அரசியல், இந்தியா, கட்டுரை, விமர்சனம்

தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி!

காந்தி கொலை வழக்கின்போது நீதிமன்றத்தில் நாதுராம் கோட்சே பேசிய ஒலிநாடாவை எனக்கு அனுப்பி, ‘காந்தி கோட்சே தொடர்பாகச் சரியான பார்வையைப் பெற’ அதைக் கேட்குமாறு ஆலோசனையும் வழங்கியிருந்தார் ஒரு இளைஞர். அவர் ‘கோட்சே அபிமானி’ என்பது புரிந்தது. தேசப் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று கருதியதால் கோட்சே அவரைச் சுட்டுக் கொன்றதாகவும், உண்மையான இந்திய தேசியவாதியின் எதிர்வினை அது என்றும் எனக்கு உணர்த்த அவர் முனைந்திருந்தார்.

உண்மை என்னவென்றால், கடைசிக் கட்டம் வரையில் தேசப் பிரிவினையை எதிர்த்தார் காந்தி. 1946 இறுதிவாக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைமை, இந்த விவகாரத்தில் அவருடைய ஆலோசனையைக் கேட்க விருப்பமில்லாமல் அவரையே ஓரங்கட்டியது. அந்த நேரத்தில் ஜவாஹர்லால் நேருவும் சர்தார் படேலும்கூட ஒரு மரியாதைக்காகவாவது காந்தியிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று கருதாமல், பிரிவினை யோசனையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இந்தியாவை இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிளக்கும் மவுண்ட்பேட்டன் பிரபுவின் யோசனையை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்றுக்கொண்டுவிட்டது.

தேசத்தைப் பிரிக்கும் யோசனை 1947 ஜூன் 3-ம் நாள் அறிவிக்கப்பட்டது. ‘இந்தத் திட்டத்தில் தீமையைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை’ என்று அன்று காலையில் பாபு ராஜேந்திர பிரசாதிடம் மனம் வெதும்பிக் கூறினார் காந்தி. தேசப் பிரிவினையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப்போகிறீர்களா என்று ஒரு நிருபர் காந்தியைப் பார்த்துக் கேட்டார். “காங்கிரஸ் கட்சி பித்துப்பிடித்து ஒரு செயலைச் செய்தால், அதற்காக நான் உயிரைக் கொடுக்க வேண்டுமா?” என்று வழக்கத்துக்கு மாறாக விரக்தியுடன் எதிர்க் கேள்வி கேட்டார் காந்தி.

சமஸ்தானங்களின் விவகாரங்களுக்கான செயலர் வி.பி.மேனனின் ஆலோசனையைக் கேட்டுவிட்டு, ‘பிரிவினை இனி தவிர்க்க முடியாதது’ என்று 1946 டிசம்பரில் ஏற்றுக்கொண்டார் படேல். இதை நேருவிடமும் ஜாடையாகத் தெரிவித்துவிட்டார். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், அது பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் படேலுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. ஜின்னாவின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்கவும், வலுவான மையப்படுத்தப்பட்ட இந்தியா அமையவும் பிரிவினை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். பிளவுபடாத பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் முஸ்லிம் லீக் அரசுகளை வைத்துக்கொண்டு இந்தியாவின் மத்திய அரசை வலுவாக வைத்திருக்க முடியாது என்று கருதினார்.

பிரிவினை யோசனையை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதற்கு எதிரான கருத்து கொண்டிருந்தவர்கள் இருவர் மட்டுமே – அவ்விருவருமே முஸ்லிம்கள்! ஒருவர் ‘எல்லை காந்தி’ கான் அப்துல் கபார் கான். “எங்களை ஓநாய்களிடம் (பாகிஸ்தான்) தூக்கிப்போட்டுவிட்டீர்களே?” என்று மிகவும் வருந்தினார். இன்னொருவரான அபுல் கலாம் ஆசாதுக்கு அதில் உடன்பாடே இல்லை என்றாலும், தீர்மானத்தைக் கொண்டுவந்த தன்னுடைய நண்பர் நேருவுக்காக அமைதி காத்தார். பாபு ராஜேந்திர பிரசாத், கோவிந்த வல்லப பந்த் உட்பட அனைவருமே பிரிவினைத் தீர்மானத்தை ஆதரித்தவர்கள்தான்.

உண்மை இப்படியிருக்க, தேசப் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று அவர் மீது பழியைச் சுமத்துவதும் அதன் மூலம் அவரைக் கொன்றவரை தேசியவாதியாகச் சித்தரிக்க முனைவதும் வரலாற்றையே தவறாகத் திருத்த முற்படும் செயலாகும். நல்ல சிந்தனையுள்ள எல்லா இந்தியர்களும் இத்தகைய முயற்சிகளைத் திட்டவட்டமாகக் கண்டிக்க வேண்டும்.

-தி ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *