சிந்தனைக் களம், சுற்றுப்புறம்

சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தராதது ஏன்?

அரசுகளும் அரசியல் கட்சிகளும் மிகக் குறைவாகக் கவனம் செலுத்தும் விஷயங்களுள் ஒன்று சுற்றுச்சூழல். பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல் போன்றவற்றின் விளைவுகள் மோசமாக வெளிப்பட ஆரம்பித்த பிறகு, முன்னேறிய நாடுகள் தங்கள் செயல்திட்டங்களில் சுற்றுச்சூழலையும் உள்ளடக்கிக்கொண்டன. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலோ வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் சமநிலை குறைந்தால் மனிதர்களுக்குப் புதுப்புது தொற்றுநோய்கள் ஏற்படும் என்பதை கரோனா பெருந்தொற்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில் அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவில் முக்கியத்துவம் தந்திருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

அதிமுக அறிக்கையில் நேரடியாக சுற்றுச்சூழலுக்கென்று எந்த அறிவிப்பும் இல்லை. ஆறுகள், கால்வாய்கள் புனரமைப்புத் திட்டம், காவிரியிலும் அதன் கிளை ஆறுகளிலும் கலக்கும் மாசுகளைச் சுத்திகரிப்பதற்கு ‘நடந்தாய் வாழி காவேரி திட்டம்’ செயல்படுத்தப்படும் போன்றவை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பது கட்டுப்படுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. எரிவாயுவில் இயங்கும் புகையில்லாப் பேருந்துகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும், மொத்த நிலப் பகுதியில் 33% காடுகள் உருவாக்கப்படும், மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்குமான மோதலைத் தடுக்கவும் வன விலங்குகளின் பாதுகாப்புக்கும் வன ஆணையம் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத் தகுந்தவை.

கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் குரல்கொடுப்பதாக அமமுக வாக்குறுதி அளித்திருக்கிறது. பிரதானக் கட்சிகள் பேசாத புவி வெப்பமாதலைப் பற்றியெல்லாம் அமமுகவின் தேர்தல் அறிக்கை பேசியிருப்பது ஆச்சரியம். உயிர்ச்சூழல் அமைப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உள்ளூர் மக்களின் உதவி நாடப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது. மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, அணு உலை போன்ற திட்டங்கள் தடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் பொருளாதார வளர்ச்சி, நலத் திட்டங்கள் போன்றவற்றுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைச் சுற்றுச்சூழலுக்குப் போதிய அளவில் கொடுக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அறிக்கையில் கொடுக்காத முக்கியத்துவம் ஆட்சிக்கு வரும்போதாவது கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
source : www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *