இந்தியா, கட்டுரை, கல்வி, மருத்துவம், விமர்சனம்

நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது

20-medicaleducation

பணியின்போது ஊழலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான செய்திகள் தினமும் நம்மை வந்தடைகின்றன. ஆனால், கல்வி பயிலும் போதே சிலர் முறைகேட்டில் ஈடுபடுவது தொடர்பாகச் சமீபத்தில் வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்காக அனைத்திந்திய அளவில் மே 3-ல் நடந்த நுழைவுத் தேர்வில் ‘அறிவியல் புனைகதை’களில் நடக்கும் சம்பவங்களுக்கு இணையான முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

கேள்வித் தாளில் அச்சிடப்பட்ட கேள்விகளுக்கு, யாரோ ஒருவர் பதில்களை ஒவ்வொன்றாகப் படிக்க, வெவ்வேறு தேர்வு மையங்களில் இருந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்போன் வாயிலாக அதைக் கேட்டு எழுதியிருக்கிறார்கள். இதற்காக சிறப்பான மேல்சட்டை அணிந்து அதற்குள் செல்போனை மறைத்து வைத்திருக் கிறார்கள். ‘இந்த சேவைக்காக’ ஒவ்வொரு மாணவரும் 15 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரையில் கொடுத்திருக்கிறார்கள்.

3,000 இடங்களுக்கு 6.3 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த நுழைவுத் தேர்வு நேர்மையற்றவர்களின் செயலால் சீர்குலைந்து விட்டது. கடந்த ஆண்டும் இதே போன்ற மோசடி நடந்திருக்கிறது என்று பிடிபட்டவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

பணம் கொடுத்த மாணவர்களின் செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு, ஒரே இடத்திலிருந்து பதில்களை அளிப்பது என்றால் துணிச்சல், திட்டமிடல், ஒருங்கிணைப்பு, அதிகார வர்க்கத்தின் ஆசி இல்லாமல் நிச்சயம் நடந்திருக்கவே முடியாது. பிஹாரில் பள்ளியிறுதித் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு ஜன்னல் வழியாக ‘பிட்’டுகளைத் தூக்கி வீசியதைப் போல அல்ல இது. கல்வி, நேர்மை குறித்து கவலைப் படாத பணக்காரர்கள் சிலர் செய்திருக்கும் உயர் மட்ட ஊழல்.

அலைபேசியில் பதிலைக் கேட்டு வாங்கியவர்களை மட்டும் தனிமைப்படுத்தி அவர்களுடைய தேர்வை ரத்து செய்யலாம் என்று சி.பி.எஸ்.இ. கூறிய யோசனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்திருப்பது சரிதான். செல்போனில் தொடர்புகொண்டவர்கள் போக, வேறு யார் யார், எந்தெந்த வகையில் அந்தக் கும்பலிடம் உதவி பெற்று எழுதியிருப்பார்களோ, யாருக்குத் தெரியும்?

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து தேர்வை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் (ஜூலை 15-க்குள்) மீண்டும் நுழைவுத் தேர்வை நடத்துமாறு உத்தர விட்டிருந்தது. எனினும், ஏற்கெனவே பல தேர்வுகளை நடத்தியி ருந்ததால் பணிச்சுமை அதிகம் என்றும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. கோரியிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 17-க்குள் தேர்வை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ-க்கும் இது கூடுதல் சுமைதான். ஆனால், நடந்திருக்கும் விஷயத்துக்கு விரைவில் தீர்வு காணவில்லை என்றால், அது பல மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துவிடும்.

பல்கலைக்கழகங்களும் சுயாட்சிக் கல்லூரிகளும் நடத்தும் தேர்வுகள் மீது நம்பிக்கை இல்லாததால்தான் இந்த நுழைவுத் தேர்வு வந்தது. நம்முடைய கல்வியின் தரம் மட்டுமல்ல, கல்வித் துறையைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஏன் மாணவர்களின் நேர்மைகூட சந்தேகத்துக்குள்ளாகிவிட்டது. இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் துளிகூடத் தாமதிக்காமல் உடனே செய்துமுடிக்க வேண்டும்.

– தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *