அரசியல், உலகம்

பாகிஸ்தான்: எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவிய கூட்டணிக் கட்சி… பெரும்பான்மையை இழந்த இம்ரான் கான் அரசு

இம்ரான் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த MQM கட்சி, தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசின் பலம் 164-ஆகக் குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே பாகிஸ்தானில், பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பலரும் போர்க்கொடி தூக்கினர். மேலும் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இது தொடர்பாக இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த நிலையில், இம்ரான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த MQM கட்சி, தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசின் பலம் 164 எனக் குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 இடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 வேண்டும் என்ற நிலையில், MQM கட்சியின் ஆதரவை இம்ரான் கான் அரசு இழந்ததால் அதன் பலம் 164 -ஆகக் குறைந்தது. இதுமட்டுமல்லாமல், MQM கட்சி தங்களின் ஆதரவை, இம்ரான் கான் அரசின் எதிர்க்கட்சியான, பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அளித்ததால், தற்போது நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பலம் 177-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை முதல் ஏப்ரல் 3 தேதி வரை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை இழந்ததால், இம்ரான் கான் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை எதிர்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *