உலகம், பொருளாதாரம், வர்த்தகம்

நெருக்கடியில் கிரேக்கம்

Greece-financial-crisisஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த மிகப் பெரிய பொரு ளாதார நெருக்கடியை மீண்டும் சந்தித்திருக்கிறது கிரேக்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான கிரேக்கத்தில் ஏற்பட் டிருக்கும் நெருக்கடி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கிரேக்கம். குறிப்பாக, சர்வதேச நிதியத்துக்குச் சுமார் ரூ. 10,000 கோடி தவணையைத் திருப்பிச் செலுத்த ஜூன் 30 வரை கெடு விதிக்கப்பட்டது. அந்நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக அரசு மேற்கொள்ள வேண்டிய சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாகப் பல நிபந்தனைகளை இந்த மூன்று அமைப்புகளும் விதித்தன.

இந்த நிபந்தனைகளை ஏற்பதன் மூலம் கிரேக்க மக்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்று கருதுகிறார், அந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ராஸ். எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று முடிவுசெய்ய ஜூலை 5-ல் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்தார். இதனால் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை அதிருப்தி அடைந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தே வெளியேறுவது தொடர்பாக முடிவெடுக்கத்தான் இந்த வாக்கெடுப்பு என்று அவை கருதுகின்றன. ஆனால், அதை அலெக்சிஸ் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இந்த நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என்று கிரேக்க மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கும் அலெக்சிஸ், ஒருவேளை இந்த நிபந்தனைகளுக்கு ஆதரவாக கிரேக்க மக்கள் வாக்களித்தால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். அலெக்சிஸின் சிரிஸா கட்சி தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டது.

Greece Bailout_Kand

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கம் வெளியேறும் நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சிரிஸா கட்சிக்கு வாக்களித்திருந்தனர் கிரேக்க மக்கள். மக்கள் தங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு இணங்க, சிரிஸா கட்சியின் பிரதிநிதிகள் இந்த மூன்று அமைப்புகளுடனும் கடந்த ஐந்து மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். எனினும், இந்த விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்ளும் இந்த மூன்று அமைப்புகளும் மேலும் நிபந்தனைகளை விதித்திருக்கின்றன.

2010-ல் கிரேக்கத்துக்கு முதன்முதலாகப் பெரிய அளவில் நிதியை அளித்த இந்த அமைப்புகள், 2012-ல் மீண்டும் கடன் அளித்தன. தங்கள் நிபந்தனையில் இந்த அமைப்புகள் உறுதியாக இருப்பதற்கு முக்கியக் காரணம், கிரேக்கத்தைப் பார்த்து மற்ற நாடுகளும் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சுணக்கம் காட்டலாம் என்பதுதான். எனவே, கிரேக்கத்தைக் கடன் சுமையிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளை மேலும் ஐந்து மாதங் களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்ட இந்த அமைப்புகள், தங்கள் நிபந்தனைகளில் கடுமைகாட்டுகின்றன.

கிரேக்கத்தில் பொருளாதாரம் முற்றிலும் சரிவதைத் தடுக்கும் நடவடிக்கையாக வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏ.டி.எம்-களில் எடுக்கும் பணத்தின் அளவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் அந்நாட்டு மக்களைக் கடும் துயரத்துக்கு ஆளாக்கியிருக்கின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதோ, மிகப் பெரிய கடன் பிரச்சினையிலிருந்து மீள்வதோ கிரேக்கத்துக்கு எளிதான காரியமல்ல என்பது மட்டும் தெரிகிறது.

– தி இந்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *