கல்வியின் எல்லை மதிப்பெண்தான் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் நம் கல்விமுறை பற்றிய கவலையை அதிகரித்தன. பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு, கணிதத் தேர்வு நடந்த அன்று, ஒரு மாணவன் வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானது. பிணையத் தொகையாக ரூ.2 லட்சம் கேட்டதாகத் தகவல். இறுதியில், அது அந்த மாணவனே நடத்திய நாடகம் என்று தெரியவந்தது. கணிதத் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில், மற்றொரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.
இரு சம்பவங்களுக்கும் அடிப்படை தேர்வு, மதிப்பெண் தொடர்பான பயம்தான். வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியாவது போன்ற தேர்வு முறைகேடுகள் வேறு. மெக்காலே கல்விமுறையில் பல தலைமுறைகள் கடந்துவிட்டன. இன்றும் இதுபோல் புலம்பிக்கொண்டே இருப்பதில் நியாயமில்லைதான். பல சிறிய நாடுகளில் கல்வி எனும் விஷயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பின்லாந்து ஓர் உதாரணம்!
நெருக்கடியில் வளர்ந்த தேசம்
ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பின்லாந்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 55 லட்சம்தான். 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்வீடனின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது பின்லாந்து. அதன் பின்னர், சிறிதுகாலம் சோவியத் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1917-ல் விடுதலை அடைந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள், உள்நாட்டுக் கலகங்கள் என்று பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்த நாடு அது. 1950 வரை ஒரு விவசாய நாடாக மட்டுமே இருந்த பின்லாந்து, இன்று அதிக அளவு தனிநபர் வருமானம் உடைய நாடுகளில் ஒன்றாகவும், பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அளவுகோல்களாகக் கருதப்படும் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம், குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாத்தல், மனிதவள மேம்பாடு ஆகிய வற்றில் தலைசிறந்து விளங்குகிறது இந்நாடு. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமையைத் தந்த முதல் நாடான பின்லாந்து, லஞ்சம் இல்லாத நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
ஆசிரியர்களின் பங்களிப்பு
பின்லாந்தின் 60 ஆண்டு காலப் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், ஆட்சியாளர்களும் மக்களும் கல்வியில் செலுத்திய அக்கறையும் ஈடுபாடும்தான். பொருளாதார மறுமலர்ச்சி வேண்டுமெனில், சரியான கல்விமுறைதான் சிறந்த கருவி என்று 1963-ல் அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்தது. பல்வேறு கருத்துக்கேட்புக் கூட்டங்கள், விவாதங்களுக்குப் பிறகு நாடு முழுவதும் முழுமையான பொதுக் கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல நூறு ஆசிரியர்களைக் கலந்தாலோசித்து உருவானது அத்திட்டம்.
8 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் பகல் நேரங்களில் அந்தந்த நகராட்சிகளின் பாதுகாப்பு மையங்களில் பராமரிக்கப்படுகின்றன. இம்மையங்களில், மற்ற குழந்தைகளுடன் பழகும் குழந்தைகள் பிறருடன் பழகும் தன்மை, மற்றவர்களின் குணநலன்கள், தேவைகளை அறிந்துகொள்ளுதல் என்று பல்வேறு விஷயங்களை இயல்பாகவே கற்றுக்கொள்கின்றன. இந்த ஐந்து ஆண்டு காலப் பயிற்சி, அக்குழந்தை பின்னர் சுயமாகக் கல்வி கற்க உறுதிசெய்கிறது. இதன் மூலம் பிரகாசமான எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுகிறது. பின்னர், ஆறு வயதிலிருந்து ஏழு வயது வரை, ஒரு வருடம் மட்டுமே மழலையர் பள்ளி முறை நடைபெறுகிறது. அங்கேயும் வாசித்தல், கணிதம் போன்றவற்றுக்குப் பதிலாக இயற்கை, விலங்குகள், வாழ்க்கைச் சக்கரம் போன்றவைதான் பாடங்களாக உள்ளன. ஏழு வயது வரை குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி கிடையாது என்பதுதான் மிக முக்கியமான விஷயம்.
ஏழு வயதிலிருந்து, பதினைந்து வயது வரை ஒன்பது ஆண்டுகள் ஆரம்பக்கல்வி கட்டாயமாகிறது. தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. ஒரு வகுப்பில் 20 – 25 மாணவர்களே இருப்பார்கள். தாய்மொழி தவிர கூடுதலாக மற்றொரு மொழியையும் கற்கலாம். கலை, இசை, சமையல், தச்சு வேலை, உலோக வேலை மற்றும் நெசவு போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன.
வகுப்பறை மற்றும் பள்ளியில் நல்ல இதமான, எந்த வித அழுத்தமும் அற்ற மகிழ்ச்சியான சூழலே நிலவுகிறது. குழந்தைகள் புத்தகம் வாசிக்கும் பழக்கம் மிகவும் உற்சாகப்படுத்தப்படுகிறது. உலகிலேயே குழந்தைகளுக்கான புத்தகங்களை அதிகம் பதிப்பிக்கிற நாடு பின்லாந்துதான். மாணவர்களுக்குக் குறைவான ‘ஹோம்வொர்க்’தான் தரப்படுகிறது. நம் ஊரைப் போல மதிப்பெண் அடிப்படையில் மற்ற குழந்தைகள் ஒப்பிடப்படுவதில்லை. தரப்படுத்தப்படும் தேர்வு முறை இல்லை. ஆரம்பக் கல்வி என்பது வெறும் ஏட்டுக் கல்வியில் கிடைக்கும் வெற்றி அல்ல என்று பின்லாந்து கல்வியாளர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் தங்கள் திறன்களை உணர்ந்துகொள்வது, வாழ்க்கை பற்றிய புரிதலை இயல்பாகவே கற்றுக்கொள்வது என்று மிக முக்கியமான விஷயங்களை அந்நாட்டின் ஆரம்பக் கல்வி தருகிறது.
புண்ணியம் செய்த ஆசிரியர்கள்
இத்தகைய கல்வி முறையை நல்ல முறையில் நடை முறைப்படுத்தத் தரமான ஆசிரியர்கள் தேவை. பின்லாந்தில் ஆசிரியர் ஆவதற்குக் குறைந்தபட்சம் பட்ட மேற்படிப்பு படித்திருக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு முறையும் மிகக் கடினமான ஒன்று. பணிபுரியும் ஆசிரியர்களுக்குத் தொடர் பயிற்சியும், மதிப்பீடும் கட்டாயம். அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியமும், உயர்ந்த சமூக அந்தஸ்தும் கொடுக்கப்படுகிறது.
கட்டாய ஆரம்பக் கல்விக்குப் பிறகு 16 வயதில் மூன்று அல்லது நான்கு வருடங்கள் மேல்நிலைக் கல்வி வழங்கப்படுகிறது. இந்நிலையில், மாணவர்கள் தொழிற் கல்வி அல்லது பொதுக்கல்வி என ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இதன் பிறகு, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி வழங்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படு கின்றனர். பள்ளியில் மாணவர்களுக்குக் கல்வி, உணவு, மருத்துவம், சுற்றுலா போன்ற அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள சூழலுக்கேற்பப் பாடத்திட்டத்தையும், கற்பிக்கும் முறையையும் தீர்மானிக்கும் சுதந்திரம் ஆசிரியர்களுக்கு உண்டு. குழந்தைகளின் படைப்புத்திறன், சிந்தனை சக்தி போன்றவை வளர்க்கப்படுகின்றன.
சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டம் எனும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளைச் சேர்ந்த பதினைந்து வயது அடைந்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, உலகத் தர வரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. வாசித்தல், கணிதம், அறிவியல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் நிதி பற்றிய கல்வியறிவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தேர்வு இது. இந்தப் பட்டியலில் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணியில் இருப்பது பின்லாந்துதான்.
மனித மூலதன அறிக்கையை உலகப் பொருளாதார மன்றம் சமீபத்தில் வெளியிட்டது. 214 நாடுகளின் கல்வித்தரம் மற்றும் வேலைத் திறன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள தர வரிசைப் பட்டியலில் பின்லாந்துதான் முதலிடத்தில் உள்ளது. நாம் 114-வது இடத்தில் இருக்கிறோம்!
நாம் பலவீனமாக இருக்கும் விஷயங்களில் மற்ற நாடுகளைப் பார்த்து மாற்றங்கள் செய்வதில் தவறில்லை. கல்வியின் தரத்தை உயர்த்துவதுகுறித்த ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். பின்லாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு கொண்டுவருவதுகுறித்த ஆய்வுகளுக்கு அரசு ஊக்கம் தர வேண்டும். நம் குழந்தைகளுக்குச் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர அனைவரும் கைகோக்க வேண்டிய தருணம் இது.
– ஆதி, முதன்மைக் கல்வி ஆலோசகர்,
மாஃபா கல்விச் சேவை நிறுவனம், சென்னை.