சென்னை: தஞ்சையில் நடந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் வழங்கினார். இதுகுறித்து சட்டப்பேரவையில், முதல்வருக்கு நன்றி தெரிவித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பேசியதாவது: தஞ்சை தேர் விபத்து சம்பவம் நடந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு என்னை அழைத்த முதல்வர், உடனடியாக அங்கு செல்ல உத்தரவிட்டார். அதன்படி சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். அதிகாரிகளும் உடனடியாக அங்கு வந்திருந்தனர். 11 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்குபேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமும் முதல்வர் அறிவித்தார்.
அவர் விபத்து நடந்த இடத்துக்கு வருவதாக தெரிவித்தபோது, மருத்துவமனைக்கு வந்தால் போதும் என்று தெரிவித்திருந்தேன். அதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர், ஒவ்வொரு வீடாக சென்று ஆறுதல் கூறினால்தான் என்னையே நான் தேற்றிக் கொள்ள முடியும். இந்த நிகழ்வில் அரசியல் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
அத்துடன் வீடுவீடாக சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தியதுடன், ரூ.5 லட்சம் நிதியையும் வழங்கினார்.
தேர் விபத்து நடந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்தவரும், வார்டு கவுன்சிலராக பாஜக உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலராக திமுகவை சேர்ந்தவரும் உள்ளனர். இந்த சம்பவத்தில் அரசியல் பார்க்காமல் அனைவரும் இணைந்து செயல்பட்டனர்.