடுகள், பலியான கால்நடைகளின் எண்ணிக்கை, முறிந்து விழுந்த மரங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுக்க வேண்டும். முதற்கட்டமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளையும் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை மீண்டும் கட்டுவதற்கான உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை ஆகிய அரசுத் துறைகளோடு தன்னார்வ அமைப்புகளும் கைகோத்துச் செயல்பட வேண்டிய தருணமிது.

பெரும்பாலான ஊர்களில் சாலைகளில் வீழ்ந்துகிடக்கும் மரங்களை மக்களே வெட்டி வழிகளைச் சரிசெய்துகொண்டிருக்கிறார்கள். சில கிராமங்களில் ஜெனரேட்டர்களைக் கொண்டு மக்களே குடிநீருக்கான ஏற்பாடுகளைச் சரிசெய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்தும் தன்னார்வலர்கள் உதவச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இடர்மிகு தருணங்களில் நமக்கு நாமே உதவிக்கொள்வதன் வாயிலாகத்தான் கடந்த காலங்களில் எல்லாப் பேரிடர்களிலிருந்தும் நாம் எழுந்துவந்திருக்கிறோம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் உணவு பரிமாறுபவர்கள் காவிரி விவசாயிகள். ஏற்பட்டிருப்பது பேரிழப்பு. நிலைகுலைந்திருக்கும் நம் விவசாயிகளின் துயரத்தைப் போக்க நாம் ஒவ்வொருவரும் கை கோக்க வேண்டும். தமிழகம் இந்தப் பேரிடரிலிருந்து மீண்டுவருவதற்கு மத்திய அரசும் உதவ வேண்டும்!

-தி ஹிந்து 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *