அரசியல், தமிழ்நாடு

பா.ம.கவின் தலைவராக அன்புமணி ராமதாஸ்: கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா?

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இது அக்கட்சிக்குப் புத்துயிர் ஊட்டுமா?

சென்னை திருவேற்காட்டில் சனிக்கிழமையன்று நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பா.ம.கவின் இளைஞரணித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

1989ல் டாக்டர் எஸ். ராமதாஸால் துவக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தீரனும் அதற்குப் பிறகு எடப்பாடி கணேசனும் இருந்தனர். இந்த நிலையில், 1998ஆம் ஆண்டு முதல் ஜி.கே. மணி அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அக்கட்சியின் வரலாற்றில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் ஜி.கே. மணிதான். ஆறு மக்களவைத் தேர்தல்களையும் ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களையும் இவரது தலைமையில்தான் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொண்டிருக்கிறது.

2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கட்சிக்குப் புதிய தலைவரை நியமிக்க அக்கட்சி முடிவுசெய்தது. அதன்படி, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸை புதிய தலைவராக நியமிக்க சென்னையில் கூடிய அக்கட்சியின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்று வருகிறது. 1991ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு இடம், 1996ல் நான்கு இடங்கள், 2001ல் 20 இடங்கள், 2006ல் 18 இடங்கள், 2011ல் மூன்று இடங்கள் என வெற்றிபெற்றுவந்த பாட்டாளி மக்கள் கட்சி, 2016ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டும் ஒரு இடத்தைக்கூட பெறவில்லை. இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த அக்கட்சி ஐந்து இடங்களுடன் தற்போது தமிழக சட்டப்பேரவையில் செயல்பட்டுவருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, 1998ல் நான்கு இடங்கள், 1999ல் ஐந்து இடங்கள், 2004ல் ஐந்து இடங்கள் என வெற்றிபெற்ற அக்கட்சி 2009ல் ஒரு இடத்தையும் பெறவில்லை. பிறகு மீண்டும் 2014ல் ஒரு இடத்தைப் பெற்ற அக்கட்சி 2019ல் ஒரு இடத்தையும் பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *