அரசியல், சிந்தனைக் களம், தமிழ்நாடு

கேரளாவில் ஸ்டாலின்: “ஆளுநர், அதிகாரம், கூட்டாட்சி” – இவை பற்றி என்ன பேசினார்? முழு விவரம்

இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசு போடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் வகையில் தென் மாநில முதல்வர்கள் குழுவை அமைக்க வேண்டும், மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆம் கட்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதன் முழு விவரம் இதோ.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆம் மாநாட்டுக்கு என்னை அழைத்து, ஒன்றிய, மாநில உறவுகள் பற்றி பேச அழைத்ததை நான் எண்ணிப்பார்க்கிறேன். இந்த மாநாடு நடைபெறும் இடம் கேரளா. ஒன்றிய மாநில உறவு பற்றி பேச வந்திருக்கும் நான் வாழும் இடம் தமிழ்நாடு. இதை விட மிகப்பெரிய ஒற்றுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசாங்கம், 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி முதன் முதலில் கலைக்கப்பட்டது கேரளத்தில்தான். மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி அரசாங்கத்துக்கு 1959ஆம் ஆண்டு இது நடந்தது. தமிழ்நாட்டிலும் மக்களின் ஆதரவுடன் அமைந்த மக்களாக் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு 1976 மற்றும் 1991ஆம் ஆண்டு இரண்டாவது முறையும் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டது. எனவே, ஒன்றிய, மாநில உறவைப் பற்றிப் பேசும் உரிமை எனக்கும் சரி, கேரளா, தமிழ்நாட்டுக்கு உண்டு.

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்திய நாடு காப்பாற்றப்படும். வீடுகள் இருந்தால்தான் அது தெரு. தெருக்கள் இருந்தால்தான் அது ஊர். ஊர்கள் சேர்ந்தால்தான் அது மாநிலம். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு. ஆனால் சிலர், அரசியல் அரிச்சுவடியை மாற்றுகிறார்கள்.

பன்முகத்தன்மையை ஒற்றைத்தன்மையாக்க முயற்சி

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என எல்லாவற்றிலும் ஒரே, ஒரே என்று ‘கோரஸ்’ பாடுகிறார்கள் என்று ஸ்டாலின் பேசினார்.

ஒரு உடலுக்குள் பல உறுப்புகளாக ஒன்றிணைந்திருக்கிறோம் என தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் பாடினார். உறுப்புகள் இல்லாவிட்டால் உடலே இல்லை. இந்தியாவில் எத்தனையோ மதங்கள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள், கலாசாரங்கள், உடைகள், உணவுகள் இருக்கின்றன. இத்தனை வேறுபாடுகள், மாறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பண்பாடு.

ஆனால், இந்த வேற்றுமையில் உள்ள ஒற்றுமையை அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என எல்லாவற்றிலும் ஒரே, ஒரே என்று ‘கோரஸ்’ பாடுகிறார்கள்.

இப்படியே போனால், ஒரே கட்சி ஆகிவிடும். ஒரே கட்சியானால் ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதைவிட ஆபத்தானது வேறு இருக்க முடியாது. ஒரே கட்சி ஆக இருப்பதால் பாரதிய ஜனதா கட்சியினர் மகிழ்ச்சி அடையலாம். ஒரே ஆள் என்று ஆகும்போது நம்முடன் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கத்தான் வேண்டும்.

இத்தகைய எதேச்சதிகாரத்துக்கு எதிரான இந்த குரல்தான் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதாகும்.

நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட ஆட்சியை உருவாக்கவில்லை. அதிகாரத்தை மூன்றாகப்பிரித்து மாநில பட்டியல், ஒன்றிய பட்டியல், ஒத்திசைவு பட்டியல் என வகைப்படுத்தினர்.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக உரிமைகள் பெறப்பட்டன. கிராமங்கள் வளர வேண்டும், அப்போதுதான் நாடு வளரும். ஆனால், கிராமங்களை அழிக்க நினைப்பவர்களாக ஒன்றிய ஆட்சியாளர்கள் உள்ளனர். இது இந்திய அரசியலமைப்புக்கே விரோதமானது.

அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைக் கடந்து, தனது அதிகார எல்லையை விரித்துச் செல்கிறது இந்திய அரசு. இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். அவர்கள் கூட இத்தகைய அதிகாரம் பொருந்திய ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கவில்லை.

1919இல் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தில் கூட மாகாணங்கள் ஒன்றையொன்றை ஒட்டி, உறவாடும் தன்மையில் மாகாண நலனிலும், உள்ளூர் நலனிலும் அக்கறை கொண்ட தன்னாட்சி நடத்த வேண்டும். இவ்வகையிலான மாகாணங்கள் ஒருங்கிணைந்த அமைப்புக்கு மத்திய அரசு தலைமை தாங்கிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

பாஜக மீது குற்றச்சாட்டு
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு அடக்கி ஆளும் எண்ணத்தோடு இருந்த ஆங்கில ஆட்சி கூட செய்யத் துணியாததை இன்றைய பாரதிய ஜனதா கட்சி செய்ய நினைக்கிறது என்று நான் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகிறேன்.

இப்படி நடக்குமானால், சுதந்திரம் அடைவதால் எந்த பயனும் இல்லை என்று கூறியவர் பகத் சிங். அவர் தனது தாயாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், அம்மா எனது நாடு ஒருநாள் விடுதலை பெறும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், வெள்ளை துரைமார்கள் விட்டுச் செல்லக்கூடிய நாற்காலியில் பழுப்புநிற துரைமார்கள் உட்காருவதுதான் எனக்கு அச்சமாக இருக்கிறது. பழைய முறைகளை அழித்தாலொழிய எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று பகத் சிங் எழுதியிருந்தார். அதுதான் இன்று நடக்கிறது.

மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யக்கூடிய மாநிலங்களை, ஒன்றிய அரசை நோக்கி கையேந்தவைப்பதில்தான் ஒன்றிய ஆட்சியாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அது மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம் அல்லவா? அது மக்களை பழிவாங்குவதாகாதா? மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், மக்களுடைய நில உரிமையை பறிக்கும் வகையில் ஜிஎஸ்டி முறையை கொண்டு வந்தனர். வரி வருவாயைப் பறித்தார்கள். இழப்பீடு தருவதாக சொன்னார்கள். அது முழுமையாக வந்ததா? அரை குறை இழப்பீடு கூட முழுமையாக தரப்படவில்லை. மாநில அரசுக்கான நிதியை வழங்குவதே இல்லை.

தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ. 21 ஆயிரம் கோடி நிதி வரவேண்டியுள்ளது. இதை கேட்க வேண்டிய இடம் திட்டக்குழு. அது இருந்தால்தானே கேட்பீர்கள் என்று அதை கலைத்து விட்டனர். இதை எல்லாம் கேட்க வேண்டிய இடம் தேசிய வளர்ச்சிக் குழு. அதையும் கலைத்து விட்டனர்.

தென்னகத்துக்கான ரயில்வே திட்டங்களுக்கு பணமே ஒதுக்குவதில்லை. அது பற்றி விவாதமிருந்தால்தானே கேட்பீர்கள் என்று கூறி விவாதமே நடத்தவிடவில்லை. ரயில்வே துறைக்கு என இருந்த தனி பட்ஜெட்டே இப்போது இல்லை. மாநில பட்டியலில் இருக்கும் வேளாண் துறைக்கு அவர்களை பட்ஜெட் போடுகிறார்கள் விவாதம் நடத்த மாட்டார்கள். எந்த சட்டத்தையும் விவாதமின்றி நிறைவேற்றிக் கொள்வார்கள். உரிய பதில் சொல்ல மாட்டார்கள்.

“அதிகார வெறியுடன் செயல்படுகிறது பாஜக”

கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களைக் கூட தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்க அதிகார வெறியுடன் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு செயல்பட்டு வருகிறது. பெரும்பான்மை இருக்கிறது என்ற காரணத்துக்காக அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இவை அனைத்தையும் ஆளுநரை வைத்து அமல்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இருக்கும்போது ஆளுநரை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்த நினைப்பது துரோகம் ஆனது அல்லவா. இதை ஒரு ஒன்றிய ஆட்சி செய்யலாமா… எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்துக் கொண்டு தனி ஆட்சி நடத்துவதுதான் சட்டத்தின் ஆட்சியா?

திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்

மசோதாக்கள்: தாமதப்படுத்தும் ஆளுநர்

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை, இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை இன்னமும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார்.

சட்டத்தின்படிதான் ஆளுநர் நடக்கிறாரா? நீட் மசோதா மட்டுமல்ல, மேலும் 11 மசோதாக்கள் ஆளுநர்வசம் உள்ளன. அதற்கெல்லாம் அவர் அனுமதி மறுப்பதற்கு என்ன காரணம்? எட்டு கோடி மக்களை விட நியமன ஆளுநருக்கு அதிகாரம் வந்து விடுகிறதா? இப்படித்தான் பல மாநிலங்களில், எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கிறதென்றால் அங்கு எல்லாம் மக்களாட்சி நடக்கிறது என நாம் சொல்ல முடியுமா?

தனக்கு தொல்லை கொடுத்த ஆளுநரைப் பற்றி மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மறைந்த மாபெரும் தலைவர் ஜோதிபாசு, “ஜனநாயகத்தை குறிவைத்து கொலைக்களத்தை உருவாக்கி தவறான அரசியல் சோதனைகளை செய்வதற்கான பயிற்சிக்களமாக மாநிலத்தை ஆக்கி விட்டார்,” என்று ஜோதிபாசு கூறினார்.

இப்படி ஜனநாயகத்தை மரணிக்க வைப்பவர்களாக ஆளுநர்கள் நடந்து கொள்கிறார்கள். மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்காத காரணத்துக்காகத்தான், இந்திய அரசியலில் பல சிக்கல்களும் முரண்பாடுகளும் தொடர்கின்றன என்று தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட கலைஞர் அன்றைக்கு சொன்னார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறேன். ஆனால், அந்த கோட்டையைச் சுற்றி இருக்கக் கூடிய புல்லை வெட்ட உத்தரவிடக் கூட அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார்.

மக்களுக்கு நன்மை செய்வதற்காக நான் முதல்வர் ஆனேன். ஆன பிறகுதான் இது அதிகாரம் இல்லாத பதவி என்று தெரிகிறது என வருந்தினார் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா.

நான் கேரள மக்களுக்காக நன்மை செய்யத் தொடங்கினேன். அதனால்தான் ஆட்சியை கலைத்தார்கள் என்று எழுதினார் இஎம்எஸ் நம்பூதிரிபாட்.

தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டுமா?

மாநில சுயாட்சிக்காக நாம் போராடுவோம். உண்மையான கூட்டாட்சி இந்தியாவை நாம் படைப்போம் என்று ஸ்டாலின் பேசினார்.

இன்று தமிழ்நாடு முதல்வரான நானாக இருந்தாலும், கேரள மாநில முதல்வரான உங்களுடைய பினராயி விஜயனாக இருந்தாலும் – நாங்கள் தலையாட்டி பொம்மைகளாக இருந்தால் நமது ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் தர மாட்டார்கள். தலையாட்டி பொம்மையாக நாம் இருக்க வேண்டுமா? அதுதான் என்னுடைய கேள்வி. ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களுக்காக திட்டங்களை தீட்டினால், கல்வி உரிமையை பேசினால், நமது தென்னகத்தின் பண்பாட்டைப் பற்றி பேசினால், சமதர்ம கொள்கைகளைப் பற்றி பேசினால், உடனே நமது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைக்கக் கூடிய தலைவர்கள் அனைவரும் இந்த முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் மூலம் இதை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். எதிர்கொண்டு வருகிறோம். இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் போராட வேண்டும். போராட தயாராக வேண்டும். தென் மாநில முதல்வர்கள் குழுவை அமைக்க வேண்டும். மாநில முதல்வர்கள் குழுவை நாம் அமைக்க வேண்டும். மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளைக் கடந்து நாம் ஒன்றிணைய வேண்டும்.

“குழுவாக ஒன்றிணைவோம்”
சமீபத்தில் நான் டெல்லி சென்றபோது, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்தேன். அதில், இந்த ஒற்றுமையை நான் வலியுறுத்தி பேசியிருந்தேன். தமிழ்நாட்டில் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தையும நாங்கள் ஒன்று திரட்டி வைத்திருக்கிறோம். நாங்கள் தேர்தல் காலங்களில் மட்டும் தொகுதிகளை மட்டும் பங்கிட்டுக் கொள்ளும் கட்சியாக இல்லாமல் கொள்கை உறவாக அதை கடைப்பிடித்து வருகிறோம். அதுதான் எங்களுடைய வெற்றிக்கு அடித்தளம். ஒற்றுமைதான் பலம். இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர்ந்தாக வேண்டும்.

இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகம், மதசார்பின்மை, சமத்துவம், சகோரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டுமானால், அரசியல் மதமாச்சர்யங்களை விட்டு விட்டு, அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள் என்று நான் பிடிஐ பேட்டியில் குறிப்பிட்டேன். அதே வேண்டுகோளைத்தான் இப்போது நான் இங்கே விடுக்கிறேன்.

மாநில சுயாட்சிக்காக நாம் போராடுவோம். உண்மையான கூட்டாட்சி இந்தியாவை நாம் படைப்போம் என்று ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, தமிழில் தமது உரையை தொடங்கும் முன்பாக மலையாள மொழியில் பேசிய ஸ்டாலின் “கேரளா, தமிழ்நாடு இடையிலான பந்தம், சங்க காலம் முதல் உள்ளது. திராவிட, கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலான பந்தம் 80 வருடங்களைக் கடந்தது. தந்தை பெரியார் 1932இல் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் திட்டத்தை தமிழில் மொழி பெயர்த்தார். இது உங்களுக்கும் தெரியும்,” என்று ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *