அரசியல், உலகம்

பாகிஸ்தானை இம்ரான் கான் காப்பாற்றுவார்; நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷம்

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் என குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தன.

ஆனால் அது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காசின் கானால் நிராகரிக்கப்பட்டது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தின.

இதற்கு மத்தியில், நாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டில் இருந்தபடி உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தனது ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதால் ஆட்சியை கலைக்க வேண்டும். யார் ஆட்சி நடைபெற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும் என்று இம்ரான் கான் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த நகர்வுகள் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சூழலில், நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த இம்ரான் கானின் கட்சியினர், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் பாகிஸ்தானை இம்ரான் கான் காப்பாற்றுவார். அமெரிக்காவின் நண்பராக இருப்பவர் ஒரு துரோகி என கோஷங்களை எழுப்பி அவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *