ஆரோக்கியம், மருத்துவம், விமர்சனம்

பயத்தை ஏற்படுத்தி, பணம் பறிக்கும் மருத்துவ பரிசோதனைகள்; நோயாளிகளே உஷார்!

மருத்துவ பரிசோதனைகள்புதுடில்லி : பல நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு வருமானத்தை உயர்த்துவதற்காக, மக்களை கவரும் வகையிலான சலுகை விலையில் மருத்துவ பரிசோதனை திட்டங்களை அறிவிக்கின்றன. இத்தகைய பரிசோதனைகளை செய்து கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 28 வயதாகும் ரிதிமா சென் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பல நாட்களாக தனக்கு இருந்து வந்த இடுப்பு வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர், அவரது சிறுநீரகத்தில் கல் அடைப்பு உள்ளதாக சந்தேகிப்பதாகவும், அதற்காக பல முக்கிய டெஸ்டுகளை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். இடுப்பு வலிக்கு எதுற்காக சிறுநீரகம் தொடர்பாக டெஸ்ட்கள் என நினைத்த ரிதிமா, கோல்கத்தாவில் இருக்கும் தனது குடும்ப டாக்டரிடம் ஆலோசித்துள்ளார். ரிதிமா சொல்வதை கேட்ட அவர், இந்த நோய்க்கு இந்த டெஸ்ட்கள் தேவையற்றது எனவும், உங்களுக்கு இருக்கும் நோய் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பணம் பறிக்கும் திட்டம்:

இது குறித்து தெரிவித்த ரிதிமா, அந்த சமயம் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனக்கு அவர் எடுக்க கூறி இருந்த டெஸ்ட்கள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவழிக்கக் கூடியது. இன்னும் நான் தொடர்ந்து பரிசோதனைக்கு சென்றிருந்தால் அந்த தனியார் மருத்துவமனை டாக்டர் என்னிடம் இன்னும் பல டெஸ்ட்கள் எடுக்கச் சொல்லி எனது பணத்தை பறித்திருப்பார் என்றார்.பணத்திற்காக இது போன்ற தேவையற்ற பரிசோதனைகளும், அதிகஅளவிலான நோய் கண்டுபிடிப்பு சோதனைகளும் நடத்தப்பட்டு தான் வருகின்றன. இது தொடர்பாக ஆஸ்திரேலிய டாக்டரான டேவிட் பெர்கர், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் எழுதி உள்ள கட்டுரையில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது : உயர்ரத்த அழுத்தமோ, இதய நோய்களோ இல்லாத நோயாளி ஒருவரை ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறையும் இ.சி.ஜி., எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு பயந்து அவர் மற்றொரு மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கிருந்த மூத்த டாக்டர் ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை அல்ட்ராசோனோகிராபி எனப்படும் பரிசோதனையை எடுக்க சொல்லி உள்ளார். இதற்காக ஏழையான அவரிடம் ஒவ்வொரு முறையும் ரூ.1000 வாங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ துறையில் பணியாற்றும் அனைவருக்கும் இது தெரியும் என தெரிவித்துள்ளார்.

திணிக்கப்படும் பரிசோதனைகள்:

பெர்கரின் கட்டுரையை தொடர்ந்து டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி சர்ஜிகல் பிரிவின் தலைமை டாக்டர் சமிரன் நுன்டி கூறுகையில், நமது மருத்துவ துறையில் நிறைந்துள்ள ஊழலே இதற்கு காரணம். ஒவ்வொரு டாக்டரும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் ஒரு குறிப்பிட்ட டெஸ்ட்டை கண்டிப்பாக எடுக்கச் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நோய் கண்டறியும் சோதனைகள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தி இந்த சோதனைகள் நோயாளிகளிடம் திணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.சில குறிப்பிட்ட மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைப்பதும் இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இந்த மருந்துகளை கட்டாயம் மக்களிடம் விற்க வேண்டும் என டாக்டர்களை வற்புறுத்தும் இந்த நிறுவனங்கள், இதற்காக அந்த டாக்டருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாகவோ அல்லது ஊக்கத்தொகையாகவோ வழங்குகின்றன. ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது என மக்களிடம் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி உள்ள டாக்டர்கள், பல பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளை பரிந்துரை செய்கின்றனர். டாக்டர்கள் மற்றும் பரிசோதனை மையங்கள் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தத்தின் பேரிலேயே இந்த பரிந்துரைகள் செய்யப்படுகிறது.

பயத்தை ஏற்படுத்தி பணம் பறிப்பு:

கார்களை தொடர்ந்து சோதித்து கொண்டே இருந்தால் தான் அவைகள் நல்ல நிலையில் இருக்கும். இதே போல் நமது உடல்நிலையை தொடர்ந்து டாக்டரிடம் காட்டி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்குகின்றன. ஆனால் மனித உடல்நிலையும், காரும் ஒன்றா? நமக்கு இருக்கும் சாதாரண நோய்களும் டாக்டர்களால் மிகைப்படுத்தி கூறப்பட்டு, அந்த நோய் பற்றிய பயத்தை நமது மனதில் ஏற்படுத்தி விடுவதால் மக்களும் டாக்டர்கள் கூறுவதை நம்பி, அவர்கள் கூறும் டெஸ்ட்களை எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில், ஆண்டுக்கு ஒருமுறை முழுஉடலையும் பரிசோதித்து கொள்வது தேவையற்றது என டாக்டர் நுன்டி தெரிவித்துள்ளார். மேலும் நல்ல நிலையில் இருக்கும் ஒரு மனிதன் தனது உடலை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் உட்படுத்துவதால் பல பக்கவிளைவுகளும் வரும் என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவில் நடத்தப்பட்ட சோதனையில், பரம்பரை நோய்கள், கடுமையான நோய் பாதிப்பு இல்லாதவர்கள் எக்ஸ்-ரே போன்ற சோதனைகள் எடுக்கும் போது, குறிப்பாக தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் மார்பு பகுதிகளை எக்ஸ்-ரே எடுக்கும் போது அதனால் விபரீத பக்க விளைவுகள் பலவும் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களுக்கு மட்டுமே தொடர்ந்து பரிசோதனைகள் தேவை எனவும் இந்த ஆய்வின் மூலம் டாக்டர் அறிவுறுத்தி உள்ளனர்.

மனதில் கொள்ள வேண்டியவை:

* பரிசோதனைகள் என்பது நோய்களின் அடிப்படையில் மாறுபடுகிறது. இதனால் பரம்பரை நோய்கள் போன்ற நோய்கள் ஏதும் இல்லாத போது தானாகவே சென்று பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்வது புதிய நோய்க்கான ஆபத்தை வழியச் சென்று தேடிக் கொள்வதற்கு சமம்.* வருடாந்திர மருத்துவ பரிசோதனை என்பது ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையற்றது.* சிடி ஸ்கேன் போன்ற சோதனைகள் செய்து கொள்ளும் போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

-தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *