விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

சான்சீயோன்: நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் பி.வி.சிந்து மாறும் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

தென்கொரிய நாட்டின் சான்சீயோன் நகரில் உள்ள உள்ளரங்கில் கடந்த 5-ஆம் தேதி இந்தத் தொடர் தொடங்கியது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் விளையாடிய சிந்து 21-15, 21-10 என நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை அயா ஓஹோரியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார் சிந்து. உலக பேட்மிண்டன் வீராங்கனைகளுக்கான ஒற்றையர் பிரிவில் சிந்து ஏழாவது இடத்தில் உள்ளார். அண்மையில் அவர் ஸ்விஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

மறுபக்கம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இஸ்ரேல் வீரர் மிஷா சில்பர்மேனை 21-18, 21-6 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி உள்ளார் கிடாம்பி ஸ்ரீகாந்த். வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆட்டம் நடைபெற்றது. இரண்டாவது செட்டில் 12-0 என முன்னிலை பெற்றிருந்தார் ஸ்ரீகாந்த். காலிறுதியில் அவர் தென் கொரிய வீரரை எதிர்கொள்கிறார்.

அதேவேளையில், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருந்த இந்திய நட்சத்திரங்கள் லக்‌ஷஷ்யா சென், மாளவிகா பன்சோட் மற்றும் அஷ்வினி பொன்னப்பா – சுமித் ரெட்டி (கலப்பு இரட்டையர்) இணையர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *