ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தற்போது அதிமுகவில் நிலவும் போட்டி விமர்சனங்கள், கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் அக்கட்சியின் ராணுவ கட்டுப்பாடு கலைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை, அவரை மீறி கட்சியில் எந்த விஷயமும் நடந்துவிடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தவறியதில்லை. மேலும், எந்த விஷயத்திலும் அவர் உத்தரவின்றி யாரும் எதையும் செய்துவிட முடியாது; எவரையும் விமர் சித்து விடவும் முடியாது. இதற்கு சசிகலா புஷ்பா உட்பட பல உதாரணங் களை சொல்லலாம். அவரது துணிவை யும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் கட் சியை நடத்தியதையும் எதிர்க்கட்சி கள்கூட இன்று வரை பாராட்டுகின்றன. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக் குப்பின் அதிமுகவில் நடக்கும் நிகழ்வு கள், அக்கட்சியின் ராணுவக்கட்டுப்பாடு கலைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானதும், அவரை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கும்போது சக அமைச்சர்களே அந்த கோரிக்கையை வைத்தனர். இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் பலர் களமிறங்கினர். தீபா வீட்டின் முன் தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர். முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி பகிரங்கமாகவே சசிகலா தரப்பினரை குற்றம்சாட்டினார். இவை முதல்வராகும் சசிகலாவின் நடவடிக்கையை தள்ளி வைத்துள்ளன.
இதற்கிடையில்தான் ஜல்லிக்கட் டுக்கு ஆதரவான போராட்டம் விஸ்வ ரூபம் எடுத்தது. ஜல்லிக்கட்டுக்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதம ருக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து, சசிகலாவும் கடிதம் எழுதினார். போராட்டம் தொடர்ந்ததால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை நேரடி யாக சந்தித்தார். ஆனால், சசிகலாவின் கடிதத்துடன் பிரதமரை சந்திக்க முயன்ற தம்பிதுரை தலைமையிலான குழுவினருக்கு அனுமதி கிடைக்க வில்லை. இதற்கிடையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர சட்டத்தை கொண்டுவர, ஜல்லிக்கட்டுக்கான தடையும் நீங்கியது.
முதல்வரும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், எம்பிக்களை சந்திக்காத விவகாரத்தில், தம்பிதுரை கடந்த சில தினங்களாகவே, மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அவர், நேற்று முன்தினம் சென்னை பல்லா வரத்தில் நடந்த கூட்டத்தில்,‘‘ ஜல்லிக் கட்டுக்காக மத்திய அரசிடம் பேசி வந்தபோதும், பலமுறை கோரிக்கை விடுத்தபோதும் மத்திய அரசு பாரா முகமாக இருந்து விட்டது’’ என்றார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, ‘‘தம்பிதுரை அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக வைச் சேர்ந்தவர். அவர் பிரதமரை பார்க்க செல்லும்போது தம்பிதுரை ஏன் சசிகலாவிடம் கடிதம் வாங்கி செல்ல வேண்டும். ஜெயலலிதா முதல்வ ராக இருந்து டெல்லி சென்றால், தம்பிதுரை இப்படி செய்திருப்பாரா? தம்பிதுரையும், சசிகலாவின் கணவர் நடராஜனும் சேர்ந்து ஆட்சியில் குழப் பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்கிறார் களோ என்ற சந்தேகம் வருகிறது,’’ என குற்றம் சாட்டினார். இது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான கலைராஜன் பேசி வருகிறார். இது போன்ற நிகழ்வுகள், அந்த கட்சியில் இருந்த ராணுவக் கட்டுப்பாடு கலைந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அதிமுகவினர் எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தங்கள் சட்டைப்பையில் வைத்திருப் பார்கள். ஆனால், தற்போது எம்எல்ஏக் களில் ஒரு சாரார் சசிகலாவின் புகைப் படத்தையும், ஒரு சாரார் ஜெய லலிதாவின் புகைப்படத்தையும், மற் றொரு பிரிவினர் இருவரும் உள்ள புகைப்படத்தையும் வைத்துள்ளனர். இதுவும் சந்தேகத்தை அதிகரித் துள்ளது.
இது தொடர்பாக அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது, ‘‘முனுசாமி இது போன்ற விமர்சனங்களை நிறுத்திக் கொள்வது நல்லது. அவரை யாரோ தூண்டுவது போல் உள்ளது. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போன்றவர்கள் இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். குருமூர்த்தி அதிமுக மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார். அதிமுகவைப் பொறுத்தவரை கட்டுப்பாடு எப்போதும் கலைய வாய்ப்பில்லை’’ என்றார்.