“இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விஷயத்தை வைத்து ஒரு கதாநாயகனாகவோ ஊடக வெளிச்சத்தின் முன் தர்மசங்கடமாக உணரவோ நான் விரும்பவில்லை” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் 40 வயது நிரம்பிய அந்த மனிதர். அவர் பெயர் வினீத் குமார் பாண்டே. சுருக்கமாக வி.கே. பாண்டே. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி. இன்றைய தேதிக்கு இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் விவாதிக்கப்படும் மேகி நூடுல்ஸ் விவகாரத்தின் சூத்ரதாரி அவர். உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் நாடு முழுவதும் திடீர் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் இவருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு என்று நடிகர் நடிகைகளால் விளம்பரப்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸுக்கு எதிரான இவரது யுத்தத்தின் பின்னணியில் அவரது குழந்தைகளும் இருக்கிறார்கள். ஆம், அவரது குழந்தைகளும் மேகி நூடுல்ஸை விரும்பி சாப்பிடுபவர்களாகத்தான் இருந்தனர். ஆனால், இன்று எல்லாமே தலைகீழ். உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படும் ரசாயனப் பொருட்கள் அடங்கிய மேகி நூடுல்ஸைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியாவின் குழந்தைகளுக்கே சொல்லியிருக்கிறார் வி.கே. பாண்டே.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி நகரில் உள்ள ‘ஈஸி டே’ பல்பொருள் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான ‘மேகி’ நூடுல்ஸ் பாக்கெட்டுகளை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் குழு சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியது. வணிகரீதியாக அஜினோமோட்டோ என்று அழைக்கப்படும் மோனோசோடியம் குளுடாமேட் உணவில் அதிக அளவில் சேர்க்கப்பட்டால் உடல் நலக் குறைவு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேகி நூடுல்ஸில் இது சேர்க்கப்படவே இல்லை என்றுதான் அதன் உறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் வழக்கமாக அனுமதிக்கப்படும் அளவை விட அதிகமாக எம்.எஸ்.ஜி. இருந்ததை ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. எனினும் இதை ஏற்றுக்கொள்ளாத நெஸ்லே நிறுவனம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள ஆய்வகம் ஒன்றில் மேகி நூடுல்ஸ் சோதனை செய்யப்பட்டபோது, இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் எம்.எஸ்.ஜி. மட்டுமல்லாமல், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காரீயம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனை என்றாலும் அதன் முடிவுகள் சமீபத்தில்தான் வெளிவந்தன. ஊடகங்களில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறைக்குத் தலைமையேற்று முனைப்புடன் நடவடிக்கை எடுத்தவர் வி.கே. பாண்டேதான்.
மேகி நூடுல்ஸ் மட்டுமல்ல, பிரிட்டானியா கேக், அசைவ உணவுதான் என்று அந்த நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வைத்தவர். அதற்கு முன்னர், கேக்கின் உறையில் ‘இது அசைவ உணவுப் பொருள்’ என்று கண்ணுக்குத் தெரியாத வகையில் எழுதப்பட்டிருந்தது. இவர் வழக்கு தொடர்ந்த பின்னர்தான், பளிச்சென்று தெரியும் வகையில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டது. இதேபோல், லக்னோவில் பிரபலமான வாஹித் பிரியாணியில் சேர்க்கப்படும் நிறமி தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்தார்.
இந்தியாவில் எந்த விஷயமும் ஆரம்ப பரபரப்புக்குப் பின் அடங்கிவிடும் என்று நினைத்திருந்த நெஸ்லே நிறுவனம், நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைக் கண்டு மிரண்டுவிட்டது. அந்நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி பால் பல்கெ சுவிட்ஸர்லாந்திலிருந்து பறந்துவந்து இந்தியாவில் இறங்கிவிட்டார். ஒருபக்கம் மேகி நூடுல்ஸைத் திரும்பப் பெறுவதாகக் கூறினாலும், மறுபுறம் எங்கள் தயாரிப்பு சுத்தமானது, சுகாதாரமானது என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறது நெஸ்லே நிறுவனம்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச செய்தி இதழ்களில் வெளிவரும் அளவுக்குத் தீவிரமாகச் செயல்பட்ட வி.கே. பாண்டே என்ன சொல்கிறார்? “1998-ல் நான் இந்தப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில், கே.எஃப்.சி. இதேபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியது. (இதில் மூன்று மடங்கு அதிகம் எம்.எஸ்.ஜி. இருந்ததாகச் சர்ச்சை எழுந்தது!) இதுபோன்ற விவகாரங்கள், பொதுமக்களின் உடல்நலம் குறித்த அக்கறையை எனக்குள் விதைத்தன” என்கிறார் அமைதியாக.
இதற்கிடையே, இந்த மேகி நூடுல்ஸ் விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது தான்தான் என்றும், இதற்கான புகழ் அனைத்தையும் தனது மேலதிகாரியான வி.கே. பாண்டே எடுத்துக்கொண்டதாகவும் அதே துறையைச் சேர்ந்த உணவு சோதனை ஆய்வாளர் சஞ்சய் சிங் பரபரப்புப் புகார் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாரபங்கியில் மேகி நூடுல்ஸ்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியது தான்தான் என்று சஞ்சய் சிங் கூறியிருக்கிறார். ஆனால், “துறையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி அளிக்கப் பட்டிருந்தது. மேகி பாக்கெட்டுகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியது சஞ்சய் சிங்தான். ஆனால், ஆய்வு முடிவுக்குப் பிறகு உரிய நடவடிக்கையை எடுத்தது நான்தான்” என்று விளக்கமளித்திருக்கிறார் வி.கே. பாண்டே.