தமிழ்நாடு

நரிக்குறவர் இன வீட்டில்… பாசி மணியை அணிந்து கொண்டு காபி, இட்லி சாப்பிட்ட முதல்வர்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 3 மாணவிகளும் பேசினர்.

அப்போது, மாணவிகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் நாசர், ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் ஆகியோர் நேரில் சென்றனர். மேலும், முதல்வரை சந்தித்த 3 மாணவிகள் உட்பட 40 பேரை சந்தித்து அவர்களின் கல்வி குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து நரிக்குறவ மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இன்னும் ஒரு வாரத்தில் தங்களை காண நேரில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.

சோறு போடுவீங்களா

அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலி,ன உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு கொடுப்பீர்களா என கேட்டார். அதற்கு, தங்களுக்கு கறி சோறு போடுவதாக மாணவிகள் சந்தோஷமாக பதிலளித்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக ஒருநாள் வருவேன் என்று கூறினார்.

சொன்னதை செய்த முதல்வர்

முதல்வர் சொன்னது போலவே இன்றைய தினம் ஆவடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்றார். அவரை நேரில் பார்த்த உடன் அனைவரும் உற்சாகமடைந்தனர். மாணவிகள் பூ கொடுத்தும் பாசிமணி அணிவித்தும் வரவேற்றனர். அங்கிருந்த மாணவியின் வீட்டிற்கு சென்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

டீ, இட்லி, வடை

இதனையடுத்து முதல்வருக்கு புது எவர்சில்வர் டம்பளரில் காபி கொடுக்கப்பட்டது. பின்னர் தட்டில் வைத்து இட்லி, வடை, நாட்டுக்கோழி குழம்பு, சட்னி அளிக்கப்பட்டது. அதனை அன்போடு சாப்பிட்ட முதல்வர் உணவு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறினார். முதல்வர் இட்லி சாப்பிடும் முன்பாக அருகில் இருந்த குழந்தைக்கு இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

காரமான உணவு

உணவு காரமாக இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்களே காரமாக சாப்பிட்டால்தான் சளி இருமல் வராது என்றும் தெரிவித்தனர். முதல்வர் நேரில் வந்தது இன்னமும் கூட நம்ப முடியாமல் இருப்பதாக மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவித்தனர். கனவில் நடப்பது போல இருப்பதாகவும் கூறினர். சொன்னபடி மாணவிகளின் வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *