நேருவைப் பற்றிய அவதூறுகள் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து விதைக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் மர்மமானது என்றும் அவர் ஸ்டாலினால் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலை ஒன்றில் மரணமடைந்தார் என்றும் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. நேதாஜி குடும்பத்தை வேவு பார்த்தது 1948 முதல் 1968 வரை தொடர்ந்து நடந்தது என்ற செய்தி, நேரு என்ற பெயரைக் கேட்டாலே எரிச்சல் அடைபவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. நேருவுக்கும் வேவு பார்த்ததுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவரை நேரடி ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும், நேருவின் மீது அவர்கள் குற்றம் சொல்லத் தயங்கவில்லை. உண்மை என்ன?
நேதாஜி மரணம் – தொடரும் சர்ச்சைகள்
தைவானில் 1945 ஆகஸ்ட் 18 அன்று நேதாஜி சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. அவருடன் பயணித்த ஜப்பானிய ஜெனரல் ஒருவரும் விமான ஓட்டியும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். கடுமையான தீக்காயங்களுடன் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 18-ம் தேதி அவர் மரணமடைந்தார். உடல் 20-ம் தேதி எரியூட்டப்பட்டது. அவருக்குத் துணையாகச் சென்ற கர்னல் ரகுமான் (விபத்தில் அதிக காயங்களின்றிப் பிழைத்தவர்) அஸ்தியைக் கொண்டுவந்தார். அஸ்தி டோக்கியோவில் உள்ள புத்தர் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.
நேதாஜி மரணம் குறித்து 1946-லிருந்தே சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. 1946-ல் அமெரிக்க உளவுத் துறையின் மேற்பார்வையில் டோக்கியோவில் இயங்கிக்கொண்டிருந்த கர்னல் ஃபிக்கஸ் என்பவரை – ஜப்பானிய மொழி வல்லுனர் – மவுன்ட் பேட்டன் (அப்போது அவர் கண்டியில் பிரிட்டானிய ராணுவத் தலைவராக இருந்தார்) போஸ் மரணம் உண்மையாக நடந்ததா என்பதை ஆராய்ந்து அறிக்கை கொடுக்குமாறு ஆணையிட்டார். ஃபிக்கஸ் தனது அறிக்கையில் மரணமடைந்தது உண்மைதான் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதற்குப் பின் இந்தியாவிலிருந்து
1946-ல் தைவான் சென்ற ஹரின் ஷா நேதாஜிக்கு மருத்துவமனையில் பணிவிடை செய்த சீன செவிலியரை நேர்காணல் செய்து, அவரது இறப்பு உண்மைதான் என்று உறுதிசெய்தார்.
1946-ல் காப்டன் டர்னர் என்பவர் நேதாஜியைக் காப்பாற்ற முயன்ற டாக்டர் யோஷிமியைப் பார்த்து இறந்தது நேதாஜிதான் என்பதை உறுதிசெய்தார். 1951-ல் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த எஸ்.ஏ. ஐயர் தலைமையில், நேதாஜி மரணத்தின் பின்னணியை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை அளித்தார். அது இந்திய நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஆனாலும், சர்ச்சைகள் தொடர்ந்து இருந்ததால் 1956-ல் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஷா நவாஸ் கான் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியது. விமானத்தில் அவருடன் சென்ற ஐந்து ஜப்பானியர்கள் என்ன நடந்தது என்பதை விளக்கினார்கள். இவர்களைத் தவிர, டாக்டர் யோஷிமியும் தைவான் மருத்துவமனையில் இருந்த பணியாளர்களும் சாட்சியம் அளித்தனர். குழு இறப்பை உறுதிசெய்தாலும், அதன் உறுப்பினராக இருந்த நேதாஜியின் சகோதரர், வரைவு அறிக்கையில் கையெழுத்திட்டாலும் பின்பு, போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று மறு அறிக்கை அளித்தார்.
1970-ல் நீதியரசர் கோஸ்லா (காந்தி கொலை வழக்கை விசாரித் தவர் ) மறுபடியும் விசாரித்தார். அவரும் விபத்தையும் மரணத்தையும் உறுதிசெய்து அறிக்கை அளித்தார். இவருக்கு முன்னால்தான் பலர் நேதாஜி மரணத்தைக் குறித்து விதவிதமான கதைகளைச் சொன்னார்கள். ரஷ்யச் சிறையில் இருக்கிறார், ஃபைசாபாத்தில் சன்யாசியாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. கோஸ்லா இவையெல்லாம் கட்டுக்கதை என்று உறுதியாகச் சொன்னார்.
1999-ல் நீதிபதி முகர்ஜி தலைமையில் இன்னொரு விசாரணை நடந்தது. இவர் விமான விபத்தே நடக்கவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டார். காரணம், தைவான் அரசு விபத்து பற்றிய ஆவணங்கள் இல்லை என்று சொன்னது. ஆனால், தைவான் 1946 வரை ஜப்பானியர்கள் கைவசம் இருந்தது என்பதையும், இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டமான 1945 காலகட்ட ஆவணங்கள் முழுவதும் 1949-ல் ஆட்சிக்கு வந்த சியாங்கை ஷேக் அரசுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதையும் இவர் வசதியாக மறந்துவிட்டார்.
விவாதங்கள் தவறா?
அப்படியென்றால், தொலைக்காட்சியில் உரத்த குரல்களில் விபத்து நடக்கவே இல்லை என்று பேசுபவர்களும், பத்திரிகைகளில் வலிந்து வலிந்து எழுதுபவர்களும் சொல்வது தவறா?
இவ்வாறு எழுதுபவர்களில் ஒருவர்கூட வரலாற்று வல்லுநர்கள் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மூன்று மிகச் சிறந்த வரலாற்று வல்லுநர்கள் – மூவரும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் – விபத்து நடந்தது என்று சொல்கிறார்கள். மிருதுளா முகர்ஜி, ருத்ராங்ஷு முகர்ஜி, சுகதா போஸ் என்ற இந்த மூவரில் சுகதா போஸ், நேதாஜியின் சகோதரர் பேரன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். இவரது தந்தை சிசிர் போஸ் (வேவு பார்க்கப்பட்டவர்களில் ஒருவர்) நேதாஜியின் மருமகன். அவருக்கு மிகவும் நெருக்கமானவர். போஸ் தப்பித்துச் சென்றபோது அவருக்குக் காரோட்டியாக இருந்தவர்.
வேவு பார்த்தது!
போஸ் ஆவணங்களில் 10,000 பக்கங்கள் பொதுப்பார்வைக்கு வந்துவிட்டன. இவற்றிலிருந்து இதுவரை வெளிவந்த ஆவணங்களில், நேருதான் வேவு பார்க்க ஆணையிட்டதாக ஒரு ஆவணம்கூடச் சொல்லவில்லை. பிரிட்டனின் உளவுத் துறையான எம்.ஐ. 5 உடன் இந்திய உளவுத் துறை தொடர்பு வைத்துக்கொண்டிருந்தது என்ற குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள். இவர்களுக்கு வரலாறு தெரியாது. 1947-ல் சுதந்திர இந்தியாவுக்கு வெளிநாடுகளில் வேவு பார்க்கும் திறமை அறவே கிடையாது. 1951 வரை இதற்கு அது பிரிட்டானிய உளவுத் துறையையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்று உளவுத் துறைத் தலைவராக பல ஆண்டுகள் இருந்த பி.என். மலிக் தனது நூலில் சொல்கிறார்.
வேவு பார்க்க வேண்டிய கட்டாயம் என்ன?
1948 காலகட்டம் அவ்வளவு அமைதியான ஆண்டு என்று சொல்ல முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரணதிவே தீஸிஸ் என்ற அறிக்கையின் மூலம், இந்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் தேசிய ஜனநாயகப் புரட்சிக்கு எதிரிகள் என்று கல்கத்தாவில் காந்தி இறந்து சில வாரங்களில் அறிவித்தது. “இந்த விடுதலை பொய்யானது!” என்று முழக்கமிட்டது. 1948-ல் அண்டை நாடான சீனாவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கோமிண்டாங்க் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் கடுமையான உள் நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. மற்றொரு அண்டை நாடான பர்மாவின் தலைவர் ஆங்க் ஸான் சுட்டுக் கொல்லப்பட்டு அங்கும் பல இடங்களில் கம்யூனிஸ்ட்டுகள் போர்க்கொடி தூக்கியிருந்தனர். காந்தியும் நேருவும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகள். புரட்சிக்கு எதிரானவர்கள் என்பது சோவியத் ஒன்றியத்தின் நிலைப்பாடாக இருந்தது. எனவே, சோவியத் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவி செய்யலாம் என்று அன்றைய அரசு கருதியது இயற்கை. மேற்கு வங்க அரசு கம்யூனிஸ்ட் கட்சியை உடனடியாகத் தடை செய்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நேதாஜி நிறுவிய பார்வர்டு பிளாக் கட்சியிலும் மார்க்சிய நோக்கு கொண்டவர்கள் பலர் இருந்தனர். அவரது மருமகன்களான சிசிரும் அமியாவும் இடதுசாரியினர் என்பதால், அன்றைய மேற்கு வங்க அரசு அவர்களை வேவு பார்க்க உத்தரவிட்டிருக்கலாம். அன்று மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் பி.ஸி ராய். போஸ் குடும்பத்துக்கும் அவருக்கும் என்றுமே ஒத்துவந்ததில்லை. இதைத் தவிர, ஒரு வேளை போஸ் உயிரோடு இருந்து குடும்பத்தோடு தொடர்பு கொள்வாரோ என்ற ஐயமும் இருந்திருக்கலாம். ஆனால், 20 ஆண்டுகள் ஏன் தொடர்ந்தது என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.
பதில் எதுவாக இருந்தாலும், நேரு தனது சொந்த ஆதாயத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்பது உறுதி. பூட்டி வைக்கபட்டிருக்கும் ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வரும்போது உண்மையும் வெளியில் வரும்.
– பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
– தி இந்து