இந்தியக் கூட்டு மனசாட்சி என்னும் பலிபீடத்தில் இன்னோர் உயிர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 30-ம் தேதி அன்று, யாகூப் மேமன் பிறந்த தினத்திலேயே அவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்திய அரசு. கழுத்தில் தூக்குக் கயிறு ஏறும் முன்னர் தன் 21 வயது மகள் சுபைதாவுடன் பேச வேண்டும் என்பது யாகூப் மேமனின் கடைசி ஆசை. தன் கண் முன்னே மரணத்தை வைத்துக்கொண்டு ஒரு தந்தை, மகளிடம் என்ன பேசுவார்? அடுத்த நிமிடம் சாகப்போகும் தகப்பனிடம் ஒரு மகள் என்ன பேசிவிட முடியும்? கரைபுரண்ட கண்ணீருக்குப் பின்னர் யாகூப் பேசினார்… ‘மகளே… தூக்குமேடையில் நின்றுகொண்டு சொல்கிறேன். நான் உன்னையும் நம் குடும்பத்தையும் கொலைப்பழியுடன் விட்டுச் செல்லவில்லை. நான் குற்றமற்றவன்.
நீ திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். நான் செல்கிறேன். என்னை மன்னித்துவிடு’ – மனதைக் கனக்கச்செய்யும் அந்தக் கண்ணீரின் பாரம், நம் யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
53 வயதான யாகூப் இப்போது இல்லை. மும்பையின் புகழ்பெற்ற ஆடிட்டர், ஏற்றுமதி நிறுவனம் நடத்திய செல்வந்தர் என்ற பின்னணிகொண்ட யாகூப் மேமன் ஏன் தூக்கிலிடப்பட்டார்? அவரது வழக்கின் பின்னணி என்ன? அது 22 ஆண்டுகளுக்கு முந்தைய, மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடங்குகிறது.
1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி அன்று மும்பை நகரத்தில் 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.
257 அப்பாவி உயிர்கள் பலியாகின. 700-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்தனர். இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பையை சுக்குநூறாகச் சிதைத்துப்போட்ட அந்தக் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி, தாவூத் இப்ராஹிம். தாவூதுக்காகக் குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்தியவர் டைகர் மேமன். இந்த டைகர் மேமனின் தம்பிதான், யாகூப் மேமன்.
1994-ம் ஆண்டு யாகூப் மேமன் கைதுசெய்யப்பட்டார். அவர் சரணடைந்தார் என்றும், சி.பி.ஐ-தான் அவரைக் கைதுசெய்தது என்றும் இருவேறு கோணங்கள் சொல்லப்படுகின்றன. அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2007-ம் ஆண்டில் தடா நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றமும் இந்தத் தண்டனையை உறுதிசெய்தது. இந்தியக் குடியரசுத் தலைவரும் யாகூப்பின் கருணை மனுவை நிராகரிக்க, தூக்கிலிடப்பட்டார் யாகூப்.
யாகூப்புக்குத் தூக்குத் தண்டனை கூடாது எனச் சொன்னவர்கள் முன்வைத்த வாதங்கள் அனைத்தும், ‘மரண தண்டனை எதிர்ப்பு’ என்ற பரந்த கோரிக்கையின் கீழ் முன்வைக்கப்பட்டவை.இப்படி ‘உயிர்க் கொலை கூடாது’ எனக் கருணை மதிப்பீட்டின் குரல்களைத் தாண்டி யாகூப் வழக்கை குறிப்பாக அணுகிய குரல்கள் கவனிக்கத்தகுந்தவை. அதில் முக்கியமானது, இந்திய உளவுத் துறையான ‘ரா’-வின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுத் தலைவராக இருந்த பி.ராமனின் குரல். 2007-ம் ஆண்டில் யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்த சமயத்தில் ராமன், ரீடிஃப்.காம் இணையதளத்துக்கு ஒரு கட்டுரை எழுதினார். பிறகு, அவரே ‘இப்போது வெளியிட வேண்டாம்’ எனக் குறிப்பும் எழுதினார். 2013-ம் ஆண்டு ராமன் இறந்துவிட்ட நிலையில், அவரது உறவினர்களின் ஒப்புதலுடன் அந்தக் கட்டுரையை, யாகூப்பின் தூக்குக்கு முன்பாக வெளியிட்டது ரீடிஃப்.காம்.
‘மேமன் சகோதரர்களும் மும்பை குண்டுவெடிப்பும்’ எனத் தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பில் யாகூப் உள்ளிட்ட மேமன் குடும்பத்தின் தொடர்புகளை அவர் மறுக்கவில்லை; அவர்களுக்குத் தொடர்பு இருந்தது என உறுதிப்படுத்துகிறார். மாறாக அவர் யாகூப் மீது வேறொரு கோணத்தில் பரிவு கோருகிறார். ‘பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ அமைப்பின் கண்காணிப்பில் இருந்த யாகூப் மேமன், ஐ.எஸ்.ஐ நடவடிக்கைகளின் மீது கடும் அதிருப்திகொண்டு, மும்பை போலீஸிடம் சரண் அடையும் முடிவை எடுக்கிறார். நண்பர்கள் மற்றும் தன் வழக்குரைஞரைச் சந்தித்து தன் முடிவு குறித்து ஆலோசனை கேட்க காட்மண்டு வருகிறார். அவர்கள், ‘சரண் அடைய வேண்டாம். உனக்கு நீதி கிடைக்காமல் போகலாம்.
நீ கராச்சிக்குத் திரும்பிவிடு’ என எச்சரிக்கின்றனர். அதன்படி கராச்சி திரும்பிச் செல்ல விமானம் ஏறும் முன்பாக நேபாள போலீஸால் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, இந்தியா கொண்டுவரப்பட்டார் யாகூப். அதன் பிறகு சி.பி.ஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். ஐ.எஸ்.ஐ பாதுகாப்பில் இருந்த தன் குடும்ப உறுப்பினர்களை இந்தியாவுக்கு வரவழைத்து சரணடையவைத்தார். இந்தப் பின்னணியில், யாகூப்பின் மரண தண்டனையைப் பரிசீலிக்கலாம்’ என்கிறார் ராமன்.
யாகூப் தனது விளக்கங்கள், வாதங்கள் எல்லாம் எடுபடாத நிலையில், ‘டைகர் மேமனின் சகோதரனாகப் பிறந்த குற்றத்துக்காக என்னைத் தூக்கில் போடுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தொடர் குண்டுவெடிப்பின் சதிகாரன் எனத் தூக்கிலிடுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ எனக் கூக்குரல் எழுப்பினார். அனைத்தும் எடுபடாமல் அவர் தூக்கிலிடப்பட்ட நிலையில், ‘இந்திய அரசின் மீதும், நீதி அமைப்பின் மீதும் யாகூப் மேமன் வைத்த நம்பிக்கைதான் அவர் இழைத்த மிகப் பெரிய தவறு. கண்ணியமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளும் தன்னை, இந்திய நீதி அமைப்பு காப்பாற்றும் என நம்பினார். ஆனால், இந்தியக் கூட்டு மனசாட்சி என்னும் பலிபீடத்தில் மற்றுமொரு பலியாக அவரைக் காவுகொடுத்திருக்கிறார்கள்’ என்கிறார்கள் இந்தியா முழுவதிலும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.
யாகூப் மேமனுக்குத் தூக்கை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே, ‘பாவம் செய்தவர்களை அரசன் தண்டிக்க வேண்டும். இல்லை என்றால் அந்தப் பாவம், அரசனை வீழ்த்திவிடும்’ என மனுநீதி வாக்கியத்தை மேற்கோள் காட்டியிருப்பதுடன், ‘குண்டு வைத்தவர்கள் அம்புகள்தான். யாகூப் மேமன் போன்ற எய்தவர்களைத் தண்டிக்காமல் விட முடியாது’ என்றும் சொல்லியிருக்கிறார். இந்தத் தர்க்கத்தை சற்று முன்னும் பின்னும் நீட்டித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு என்பது தனித்த சம்பவம் அல்ல. பாபர் மசூதி இடிப்பில் இருந்து அது தொடங்குகிறது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, பாரதிய ஜனதா கட்சி, விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் தொண்டர் கூட்டம் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது. அதன்பிறகு நாடே கலவரக்காடானது. மும்பையில் நடந்த கலவரத்தில் 9,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. அதில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள். அப்போது, ‘மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை நான்தான் தொடங்கிவைத்தேன். நான் அறிவித்த பிறகுதான் தாக்குதல் முடிவுக்கு வந்தது’ என, தனது ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங்கத்தில் வெளிப்படையாக எழுதினார் பால் தாக்கரே. அந்தக் கலவரத்தை எய்தவர் யார் என எய்தவரே சொல்லியிருக்கிறார். ஆனால், மரணம் வரையிலும் பால் தாக்கரேக்கு அரசாங்கம் பாதுகாப்புதான் வழங்கியது; தண்டனை வழங்கவில்லை.
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த வரலாறு காணாத இஸ்லாமியர் படுகொலைக்கு அம்பு எய்தவர் யார்? அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன? 2006-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் உள்ள ஒரு மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகை முடியும் நேரத்தில் வெடித்துச் சிதறிய குண்டு 38 உயிர்களைக் காவு வாங்கியது. 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். 2008-ம் ஆண்டு அதே மாலேகானில் இன்னொரு மசூதியில் வெடித்த குண்டு, 4 உயிர்களைக் காவு வாங்கியது. இவற்றுக்குக் காரணம் என பிரக்யா சிங், தயானந்த் பாண்டே ஆகிய சாமியார்களும், அசிமானந்தா என்கிற முழு நேர ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் கைதுசெய்யப்பட்டனர். அசிமானந்தா, குண்டுவெடிப்புகளுக்கும்
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் உள்ள தொடர்பு ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு வைத்தார். 2007-ம் ஆண்டில் டெல்லி டு லாகூர் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்து 68 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சதிவேலையில் ஈடுபட்டது சுனில் ஜோஷி என்கிற முழு நேர ஆர்.எஸ்.எஸ் ஊழியர். சுனில் ஜோஷி, அனைத்து உண்மைகளையும் போலீஸில் சொல்லக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பது தெரிந்ததும் அவர் மர்மமாகக் கொல்லப்பட்டார். ‘சுனிலைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்’ என்பதையும் அசிமானந்தா வாக்குமூலமாகச் சொன்னார். இருப்பினும், இந்தக் குற்றங்களுக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் பலியானோர் மட்டும் அல்ல… மாலேகான் மசூதியில் பலியானவர்களும் அப்பாவிகள்தான். அவர்களுக்கான நீதியை யார் வழங்குவது? – பாரதி தம்பி
– ஆனந்த விகடன்