ஆரோக்கியம், கட்டுரை, மருத்துவம்

பித்தப் பையில் கல் உண்டாவது ஏன்?

Gal blader problem

மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது.

பித்தநீர்ச் சுரப்பு

நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000-த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை. 97 சதவீதம் நீரும், 1 சதவீதம் பித்த நிறமிகளும், 1 முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன.

கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளைக் குழாய் வழியாகக் கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் (Gall bladder) பித்தப்பையினுள் அது செல்லும். அப்போது பித்தப்பையானது பித்தநீரைப் பெற்றுக்கொண்டு, அதன் அடர்த்தியை அதிகரித்து, உணவு செரிமானத்துக்குத் தயாராக வைத்திருக்கும்.

நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையை விட்டுப் புறப்பட்டதும், `பித்த நீர் தேவை’ என்று நரம்புகள் வழியாக ஒரு சமிக்ஞை பித்தப் பைக்கு வந்து சேரும். உடனே பித்தப்பையானது, தன்னைத்தானே சுருக்கி, பித்தநீரைப் பித்தக் குழாய்க்குள் அனுப்பிவைக்கும். அது நேராக முன்சிறுகுடலுக்கு வந்து, உணவுக் கூழில் உள்ள கொழுப்பைச் சரியாகச் செரிக்க வைக்கும்.

பித்தநீர்க் கற்கள்

சாதாரணமாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும்தான் கற்கள் உருவாகின்றன. ஏன்? பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும். பித்த உப்புகள் என்பவை கொழுப்புத்தன்மை வாய்ந்தவை. அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும்.

இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும். கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.

காரணம் என்ன?

1. உடல் பருமன்

2. அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.

3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.

4. பரம்பரைக் கோளாறு.

5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.

6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.

7. மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.

8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.

9. ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.

10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.

11. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.

12. அடிக்கடி விரதம் இருப்பது.

13. கர்ப்பம்.

14. முறையான உடற்பயிற்சி இல்லாதது.

15. ‘சிக்கில் செல்’ ரத்தசோகை.

வகைகள்

பொதுவாகப் பித்தப்பைக் கற்களில் காணப்படும் வேதிப்பொருளை வைத்து இக்கற்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு மிகுவதால் உண்டாகும் கற்களுக்குக் ‘கொழுப்புக் கற்கள்’ அல்லது ‘கொலஸ்ட்ரால் கற்கள்’ என்று பெயர். இது பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே இருக்கும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இது காணப்படும். அடுத்தது, கறுத்த நிறமிக் கற்கள். இவ்வகை கற்கள் கறுத்த நிறமுடையவை. கால்சியம் கார்பைடால் இவை உருவாகின்றன. கடைசி வகைக்குக் கலப்படக் கற்கள் என்று பெயர். பெரும்பாலான பித்தப்பைக் கற்கள் கலவைக் கற்களால் ஆனவையே.

கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிருபினேட் போன்றவற்றால் உருவானவை. இவை எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும், பித்தக் குழாயை விரைவில் அடைத்துப் பிரச்சினைகளை உருவாக்கும். சுமார் 80 சதவீதம் பேருக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.

இங்குக் கற்களின் வகை குறித்துப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. குறிப்பிட்ட நபருக்கு எந்த வகை கல் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் அந்தக் கல்லுக்குரிய வேதிப்பொருட்கள் அதிகமுள்ள உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் பித்தப்பைக் கற்களை மீண்டும் வரவிடாமல் தடுத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே உள்ள கற்களை, இன்னும் அதிகம் வளர விடாமலும் தடுத்துக்கொள்ள முடியும்.

அறிகுறிகள்

பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை. இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுத்துவது அடுத்த வகை. மூன்றாவது வகையானது, வலது புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள்பட்டைவரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும்.

முக்கியமாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் அழற்சியை ஏற்படுத்துமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப்புறம் வரும். பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்துவிடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும். இதற்கு ‘அடைப்புக் காமாலை’ என்று பெயர். சில பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. வேறு பாதிப்புகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது, பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவரும்.

பரிசோதனைகள்

வயிற்றை ‘அல்ட்ரா சவுண்ட்’ அல்லது சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்து பித்தக் கற்களின் எண்ணிக்கை, அளவு, பித்தப்பையில் வீக்கம் உள்ளதா, கற்கள் பித்தப்பையை அடைத்துள்ளதா, கல்லீரலைப் பாதித்துள்ளதா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

சாதாரணமாக வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் பித்தப்பைக் கற்களில் 10 சதவீதம் மட்டுமே தெரியும். அதேநேரத்தில், பித்தநீரில் கரைகிற ஒரு சாயக் கரைசலை மாத்திரை வடிவில் வாய்வழியாக உட்கொள்ள வைத்து, வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் இந்தக் கற்கள் இருப்பது தெளிவாகத் தெரியும்.

இவை தவிர, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் ‘கோலாஞ்சியோகிராபி’ (Cholangiography) எனும் பரிசோதனைகள் மூலமும் இவற்றைக் கண்டறியலாம். இதுதவிர, ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனைகளை மேற்கொண்டு பித்தப்பைக் கற்களால் கல்லீரலின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை என்ன?

சிறிய அளவில் உள்ள பித்தப்பைக் கற்களை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் கரைக்கலாம். சற்றுப் பெரிய அளவில் உள்ள கற்களை உடைத்து (Lithotripsy) வெளியேற்றலாம். என்ற போதிலும் ‘பித்தப்பை நீக்கம்’ (Cholecystectomy ) எனப்படும் அறுவை சிகிச்சை பித்தப்பைக் கற்களைத் தடுப்பதற்குச் சிறந்த வழி. பித்தப்பையை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைகளில் ‘லேப்ராஸ்கோப்பி’ அறுவை சிகிச்சை முக்கியமானது. இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட அடுத்த நாளில் வீட்டுக்குத் திரும்பி விடலாம். அடுத்த ஒரு வாரத்தில் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ள முடியும்.

இப்போது இதற்கு எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சை செய்யும் நவீன முறை அறிமுகமாகியுள்ளது. ‘ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ்கோப்பி’ (SpyGlass cholangioscopy) என்று அதற்குப் பெயர். இந்த முறையில் பித்தப்பையை நீக்காமல், பித்தப்பைக் கற்களை மட்டுமே அகற்றுகிறார்கள்.

இது அடைப்புக் காமாலை உள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் தருகிறது. வாய்வழியாக இந்தக் குழாயை உள்ளே அனுப்பி உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல்…. ஆகியவற்றை எல்லாம் கடந்து, பித்தக் குழாய் வழியாகக் கற்கள் உள்ள பித்தப்பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களை (Electrohydraulic lithotripsy) செலுத்தி, அந்தக் கற்களை நொறுக்கி, அவற்றின் துகள்களை உறிஞ்சி வெளியில் எடுத்துவிடுகிறார்கள். இதனால் பித்தநீர்ப் பாதை சரிசெய்யப்படுகிறது. மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகிவிடுகிறது.

பித்தப்பை அழுகிய நிலையில் சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் போன்ற உறுப்புகளோடு அது ஒட்டிக்கொள்ளும் நிலைமையில் நோயாளி சிகிச்சைக்கு வந்தார் என்றால், அப்போது பித்தப்பைக் கற்களையும் பித்தப்பையையும் நீக்குவதற்கு வயிற்றைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதுதான் நல்லது.

பித்தப்பையை நீக்கினால் பிரச்சினையா?

“பித்தப்பையை நீக்கிவிட்டால் பித்தநீர் சுரக்காது. பிறகு உணவு சரியாகச் செரிமானம் ஆகாது” என்று பல பேர் தவறாக நினைத்துப் பித்தப்பையை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர். உண்மை என்னவென்றால், கல்லீரலில் மட்டுமே பித்தநீர் சுரக்கிறது. அது பித்தநீர்க் குழாய் மூலமாக முன்சிறுகுடலை வந்தடைகிறது. அதற்கு முன்பு அது பித்தப்பையில் தங்கிச் செல்கிறது, அவ்வளவுதான். பித்தப்பையை நீக்கியவர்களுக்குப் பித்தநீரானது நேரடியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேர்ந்துவிடும். இவர்களுக்கு உணவுச் செரிமானம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. பித்தநீருக்குக் கல்லீரல் என்பது பிறந்த வீடு. பித்தப்பை என்பது விருந்தினர் வீடு. விருந்தினர் வீடு இல்லாவிட்டாலும், இனிதாக வாழ முடியும் அல்லவா? அதுமாதிரிதான். பித்தப்பை இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம். என்ன…. ஒரே ஒரு நிபந்தனை. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்,
டாக்டர் கு. கணேசன் – பொதுநல மருத்துவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *