இந்தியா, கட்டுரை, சிந்தனைக் களம், தமிழ்நாடு, போராட்டம்

குடி குடியைக் கெடுக்கும்

பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. 9-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள், பள்ளிக்கு வந்ததும் வகுப்புக்குச் செல்லாமல் ஓரமாக இருக்கும் கழிவறையின் பக்கம் ஒதுங்கி நின்று கொண்டார்கள். டாஸ்மாக் கடை திறந்ததும் மது வாங்கி வந்து, பள்ளி வளாகத்திலேயே உட்கார்ந்து, ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு குடிக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்த சில சீனியர் மாணவர்கள் எச்சரிக்க, அது மோதலாக உருமாறியது. இரு தரப்பும் அடித்துக்கொள்ள, ஆசிரியர்கள் கவனத்துக்கு விஷயம் சென்றது. அவர்கள் பதறியடித்து ஓடிவந்தபோது, அத்தனை பேரும் ஓடிவிட்டனர். அப்போது போதை மிதப்பில் எழுந்து ஓட முடியாமல் விழுந்துகிடந்த மாணவனுக்கு, போதை தெளிய வைத்தியம் பார்த்து, பெற்றோரிடம் ஒப்படைப்பதே பெரும்பாடாகிவிட்டது பள்ளி நிர்வாகத்துக்கு.

alcohol is dangerous for home and country

மதுரை வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது அந்த அதிர்ச்சி. அன்றாடம் மது குடிக்கும் பழக்கம் உள்ள ஐந்து மாணவர் களிடம் அன்று கையில் பணம் இல்லை. என்ன செய்வது என யோசித்தவர்கள், பள்ளி முடிந்ததும் தாங்கள் அமர்ந்து படித்த பெஞ்சை பல துண்டுகளாக உடைத்து எடுத்துச் சென்று மரக்கடையில் எடைக்குப் போட்டு மது வாங்கிக் குடித்தனர்.

திருநெல்வேலி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றின் ஆசிரியர் சதீஷ். கல்லூரிப் பேருந்தில் வரும் மாணவர்கள் குடித்துவிட்டு பேருந்தில் ரகளைசெய்ய, பேருந்தின் ஓட்டுநர் சுதாகர், ஆசிரியர் சதீஷிடம் முறையிட்டிருக்கிறார். சதீஷ், மாணவர்களை அழைத்துக் கண்டித்து, ‘பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்’ என எச்சரிக்க… மாணவர்கள் அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர். சுதாகர் தடுத்துள்ளார். அடுத்த நாள் ஒரு காரில் சுதாகர் வீட்டுக்கு வந்த மாணவர்கள், அவரையும் அவரது மனைவி செல்வியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய அளவுக்குக் கடுமையான அடி. அடுத்து ஆசிரியர் சதீஷ் வீட்டுக்குச் சென்ற மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சதீஷைக் கடுமையாக அடித்து உதைத்தவர்கள், தங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள். சதீஷைத் தேடி வந்த அவரது தம்பி அருணையும் அடித்து உதைத்து, அவரையும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். மனம் நொந்த சதீஷ் ‘போலீஸில் புகார் செய்யலாம்’ எனச் சொல்ல… வீட்டில் உள்ளவர்கள் வேண்டாம் எனத் தடுக்க… அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குத் தூண்டியதாக ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட, அவர்கள் இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள்!

– தமிழ்நாட்டுப் பள்ளிகளின் குறுக்குவெட்டுத் தோற்றம் இது. பள்ளிகள் மட்டும் அல்ல… மொத்த தமிழ்நாட்டின் குறுக்குவெட்டுச் சித்திரமும் இதுதான். மாணவர்களின் இடத்தில் வேறு யாரை வேண்டுமானாலும் நீங்கள் பொருத்திக்கொள்ளலாம்.

‘தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு’ – என்றார் நாமக்கல் கவிஞர். இப்போது தமிழனின் குணம் என்ன? போதை!

24 மணி நேரமும் போதையில் வீழ்ந்து மானம் கெட்டு, சொரணை கெட்டு, நாகரிகம் இழந்து, பண்பாடு இழந்து படுகுழியில் வீழ்ந்துகொண்டிருப்பதுதான் இப்போது தமிழனின் குணம். சந்தேகம் இருந்தால் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதோ ஒரு டாஸ்மாக் பாரில் நுழைந்து பாருங்கள். காலை 10 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை கூட்டம், கூட்டமாகக் குடிக்கிறார்கள்… குடித்துத் தீர்க்கிறார்கள். ஒரு சமூகமே இவ்வளவு குடி வெறியுடன் அலைவதைக் கண்டால், அச்சமாக இருக்கிறது.

இப்படிக் குடிப்பவர்கள் எல்லாம் யார்… வேற்றுக்கிரகவாசிகளா? ஆடை அவிழ்ந்ததுகூடத் தெரியாமல், நடுங்கிய கரங்களுடன் பிளாஸ்டிக் கப்பை இறுக்கிக் கசக்கி மதுவை வாய்க்குள் ஊற்ற முயற்சித்துக்கொண்டிருக்கும் அந்த நடுத்தர வயதினர் யார்? நம் அப்பாக்கள். போதையில் தள்ளாடி, சாலையோரச் சாக்கடையில் வீழ்ந்துகிடப்பது யார்? நம் அண்ணன்கள். அருவருப்பும் அசூயையும் நிறைந்த டாஸ்மாக் பாரில் வாந்தி எடுத்து, அதன் மீதே விழுந்து புரண்டுகிடக்கும் அந்தச் சின்னப் பையன்கள் யார்? நம் தம்பிகள். போதையில் தாறுமாறாக கார் ஓட்டி, சாலையில் செல்லும் அப்பாவிகள் மீதும், பிளாட்பாரத்தில் படுத்து உறங்கும் ஏழைகள் மீதும் ஏற்றி உயிர்களைப் பறிப்பது யார்? நம் நண்பர்கள். நம் வீட்டு மனிதர்கள்தான் குடிக்கிறார்கள், நம் நண்பர்கள்தான் குடிக்கிறார்கள், நாம்தான் குடிக்கிறோம்!

இந்தக் குடி, நமது குடும்பங்களை,  பண்பாட்டை, சமூக ஒழுக்கத்தைச் சிதைத்துப் போட்டுவிட்டது. இதைவிட மோசமாக வேறு எந்தக் கேட்டையும் ஏற்படுத்திவிட முடியாது என்ற அளவுக்கு மதுவின் ஒவ்வொரு துளியும் நம் வாழ்வின் ஒவ்வொரு தங்கத் தருணத்தையும் சீரழிக்கிறது. ஆனாலும், இதை நாம் சகித்துக்கொண்டிருப்பது ஏன்? இந்தக் கேள்விக்கான விடை முக்கியமானது. நாம் டாஸ்மாக்கை மட்டுமா சகித்துக்கொள்கிறோம்? தலித் என்ற ஒரே காரணத்துக்காக ஆட்டை அறுப்பதைப்போல இளைஞனின் கழுத்தை அறுத்து ரயில் தண்டவாளத்தில் வீசும் அருவருப்பான சாதிவெறியைச் சகித்துக்கொள்கிறோம். தொழிலாளர்களின் உரிமையை மதிக்காமல், உரிய ஊதியம் அளிக்காமல், அவர்களின் உழைப்பையும் உதிரத்தையும் சுரண்டி வாழும் முதலாளிகளின் கொடூரமான லாபவெறியைச் சகித்துக்கொள்கிறோம்.           14 ஆயிரம் தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்தி, 21,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ‘நோக்கியா’ முதல், 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான ‘சத்யம்’ ஊழல் வரை, தனியார் நிறுவனங்களின் சூறையாடலுக்கு எத்தனையோ உதாரணங்கள் வந்தபோதிலும், தனியார் துறையால் மட்டுமே இந்த நாட்டை மீட்க முடியும் என்ற பச்சைப் பொய்யைச் சகித்துக்கொள்கிறோம். 20 தமிழ்த் தொழிலாளர்களின் உயிர்களைக் காக்கா, குருவிகளைப்போல சுட்டு வீழ்த்தும் போலீஸின் ரௌடித்தனத்தைச் சகித்துக்கொள்கிறோம். இந்தியக் கூட்டு மனசாட்சியின் பலிபீடத்தில் காவு கொடுப்பதற்கு, டைகர் மேமன் கிடைக்கவில்லை என்றால் யாகூப் மேமனைத் தூக்கிலிடும் அரச அநீதியைச் சகித்துக்கொள்கிறோம்.

இப்படி சொந்த வாழ்விலும், சமூக வாழ்விலும் நம் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணமும் சகித்துக்கொள்ளுதலால் நிறைந்திருக்கிறது. ‘சகித்துக்கொள்வது’ என்ற வார்த்தை, நம் செயலின் தன்மையைச் சற்றே மிதப்படுத்திவிடுகிறது. நேரடிப் பொருளில் சொல்வதானால், நாம் சொரணை இல்லாமல் இருக்கிறோம் என்பதே சரியானது. நாம், நமது சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம். ‘அவசரப்பட்டு கோபப்பட்டால், நாளைக்கு ஆகவேண்டிய காரியம் கெட்டுப்போய்விடுமோ!’ எனக் கணக்குப்போட்டு காரியவாதியாகச் சிந்திக்கிறோம். அதனால்தான் நம்மைச் சுற்றி இத்தனை கேடுகள் நடந்தும், வாயை மூடிக்கொண்டு செல்கிறோம்.

டாஸ்மாக்கின் இருப்பு என்பது, நமது இந்த மொத்தச் சிந்தனைப் போக்கினால்தான் தக்கவைக்கப்படுகிறது. நாம் நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா தீங்குகளையும் சகித்துக்கொள்கிறோம். ஆகவே, டாஸ்மாக்கையும் சகித்துக்கொள்கிறோம். ஆனால் இது, இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாத நெருக்கடி நிலைக்கு இப்போது வந்து சேர்ந்திருக்கிறது. மழலை முகம் மாறாத ஒரு சின்னப் பையன் மது குடிக்கும் அவலத்தைவிட, இந்தச் சமூகத்தின் மனசாட்சியை அசைக்க வேறு என்ன வேண்டும்?

ஒரு கணம் உங்கள் குழந்தைகளை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள், இப்போது சின்னஞ்சிறு தளிர்களாக உங்கள் கரங்களில் தவழ்ந்து விளையாடலாம்; தெருவில் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருக்கலாம்; அரும்பு மீசை முளைக்கும் வயதில் மந்தகாசப் புன்னகையுடன் வளையவரலாம். அவர்கள் குடித்துவிட்டு போதையில் வீழ்ந்துகிடக்கும் காட்சியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர்களின் புத்தகப் பைக்குள் ஒரு பீர் பாட்டிலும் இருந்தால் உங்களுக்குச் சம்மதமா? ஆண் பிள்ளைகள் மட்டும் அல்ல… பெண் பிள்ளைகளும் இந்தப் போதைச் சுழலில் தப்பவில்லை. உங்கள் பெண் குழந்தை குடித்துவிட்டு போதையில் தள்ளாடி நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியானதா? இல்லை என்றால் நீங்கள் இந்தச் சூழலை மாற்ற என்னச் செய்யப்போகிறீர்கள்? ‘என் பிள்ளை ரொம்ப ஒழுக்கமானவன். மத்த பசங்க மாதிரி கிடையாது’ என நினைத்தால், நீங்கள் ஒண்ணாம் நம்பர் ஏமாளி. அல்லது ‘எத்தனை டாஸ்மாக்குகள் சூழ்ந்து இருந்தாலும் என் மகனை/மகளை நான் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கமாக வளர்த்துவிடுவேன்’ என நினைத்தால், அது மூடநம்பிக்கை. ஊரே தீப்பற்றி எரியும்போது நீங்கள் மட்டும் பஞ்சு வியாபாரம் செய்ய முடியாது. சொந்த சாமர்த்தியத்தால், சுயக்கட்டுப்பாட்டால் இந்தப் பெருங்கேட்டைத் தடுத்து நிறுத்தவே முடியாது. ஆணிவேரில் ஆசிட் ஊற்ற வேண்டும். டாஸ்மாக் என்ற விஷக் கொடுக்கை வெட்டி வீழ்த்த வேண்டும். அதற்கு உங்கள் பங்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

– போதை தெளிவோம்..

– ஆனந்த விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *