1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது.
சற்றும் எதிர்பார்த்திராத அந்த வேளையில், சரியாக 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையில் மேகமாக இருந்து திடீரென உருவம் பெற்றதைப் போல ஜெர்மனியப் போர் விமானங்கள் வெளிப்பட்டன. அவற்றின் இரைச்சலை என்னெவென்று பிரித்தறிவதற்குள் அவை சரமாரியாகக் குண்டுகளை வீசத் தொடங்கின. 2 மணி நேரமாகத் தொடர்ந்த இந்தத் தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தனர். இதுதான் உலகப் போர் வரலாற்றில் முக்கியமான சம்பவமான குவர்னிகா குண்டுவெடிப்புச் சம்பவம்.
ஸ்பெயினில் இருந்த இடதுசாரி ஆட்சிக்கு எதிராக வலதுசாரிக் கூட்டணி கிளர்ச்சி நடத்திக்கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியே இந்தப் படுகொலைச் சம்பவம். இந்த வலதுசாரிக் கூட்டணிக்கு ஹிட்லரின் ஜெர்மனியும் இத்தாலியின் முசோலினியும் ஆதரவு அளித்தன.
இந்தத் துர்சம்பவத்திற்கு ஒரு கலைஞனின் எதிர்வினையே பாப்லோ பிக்காஸோவின் ‘குவர்னிகா’ ஓவியம். உலகப்போரின் உச்சகட்டத்திலும் பாரீசிலிருந்து வெளியேறாமல் பாரீசிலேயே வாழ்ந்து மறைந்த பிக்காஸோவின் தாய்நாடு ஸ்பெயின். கிட்டதட்ட கால் நூற்றாண்டுக் காலம் அவர் ஸ்பெயினில் வாழ்ந்தார். 1934க்குப் பிறகு பிக்காஸோ ஸ்பெயினுக்குத் திரும்பவில்லை என்றாலும் 1937இல் நடந்த இந்தச் சம்பவத்தின் துயரத்தை அனுபவித்துணர்ந்ததைப் போலச் சித்திரித்துள்ளார்.
குவர்னிகா, குறியீட்டு வகையைச் சேர்ந்தது. பிக்காஸோவும் தொடக்ககாலத்தில் எதார்த்தவகை ஓவியங்களை வரைந்துள்ளார். அவரது தொடக்கால ஓவியமான The First Communion இதன் சாட்சியாகும். 1890 இறுதியில் பிக்காஸோ அப்போது வலுவடைந்திருந்த குறியீட்டுப் பாணியைத் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார். அவரது குறியீட்டு ஓவியங்களில் குவர்னிகா பிரசித்திபெற்றது. குவர்னிகா குண்டுவீச்சு நடந்த இரு மாதங்களுக்குள் இந்த ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டுள்ளது. 1937ஆம் ஆண்டு ஜூனில் இந்த ஓவியத்தை பிக்காஸோ வரைந்து முடித்துள்ளார். வெளிச்சம் மேலிருந்து ஒரு குண்டு பல்பின் வழியே வழிகிறது. அந்தக் குண்டு பல்பின் வெளிச்சம் விமானத் தாக்குதலைச் சித்திரிக்கிறது. ஓவியத்தில் உள்ள குதிரையும் காளையும் ஸ்பெயின் மக்களின் பாரம்பரியத்துடன் இணைந்த மிருகங்கள். இவற்றுக்கான நாட்டுப்புறவியல் கதைகளும் இருக்கக்கூடும். ஓவியத்தின் நடுவில் உள்ள அந்தக் குதிரை குரல்வளை நெறிக்கப்பட்டு நாக்கு வெளித்தள்ள கனைத்து நிற்கிறது. அதன் கால்கள் தாக்கப்படுள்ளன.
இடது ஓரத்தில் நிற்கும் எருதின் வால் தீப்பற்றி எரிகிறது. அதன் பக்கவாட்டுக் கண்களுக்கு அருகில் இன்னொரு கண் முளைத்து மனித முகங்கொண்டு அலறுகிறது. அதற்குக் கீழே அப்பாவித் தாயொருத்தி இறந்த தன் குழந்தையைத் தூக்கி மாரில் முட்டிக் கதறிக்கொண்டிருக்கிறாள். வலது ஓரத்தில் அருகே இந்த ஆபத்திலிருந்து மீட்க ஏதாவது ஒரு கரம் உயராதா என மேலே தெரியும் ஜன்னலை நோக்கிக் கைகளை உயர்த்தும் ஒரு பெண். சிப்பாய் ஒருவன் கீழே விழுந்து கிடக்கிறான், அவன் கையில் உள்ள வாள் உடைந்திருக்கிறது. இது போரின் விளைவைச் சொல்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலே சிறு ஜன்னலுக்கு அப்பால் இருந்து தேவதையைப் போல் விளக்கைக் கையில் ஏந்திப் பெண்ணொருத்திப் பறந்து வருகிறாள். ஆனால் இந்த உருவங்களுக்கு எல்லாம் கிழே வீழ்ந்து கிடக்கும் சிப்பாயின் கைக்கு அருகே ஒரு வெள்ளைப் பூ கிடப்பதையும் நாம் காண முடிகிறது.
நீலமும் பச்சையும் பிக்காஸோவின் பிரத்யேக வண்ணங்களாகக் கருதப்பட்ட காலத்தில் இந்த ஓவியத்தை அவர் வண்ணமற்றதாக உருவாக்கியுள்ளார். இந்த வண்ணமின்மை வன்முறையின் குறியீடு. மிருகங்களும் மனித உருக்களும் துண்டு துண்டாகக் கிடந்து ஓலமிடும் இந்த ஓவியக் காட்சி குண்டுத் தாக்குதலின் குரூரமான வன்முறையை அப்பட்டமாக வெளிக் கொணர்கிறது.
பிபிசி