அரசியல், இந்தியா, கட்டுரை, பயங்கரவாதம், விமர்சனம்

காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!

இரு நாட்டுத் தலைவர்களின் அரசியல் விளையாட்டுக்குப் பகடைக்காய்தான் காஷ்மீரா?

respect kashmirஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பிரதானமான நாட்டுக் கவலைகளில் ஒன்றாக காஷ்மீர் இருக்கிறது. தன் நாடு வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இருப்பது ஒரு குடிமகனுக்குத் தன் சொந்த வலிமையை உணர்வதாக இருக்கக்கூடும். அதே சமயம், தொடர்ந்து வரும் எல்லா அரசுகளுக்கும் அது தன்மானப் பிரச்சினையாக இருக்கிறது. பல தலைவர்கள், பல கட்சிகள் என்று இந்திய ஆட்சிக் கட்டில்களில் மாறிமாறி அமர்ந்தாலும் காஷ்மீரின் கொந்தளிப்பை மட்டும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஒரு நல்ல வைத்தியர், உடம்புக்கு என்ன நோய் எனக் கண்டுபிடித்துவிடுவார்; கண்டுபிடிக்காதபோது அவரை நோயாளிகள் நாடு வதில்லை. பல்லாயிரம் மூளைகளோடு உளவுத் துறைப் பின்னணியோடு இயங்கும் ஓர் அரசு, காஷ்மீரி களின் உளவியலைத் தெரிந்துகொள்ளாமல் இருந்ததெனில் அது நம்பக்கூடிய விஷயமல்ல!

காஷ்மீர் நமக்குத் தொண்டைக்குழியில் சிக்கிய முள்ளாக இருப்பது ஏன்? பாகிஸ்தானை முன் வைத்து காஷ்மீர் பிரச்சினையைத் தொடர்ந்து அணுகி வருவதிலிருந்து வேறு வழிமுறைகளை இந்தியா சிந்திக்கவில்லை. தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளா? இரண்டு அரசுகளுக்கும் இடையிலான வறட்டுக் கவுரவம் காஷ்மீரிகளை ரணப்படுத்திவருகிறது; இதனை இனியும் அனுமதிப்பது நம் வளர்ச்சிக்கு விரோதமானதாகும்.

ஏமா(ற்)றும் வித்தை

நாடும் மக்களும் அமைதியாக இல்லாதபோது நம் பிரதமர்கள் தொடர்ந்து வளர்ச்சியை ஒரு சுலோகமாக மட்டும் பேசிவருகிறார்கள். இது ஏமா(ற்)றும் வித்தை. நல்ல சமயத்தில் காஷ்மீரைத் தன்னுடன் தக்கவைக்கும் எத்தனையோ சந்தர்ப்பங்களை இந்தியா வேண்டுமென்றே பறிகொடுத்ததாகத் தெரிகிறது. அந்தத் தேர்வுக்கு இந்தியாவைப் போக விடாதது பாகிஸ்தானின் ராஜதந்திரம். ஆத்திரமூட்டும் பல நடவடிக்கைகளை இலங்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும்போதும் அதனுடன் உறவாடுவதுதான் தக்க வழிமுறை என்று இந்தியா நினைக்கும்போது, பாகிஸ்தானை மட்டும் விரோதத் தன்மையுடன் மிரட்டிக்கொண்டே இருப்பது ஏன்?

நிர்வாகரீதியாக பாகிஸ்தான் பல பிரிவுகளாகக் கிடந்தாலும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் மீதும் இந்தியர்கள் மீதும் இந்தியக் கலைகள், திரைப்படங்கள் மீதும் மரியாதையான அணுகுமுறைகளைக் கையாண்டு வருகிறார்கள். அவர்கள் தங்கள் அரசின்மீது பலவீன மான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். இந்தியக் குடிமக்களிடம் பகைமை பாராட்ட விரும்பவில்லை. இது நம் அரசுத் தலைவர்களாக இருந்த ஒவ்வொரு வருக்கும் நன்கு தெரியும். அனைத்து நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளையும் உணர்ந்தறியும் ஒரு பாகிஸ்தானியருக்குத் தன் நாட்டு அரசின்மீது துளியளவும் மரியாதை செலுத்த முடியாது. அதன் பொருட்டாக இந்தியர்களைவிடவும் பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து தங்கள் அரசை வீதிகளில் சந்தித்து அதன் அடக்குமுறைகளைத் தோற்கடித்து வெல்லும் விழிப்புணர்வு கொண்டவர்கள்; நிரூபித்தும் காட்டியவர்கள். இதனை ஏன் இந்தியா தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள முடியவில்லை? பாகிஸ்தான் என்றவுடனேயே நமக்கு காஷ்மீர் என்கிற பெயர் ஞாபகம் வருவது இந்திய அரசியலின் தீராத ஒவ்வாமை.

புலம்பியா தீர்க்க முடியும்?

பிரிவினைவாத சக்திகள் குறைந்த அளவிலும், வலுவில்லாமலும் இருக்கும்போதே காஷ்மீருக்கான தீர்வை நாம் சிந்திக்காமல் இருந்தது பெரும் தவறு. வளர்ந்துவரும் சர்வதேசச் சூழலில் இனி இந்தியா என்ன வகையான சிக்கல்களைச் சந்திக்க நேரும் என்று அனுமானிக்க ஆளில்லாமல் இந்தியா முடங்கிக் கிடந்தது. அடிப்படைவாத சக்திகள் சர்வதேசரீதியாக எவ்விதம் ஒருங்கு திரள்கின்றன, அதனால் நாடு அடையப்போகும் நெருக்கடிகள் என்னவாக இருக்கக் கூடும் என முன்னுணர்ந்துகொள்ள இயலாத வெளியுறவுத் துறையின் செயல்பாட்டைப் புலம்பியா தீர்க்க முடியும்?

பயங்கரவாதமோ பாகிஸ்தான் சார்பான பிரிவினை வாதமோ வளர்வதற்கான சூழ்நிலையில், இந்தியா காஷ்மீரிகளை அவர்களிடமிருந்து விலக்கிக் கொண்டுவரும் வழியைச் சிந்திக்கவில்லை. மாறாக, அது மக்களையும் பிரிவினைவாதிகள் போன்ற மனநிலையில் வைத்துப் பார்த்து அடக்குமுறைகள், என்கவுண்டர்கள் மூலம் பிரிவினைவாதிகளின் பக்கம் தள்ளிவிட்டது. பொறுப்பற்ற அதிகாரங்களையும் சட்ட ரீதியான பாதுகாப்பையும் ராணுவத்தின் கையில் வழங்கியது. நமது பாதுகாப்புத் துறையிலும் எண்ணற்ற ஊழல்கள் நடந்துவரும்போது காஷ்மீரை அவர்களின் கண்காணிப்புக்குள் கொணர்ந்தது; அது தீரா துயரைத் தந்தது.

காஷ்மீர் குறித்த முடிவை எடுக்கும்போது ராணுவத்தின் கருத்துக்களையும் கேட்டுத்தான் முடிவெடுப் போம் என்றது காங்கிரஸ் அரசு. பாஜக அரசும் அதே வழியில் செல்கிறது. இந்த பொறுப்பற்ற விளையாட்டின் ஆபத்தான பலனாக காஷ்மீருக்கு வெளியேயுள்ள இந்தியர்கள் அனைவரும் வகுப்புவாதம் சார்ந்த வெறுப்பு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஜனநாயகத்துக்கு இது அழகாகுமா?

தலைவர்களின் விளையாட்டுகள்

நாட்டு நலனைவிடக் கட்சியின் நலனையும் அதிகார மோகத்தையும் விரும்பிய தலைவர்கள் ஆக்கபூர்வமாகச் செயல்படாமல், பாகிஸ்தான் மீதான வெறுப்பை நம்மிடையே வளர்த்துக் குளிர் காய்ந்திருக்கிறார்கள். இதே விளையாட்டை பாகிஸ்தானியத் தலைவர்களும் கைக்கொண்டார்கள். அதனால், இந்தியாவும் பாகிஸ் தானும் எப்போதும் போர்முனையில் மோதும் உக்கிரத்தில் இருப்பதான சித்திரத்தை இரு நாட்டு மக்களிடையேயும் உருவாக்கிவிட்டார்கள். அதையும் மீறி பாகிஸ்தானியர்களின் நல்லெண்ணம் இந்தியாவின் மீது இருக்கிறது. இரண்டு நாட்டுத் தலைவர்களின் மறைவான மன ஒற்றுமை காஷ்மீர் மக்களின் நலனைப் புறந்தள்ளியது இப்படித்தான்.

பாகிஸ்தானிய ஆட்சிமுறை, அதன் ராணுவ மேலாதிக்கம், உளவுத் துறையின் அதிகார மோகம், இஸ்லாத்தின் நெறிகளைக் கொஞ்சமேனும் மனதில் கொள்ளாதது போன்ற அனைத்து பாகிஸ்தானிய சங்கதிகளும் உலகம் நன்கறிந்த விஷயம். இவற்றின் பின்பக்கத்தில் ஊழல் புரிவதற்கான பெரும் வாய்ப்புகள் இருந்தன. இதனை அந்நாட்டின் எல்லாச் சக்திகளும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டன. நம்மைப் போலவே பாகிஸ்தானியர்களும் அடைந்த பெருந்துயரம் அது!

காஷ்மீரிகள் மட்டும் இதனை அறியாமல் இருந் திருக்கக் கூடுமா? அவர்கள் ஒரு நாளும் பாகிஸ்தானுடன் இணைய விரும்ப மாட்டார்கள். பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலேயே தங்களுக்கு அமைதியும் வளமான நல்வாழ்வும் கிடைக்காதபோது அவர்கள் அவற்றை பாகிஸ்தானிடம் பெற்றுவிட முடியும் என்று கனவுகூடக் காண மாட்டார்கள். இவற்றையெல்லாம் தந்திரமாக மறைத்துவிடக் கருதி மத அடிப்படைவாதிகள் சமயம் கிடைத்தபோதெல்லாம் கூக்குரல் எழுப்பிவந்தது இந்தியாவைப் பீதியடைய வைத்துவிட்டது.

வாழ்வின் மீது தாகம்

காஷ்மீரிகளோ தங்களின் ஜனநாயக விருப்பத்தில் நிலையாகக் கால்களை ஊன்றியிருக்கிறார்கள். அவர் களும் நிம்மதியான சுகமான வாழ்வை ஒரு நாளேனும் விரும்பியிருக்க மாட்டார்களா? தங்கள் குழந்தைகளோடு காஷ்மீரத்தின் எழிலை ரசித்து அளவளாவ நாட்டம் கொண்டிருக்க மாட்டார்களா? பண்டிகைகள், திருவிழாக்களின் வண்ணக் குதூகலத்தை நாடியிருக்க மாட்டார்களா? போர்முனையில் வாழும் சமூகமாக நிரந்தரமாக இருப்பதை வரலாற்றில் எந்தச் சமூகமும் விரும்பியிருக்காது. கலைகளிலும் கவிதைகளிலும் இயற்கை அவர்களுக்கு அளித்த பெருங்கருணையின் மீதும் காதல் கொண்டவர்கள் அவர்கள். அவர்களிடம் மதம் சார்ந்த அடிப்படைவாதமோ வன்முறையின் மீதான நாட்டமோ ஒருபோதும் இருந்திருக்கவில்லை.

இந்திய ஆளும் வர்க்கம் விரும்பியிருந்தால் இதன் மூலமே காஷ்மீரிகளின் உள்ளங்களை வென்றிருக்க முடியும். போராட்டக் களத்தில் அவர்கள் வலுக்கட்டாயமாக இருத்தப்பட்டபோதும் நடந்துவரும் தேர்தலில் பிரிவினைவாத சக்திகளின் அழைப்புக்கு இணங்காமல் பேரளவில் வாக்களித்துள்ளதாக வரும் செய்திகளை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும். ஜார்க்கண்டில் பதிவான வாக்குகளை விடவும், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை விடவும் காஷ்மீரிகள் அதிக அளவில் வாக்குப்பெட்டியின் அருகில் வந்துள்ளார்கள். அவர்களின் நோக்கத்துக்கு மாசு கற்பிக்காமல் அவர்களின் ஆர்வத்தை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘புல்லட்டுகளுக்கு எதிராக வாக்குகள்’என்று பிரதமர் மோடியும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி யுள்ளார்தானே? இனி இதுதான் காஷ்மீர்ப் பிரச்சினையின் விடிவுக்கான வழி என்று அரசு தன்னுடைய இதயத்தைத் திறந்துவைக்கட்டும். அப்போதுதான் அமைதியின் பல பாதைகள் திறக்கும்.

– களந்தை பீர்முகம்மது, எழுத்தாளர்

தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *